Header Ads



உலக விவகாரங்களை அணுகுவதில், முக்கிய பாத்திரமாக உருவெடுத்திருக்கும் சவூதி - இலங்கையுடனும் உறுதியான உறவு


- காலித் ரிஸ்வான் -


2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அரசியல் சீரமைப்புகளை செய்து, கனிசமான உலகளாவிய உச்சிமாநாடுகள் மற்றும் அதி முக்கிய நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி நடாத்தி வருவதிலிருந்து சவூதி அரேபியா உலக அரசியல் அரங்கில் ஒரு முக்கிய இராஜதந்திர கதாப்பாத்திரமாக உருவெடுத்துள்ளமை யாவரும் அறிந்ததே. 


சர்வதேச இராஜதந்திர விவகாரங்களில் சவூதி அடைந்துள்ள இந்த குறிப்பிடத்தக்க உயர் நிலையானது சவூதியின் வளர்ந்து வரும் பூகோள அரசியல் செல்வாக்கிற்கு ஒரு சான்றாக இருப்பது மட்டுமல்லாது, அதன் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளில் புதியதொரு மறுமலர்ச்சியையும் அடையாளம் காட்டியுள்ளது.


கடந்த ஆண்டுகளில் தோன்றிய பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல், பொருளாதாரம் சார் மற்றும் இதர சிக்கல்களை சீர்செய்யும் நோக்கில் சவூதி அரேபியா அர்ப்பணிப்புடனும் வேகமாகவும் செயற்பட்டு வந்ததோடு, சர்வதேச நெருக்கடிகளை நிர்வகித்தல் மற்றும் பல்வேறு வகையான உலகளாவிய பிரச்சினைகளின் போது பல பேச்சுவார்த்தைகளை தொடங்கி நடாத்துவதிலும் அதன் ஆர்வத்தை வெளிப்படுத்தியமை அரசியலை ஆராயும் எவரும் மறுக்கமுடியாத நிதர்சன உண்மையாக இருக்கிறது.


போர் பிரதேசங்களில் சிக்குண்ட மக்களை அப்பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பாக மீட்பதில் இருந்து அம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலிருந்து முரண்பட்ட நாடுகளிடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வழிசெய்து அவற்றுக்கு தலைமை தாங்குவது போன்ற முன்மாதிரியான விடயங்களை சவூதி மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த செயற்பாடுகள் மூலம் முன்கூடிய ராஜதந்திரத் திட்டமிடல் மற்றும் அவற்றை சிறப்பாக கையாள்தல் போன்ற விவகாரங்களில் நாங்கள் திறமையானவர்கள் என்பதை அந்நாட்டு அரசியல் பாத்திரங்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.


மாறிவரும் கூட்டணிகள் மற்றும் அதிகரித்து வரும் சர்வதேச அரசியல் சவால்களுடன் கூடிய சூழ்நிலையில், முக்கியமான பேச்சுவாரத்தைகளுக்கான அழைப்பாளராகவும் சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதில்  மத்தியஸ்தராக செயற்பட்டதும் சவூதி அரேபியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வ தேசங்களுடனுமான தனது ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அந்நாட்டின் அவாவையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இவ்வாறான குறிப்பிடத்தக்க இராஜதந்திர முயற்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட சவூதி அரேபிய இராச்சியம், சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும் ஒரு மையப்புள்ளியாக உருவெடுத்திருக்கிறது. 


கடந்த 2023ம் ஆண்டு முழுவதும், சவூதி அரேபிய இராச்சியம் குறிப்பிடத்தக்க சர்வதேச உச்சிமாநாடுகளை நடத்தியது. ஆகஸ்ட் மாதம், உக்ரேனிய நெருக்கடி பற்றிய கலந்துரையாடலுக்காக சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை வரவழைத்து ஜித்தா நகரில் ஒரு உச்சி மாநாட்டை நடாத்தியது. வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக் கவுன்சில் (GCC) மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) ஆகியன தங்கள் தொடக்க உச்சிமாநாட்டை அக்டோபர் மாதத்தில் சவூதியில் நடாத்தியது. காசாவின் போர் நிலைமைக்கு தீர்வுகாணும் வகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிவர்த்தி செய்ய நவம்பர் மாதம் ரியாத் நகரில் ஒரு அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டைக் கூட்டியது. இதைத் தொடர்ந்து சவூதி-ஆபிரிக்க உச்சிமாநாடு நடைபெற்றது, மேலும் கடந்த ஆண்டு இறுதிப் பகுதயில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சவூதிக்கான விஜயத்தைத் தொடர்ந்து ஒரு முக்கிய சவுதி-ரஷ்ய உச்சிமாநாடு நடைபெற்றது. 


