Header Ads



முஸ்லிம் மாணவிக்கு சிங்களப் பாடசாலையில் சிறந்த வரவேற்பு


அம்பாறை பிரதான நகரிலுள்ள பண்டாரநாயக்க பெண்கள் தேசிய பாடசாலையில் மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவி பாத்திமா அஸ்லினுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட நிகழ்வு பாடசாலை அதிபர் ஷூயானி விஜேகோன் தலைமையில் நடைபெற்றது.


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டிலும் இரண்டாம் மொழி (சிங்களம்) பேச்சுப் போட்டியில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகி வடக்கு, கிழக்கில் இம்முறை பேச்சுப் போட்டியில் திறமைச் சான்றிதழ் பெற்ற ஒரேயொரு மாணவியான இவர், கிழக்கு மாகாணத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


அம்மாணவிக்கு அம்பாறை பண்டாரநாயக்க பெண்கள் தேசிய பாடசாலையில் சிங்கள மாணவர்களுக்கு மத்தியில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், சிங்கள மாணவர்கள் மத்தியில் ‘தாய்நாட்டின் அற்புதங்கள்’ என்ற பேச்சை நிகழ்த்திக் காட்டினார். இதேவேளை சிங்கள மாணவர்களால் வழங்கப்பட்ட ‘குழந்தைகளே எதிர்காலத் தலைவர்கள்’ என்ற பிறிதொரு தலைப்பிலும் இம்மாணவி சிங்கள மொழியில் உரையாற்றினர்.


மாணவி பாத்திமா அஸ்லினின் உரையை பாடசாலையின் அதிபர் பாராட்டிப் பேசியதோடு, தமிழ்மொழி மூலமான முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்று சிங்கள மொழியில் இவ்வாறான சாதனையை நிகழ்தியது இனநல்லுறவுக்கு சிறந்த முன்மாதிரியாகும் என்றும் தெரிவித்தார்.


சாதனை மாணவி பாத்திமா அஸ்லின் மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலையில் தரம் 08 இல் கல்வி கற்று வருகின்றார். கல்வியில் திறமையை வெளிக்காட்டி வரும் இவர் வலயமட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்ட போட்டிகள் பலவற்றிலும் பங்குபற்றி சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.


இவர் மருதமுனையைச் சேர்ந்த அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் கிராம சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றும் திருமதி எம்.ஐ.பாத்திமா ஷர்மதா ஆகியோரின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஏ.எல்.எம்.ஷினாஸ் 

1 comment:

  1. சாதனை மாணவி பாத்திமா அஸ்லினுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும். இந்த பிள்ளையின் அபார திறமையைப் பாராட்டிய அம்பாறை பண்டாரநாயக்கா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர்,இந்தப் பிள்ளையின் ஆற்றலைச் சரியாக மதிப்பிட்டுள்ளார். சமூகங்களுக்கிடையில் நல்லுறவைப் பேணி வளர்க்கும் வகையில் இது போன்ற பல ஆயிரம் பெண்பிள்ளைகள் எமது சமூகத்தில் உருவாக வேண்டும் என நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.