பலஸ்தீனத்தில் நிகழ்த்தப்படும் அரக்கத்தனத்தை தடுக்க முடியாத சர்வதேசத்தில் எமக்கு என்ன கிடைக்கப் போகின்றது..? ரவூப் ஹக்கீம்
"சர்வதேச உறவுகளில் முஸ்லிம் சமூதாயம்" என்ற தலைப்பில் உரையாற்றச் சொன்னார்கள். இன்று எமக்கு ஏன் சர்வதேச உறவு ?என்று கேட்கத் தோன்றுகின்றது.பலஸ்தீனத்தில் நடக்கின்ற அரக்கத்தனமான தாக்குதல்களைத் தடுக்க முடியாத சர்வதேசத்தில் எமக்கு என்ன கிடைக்கப் போகின்றது ? என்ற அங்கலாய்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படியான அநியாயங்களுக்கு ஆங்காங்கே இன்று துணை போகின்ற சக்திகளோடு உறவாடிக்கொண்டிருக்கின்ற எங்கள் அரசாங்கங்களைப் பற்றி உங்களுக்கு எதற்கு இந்த உறவு என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம். ஏன் ,இந்த அரக்கத்தனமான ,மிலேச்சத்தனமான, எந்த மனிதாபிமானமுமற்ற இந்த நடத்தைகளை கண்டித்து எதுவுமே செய்ய முடியாமல் மௌனித்து போய் இருக்கின்ற ஆட்சியாளர்கள் நிறையப் பேர் இருக்கின்ற உலகில் மனிதநேயம் எங்கே போய் விட்டது என்று இருக்கின்ற ஒரு கட்டத்தில்தான் நாங்கள் எதற்கு இந்த சர்வதேச உறவுகள் ?என்று கேட்கின்றோம்.
முதலில்,இன்று இந்த சியோனிஸ அரக்கர்களுக்கு துணையாக இருக்கின்ற மேலைத்தேய நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.சர்வதேசத்தை ஆட்டி படைத்துக் கொண்டிருந்த வல்லரசுகள் இன்று செய்வதறியாமல் தடுமாறிப் போய் இருக்கின்றன.
20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் செய்யக்கூடிய அநியாயங்கள் அட்டூழியங்கள் அனைத்தையும் செய்து ஈற்றில் வாலை சுருட்டிக் கொண்டு ஓட வேண்டிய நிர்க்கதி நிலைக்கு உள்ளான இந்த அமெரிக்கர்கள், இன்று உக்ரைனில் வேண்டுமென்றே யுத்தத்தையும் உருவாக்கி, அந்த யுத்தத்தினால் இன்று முழு உலகிலும் விலைவாசிகள் அதிகரிக்கின்ற ஓர் ஆபத்தை ஆக்கித்தந்து, இன்னுமின்னும் அந்த யுத்தத்திற்கு கோடிக் கணக்கில் தனது நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாரி இரைத்து, போதாக்குறைக்கு ஈனத்தனமாக, ஈவிரக்கமில்லாமல் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும், பெண்களையும், வயோதிபர்களையும் கொன்று குவிக்கின்ற இஸ்ரேலர்களுக்கு அனைத்து ஆயுத பலத்தை யும் கொடுத்துதவி, இன்னும் இவர்களா ஏக வல்லரசு என்று சொல்லிக் கொள்வது? இவர்களுக்கு உடந்தையாக எவர் இருந்தாலும் எந்த அரசு இருந்தாலும் அவர்களை இறைவனின் சாபம் சும்மா விட்டுவிடாது என்பதையும் நான் இங்கு சொல்லியாக வேண்டும்.
எனவேதான் ,நெருக்கடிகளை சிறுபான்மையினர் எல்லா இடங்களிலும் சந்திக்கின்றோம். சிறுபான்மை என்பதற்காக எங்களை சிறுமை படுத்தி எங்களை ஒடுக்கி ஆள இந்த நவீன யுகத்தில் எவருக்கும் அருகதை கிடையாது. 15ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த மேலைத்தேயம் எங்களுடைய நாடுகளை ஆக்கிரமித்து, வளங்களைச் சூரையாடி ,போதாக்குறைக்கு இந்த நவீன யுகத்திலும் இஸ்ரேல் என்ற பெயரில் ஒரு பலவந்த குடியேற்றத்தின் ஊடாக பயங்கரவாதத்தை மத்திய கிழக்கில் இன்று கட்டவிழ்த்து விட்டு இருக்கின்ற நிலையில் இந்த உலகின் அரசியல் சமன்பாடு தலைகீழாக மாறிக் கொண்டிருக்கின்றது.
