பௌத்த சமூகத்தினுள் சமூகக் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி - தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரல்
பௌத்த மதம் தொடர்பில் தவறான சித்தாந்தங்களை பரப்பும் குழுக்களின் சம்பவங்களை அடுத்து, இலங்கையிலுள்ள மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் (மகாநாயக்க தேரர்கள்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூட்டாக இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
பௌத்த தத்துவம் மற்றும் கலாசார விழுமியங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து கவலை தெரிவித்த பிரதம பீடாதிபதிகள், இந்தக் குழுக்களின் செயற்பாடுகளை இனியும் கண்டுகொள்ளப்படாத சம்பவங்களாக ஒதுக்கிவிட முடியாது என வலியுறுத்தியுள்ளனர்.
மகாநாயக்க தேரர்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு அப்பால் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, 'தர்ம சிதைவுகள்' மற்றும் 'சாசன சிதைவுகள்' என குறிப்பிடப்படும் பௌத்த கோட்பாடுகள் மீண்டும் மீண்டும் சிதைவதைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குமாறு வலியுறுத்தினர்.
பௌத்த சமூகத்தினுள் சமூகக் குழப்பங்களை ஏற்படுத்தி சமூக ஊடகங்கள் ஊடாக இவ்வாறான திரிபுபடுத்தல்களை ஊக்குவிக்கும் நபர்களை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட நடவடிக்கைகளை உருவாக்க வேண்டிய அவசரத்தை அவர்கள் எடுத்துரைத்தனர்.
Post a Comment