Header Ads



ஜனநாயகத்தின் பெறுமதி ஆபத்தில் வீழ்ந்துவிடும் அபாயம்


 அதிக வரையறைகளை விதிக்கும், தௌிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.


அவை முதலீடுகளையும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும் எனவும் அவர் முன்னெச்சரிக்கை  விடுத்துள்ளார்.


நேற்று (24) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில்  X தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


இந்த சட்டத்திருத்தம் மூலம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சிவில் சமூகமும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அடங்கலாக பிரதான தரப்பினர் முன்வைத்த முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அமெரிக்கா கவலையடைவதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஜனநாயகத்தின் பெறுமதி ஆபத்தில் வீழ்ந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.


வௌிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை வழங்குமாறும்,  சட்டங்களை வகுக்கும் போது மக்களின் குரலை முடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.