சூடானில் சவூதி முன்னெடுத்த மீட்புப் பணி


சூடானில் உள்நாட்டு பிரச்சனைகளால் ஏற்பட்ட பதட்ட நிலையின் போது சவூதி அரேபிய தனது கடற்படையை பயன்படுத்தி மேற்கொண்ட மீட்புப்பணி உலகளவிலும் பாராட்டப்பட்டது. சூடானிய ராணுவம் மற்றும் RSF குழுவினருக்கிடையலான மோதலுக்கு மத்தியல் 184 சவூதி அரேபியர்கள் உட்பட 100 நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் அந்நாட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக சவூதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. இதில் 32 இலங்கையர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகளவில் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாக விவரிக்கப்பட்டது.


வளைகுடா மற்றும் மத்திய ஆசிய உச்சி மாநாடு


அரசியல் சார் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில், வளைகுடா நாடுகளின் கூட்டுறவுக் கவுன்சில் (GCC) மற்றும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் (C5) தலைவர்களை இணைத்து ஜூலை மாதம் ஜித்தா நகரில் சவூதி ஒரு உச்சிமாநாட்டை நடாத்தியது. 


இவ்வுச்சிமாநாடு இரு தரப்பினரிடையே மூலோபாயங்களை வகுத்தல் மற்றும் அரசியல் சார் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றை வலியுருத்தும் வகையில் அமைந்ததோடு பாதுகாப்பு, பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டாண்மைகளை வளர்ப்பது போன்றவற்றையும் வலியுறுத்தும் வகையிலும் அமைந்தது.


ரஷ்ய உக்ரைன் மோதல் விவகாரம் குறித்த ஜித்தா சந்திப்பு 


ஆகஸ்ட் மாதம், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஜித்தா நகரில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சவூதி அமைச்சரவையின் உறுப்பினரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான டாக்டர் முஸயத் அல்-ஐபான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் கலந்துகொண்டனர்.


வளைகுடா மற்றும் ஆசியான் உச்சிமாநாடு


16 வளைகுடா மற்றும் ஆசிய நாடுகளின் தலைவர்கள் வரலாற்றில் முதன் முறையாக ஒக்டோபர் மாதம் ரியாத் நகரில் சந்தித்தனர். 2024-2028 ஆம் ஆண்டிற்கான ஒரு கூட்டு செயல் திட்டம், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கும், இரு பிராந்தியங்களின் நலன்களுக்காகவும் தொடங்கி வைக்கப்பட்டது.


சவூதி-ஆபிரிக்க உச்சிமாநாடு


சவூதி அரேபியா தனது சுறுசுறுப்பான வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்தும் விதத்தில் , நவம்பர் மாதம் ரியாத் நகரில் சவூதி-ஆபிரிக்க உச்சிமாநாட்டை நடத்தியது. 


இரு நாடுகளுக்கிடையிலுமான வளரச்சியில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை மேம்படுத்துதல் மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்காக கொண்டு இரு கண்டங்களுக்குமிடையிலான ஒருங்கிணைப்புக்கான அடித்தளங்களை அமைப்பதில் இரு தரப்பினரின் உறுதியுடனும் அவ்வுச்சிமாநாடு நிறைவடைந்தது.


சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான், உச்சிமாநாட்டின் போது ஆப்பிரிக்காவில் மன்னர் சல்மான் மேம்பாட்டு முன்முயற்சித் திட்டத்தை நிறுவுவதாக அறிவித்தார், இது ஆபிரிக்க கண்டம் முழுவதும் பத்து ஆண்டுகளுக்குள் ஒரு பில்லியன் டொலர் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை  நிறுவுவதை நோக்கமாகக் கொண்டமைக்கப்பட்டது.


அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு 


காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து நிலைமையின் உக்கிரம் காரணமாக, நவம்பர் மாதம் ஒரு அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டிற்கு சவுதி அரேபியா அழைப்பு விடுத்தது. ரியாத் நகரில் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில் 57 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றதோடு, காசா மீதான இஸ்ரேலிய முற்றுகையை தகர்ப்பது, போரை நிறுத்துவது மற்றும் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


சவுதி-கரீபியன் உச்சிமாநாடு 


சவூதி அரேபியா கரீபியனினருடனான (CARICOM) தனது முதல் உச்சிமாநாட்டை நவம்பர் மாதத்தில் நடாத்தியது. சவூதி விஷன் 2030 திட்டத்தோடு அமைந்த வகையில் பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், எரிசக்தி, சுற்றுலா மற்றும் பிற துறைகளில் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இவ்வுச்சிமாநாடு நடைபெற்றது. 


பரஸ்பர நலன்கள் மற்றும் நட்பு உறவுகளை முக்கித்துவப்படுத்தி, கல்வி, சுகாதாரம், கடல்சார் ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு, தளவாடங்கள், உணவுப் பாதுகாப்பு, மற்றும் சுற்றுலாப் பொருளாதாரம் உட்பட பல துறைகளில் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான வழிகளை ஆராயும் முகமாக சவூதி-கரீபியன் கூட்டு அறிக்கையொன்றும் இம்மாநாட்டின் போது வெளியிடப்பட்டது.


சவூதி-ரஷ்ய உச்சி மாநாடு 


2023 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சவூதி அரேபியாவிற்கு இராஜதந்திர விஜயமொன்றை மேற்கொண்டு பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானோடு பல கட்ட சந்திப்புகளை நடாத்தினார். இருதரப்புக்குமான பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் சர்வதேசம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 


பாலஸ்தீனப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இரு நாடுகளும் வலியுறுத்தியதோடு இரு நாடுகளின் நலன் கருதியும் எடுக்கப்படும் சர்வதேச தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே பாலஸ்தீனத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட முடியும் என்று கருத்துத் தெரிவித்தனர். 


சவூதி-ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இருதரப்பும் இணங்கியதோடு உலகளாவிய எண்ணெய் சந்தைகளை ஸ்திரப்படுத்த OPEC க்குள் இருக்கும் நெருக்கமான ஒத்துழைப்பைப் பாராட்டினர்.


சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு


சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளையும் தாண்டி, பாரம்பரியமாக புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஹஜ் உம்ரா விவகாரங்களின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட இத்தகைய வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் சார் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 


விஷன் 2030 என்ற இலட்சிய திட்டத்துடன் சர்வதேச அரங்கில் முன்னணிப் பாத்திரத்தை சவூதி அரேபியா வகிக்கும் நிலையில், இலங்கையும் தற்போது சவூதியுடனான பன்முக உறவுகளை மேம்படுத்தி அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் உறவுகளைப் பலப்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறது. 


இந்த நிலையில், சவூதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கான முதலாவது இருதரப்பு அமைச்சர்களின் விஜயமானது சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ பைசல் பின் பர்ஹான் அவர்கள் இலங்கைக்கு மார்ச் 2022 இல் விஜயம் செய்ததில் இருந்து ஆரம்பமானது. கடந்த மார்ச் 2022 முதல் ஜூன் 2023 இற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் இருந்து சவூதிக்கு 7 அமைச்சர்கள் விஜயம் செய்துள்ளனர். இதில் ஜனவரி 2023 இல் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரியின் விஜயமும் அடங்கும்.


இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின் முதலாவது அமர்வில் பங்கேற்பதற்காக 2023 மே மாதம் 21-22 ஆம் திகதிகளில் சவூதிக்குவிஜயம் செய்திருந்தார். இதன்போது இராஜாங்க அமைச்சர் அவர்கள் சவூதி அரேபிய வெளியுறவுத் துறையின் துணை அமைச்சரான கௌரவ வலீத் அல் கெரிஜியை சந்தித்து அரசியல் ஆலோசனைகளுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.


அப்போதைய சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தலைமையில் சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுக் குழுவை இலங்கை பாராளுமன்றம் நிறுவியமையும் குறிப்பிடத்தக்கது.


சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் கௌரவ பைசல் எப்.அலி இப்ராஹிம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்த 2023 நவம்பர் 27 அன்று சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது, ​​ஆடை உட்பத்தி மற்றும் சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் சவூதி அரேபியாவின் தீவிர ஆர்வத்தை அமைச்சர் பைசல் எப்.அலி இப்ராஹிம் தெரிவித்தார்.


2023ஆம் ஆண்டு மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான  கூட்டு ஆணையத்தின் முதல் அமர்வு இடம்பெற்றது, இதன் போது பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட 20 வெவ்வேறு துறைகளின் கீழ் ஒத்துழைப்பை நிறுவுவதற்காக 63 விடயங்கள் அடையாளம் காணப்பட்டன. 


இலங்கையும் சவூதி அரேபியாவும் இடையில் கடந்த 2022-23 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சில இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.


சவுதி அரேபியா மேம்மபாடுகளுக்கான சவூதி நிதியம் (SFD) மூலம் மென்-கடன் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 455 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. கடன்களை மறுசீரமைப்பதற்கான தளங்களில், பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கைக்கு உதவுவதில் சவூதி அரேபியா முன்னனி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


2023 ஆம் ஆண்டில் 63000 இலங்கையர்களுக்கு சவூதியில் வேலை வாய்ப்புகளை வழங்கி சவூதி அரேபியா முன்னனி வகித்தது. ஒவ்வொரு ஆண்டும், 200,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய இலங்கையை விட்டும் வெளியேறுகிறார்கள். கடந்த ஆண்டில் நிலவிய நிதி நெருக்கடியிலிருந்து மீள நாட்டிற்கான அந்நியச் செலாவணியினை ஈட்டித் தந்த முக்கிய அடிப்படையாக இது இருந்தமை மறுக்க முடியாத உண்மையாகும்.


ஆகவே இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையில் நிலவி வரும் இருக்கமான உறவானது மேலும் பல முன்னேற்றகரமான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த பரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் அமையும்.




No comments

Powered by Blogger.