பாரத பிரதமர் சார்பிலே ஈரானோடு பேச்சுவார்த்தை நடப்பதாக நேற்றுப் பார்த்தேன். ரஷ்ய அதிபரோடு பேச்சு வார்த்தை நடக்கிறது. இதைத்தான் பாரதம் செய்ய வேண்டும். ரஷ்யாவோடு கூட்டு வைக்க வேண்டாம் என்று அமெரிக்கா சொன்னதையும் கேட்காமல் ,அந்த உறவை பேணுகிறார்கள். இந்த நடுநிலை பேணப்பட வேண்டும். அது மட்டுமல்ல. சீனாவோடும் பகைமை பாராட்ட வேண்டிய அவசியமில்லை. இது "ஆசியாவின் யுகம்" என்று சொல்கின்றார்கள். உங்களுடைய வெளியுறவுத்துறை அமைச்சர் நண்பர் ஜெய்சங்கர் “இந்தியாவும் சீனாவும் கூட்டு சேரவில்லை என்றால், ஆசியாவின் யுகம் சாத்தியமாகாது” என்கிறார்.அவர் யதார்த்தத்தை பேசுகின்றார். அந்த யதார்தத்துக்கு அவர் உயிர் கொடுக்க வேண்டும். இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு இந்தியா சோரம் போய்விடக் கூடாது. ஏன் என்றால் பாரதம் சாமானியமான ஒரு தேசம் அல்ல.
மத்திய கிழக்கில் மாத்திரம் ஏறத்தாழ 10கோடியை அண்மித்த எம்மவர்கள் தொழில் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதில் 60சதவீதத்தினர் தங்களுடைய உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைக்கின்ற இந்த பாரதத்தின் மக்கள். அதில் 20 சதவீதமானவர்கள் தொழில்வாண்மை பெற்றவர்கள்.
; பல்வேறு துறைகளில் தேர்ச்சி அடைந்தவர்கள். 20 சதவீதம் என்பது ஒரு சாமானிய பங்கல்ல. கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள். இன்று மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இவர்கள் உழைத்து அனுப்புகின்ற பணமாக மாத்திரம் 35 பில்லியன் டொலர்கள். வருமானமாக பாரதத்துக்கு வருகின்றது. இப்படி இருக்கின்ற நிலையில் இஸ்ரேலோடு எங்களுக்கு என்ன உறவு தேவை? இத்தனை பிரச்சினைகளுக்கும் மத்தியில் உங்களது நாட்டின் வெளியுறவு கொள்கையை பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதை கிடையாது. ஆனால், சில யதார்த்தங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் குவார்தா என்ற ஒரு துறைமுகம் சீன உதவியோடு கட்டப்படுகின்றது. அதற்கு போட்டியாக இந்தியா ஈரானோடு அங்கு ஒரு துறைமுகத்தை அரேபிய கடலில் அமைப்பதற்கான ஒப்பந்தம் பல வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. செய்து விட்டு இந்த அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின் திருப்திக்காக ஈரானோடு உள்ள உறவுகளை கொஞ்சம் வைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நேற்றுதான் பார்த்து சந்தோசப்பட்டேன். பாரதத்தின் சார்பில் ஈரானுக்கு ஒரு தூதுக்குழு போய் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. அது சாத்தியப்பட வேண்டும். அந்த துறைமுகம் சாத்தியமானால், இன்று சூழவும் கடல் இல்லாமல் நிலத்தினால் சூழப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு நிலவழி மார்க்கம் பாகிஸ்தான் ஊடாக அல்லாமல் ஏற்படலாம். பாகிஸ்தானுக்கு கூட 5 பில்லியன் டொலர் பெறுமதியான இந்திய பண்டங்கள் மத்திய கிழக்கின் ஊடாக போகின்றது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது சாதாரணமான ஏற்றுமதியல்ல. பாகிஸ்தானுக்கும் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக ஏற்றுமதிகள் போகின்றன.
இவை அனைத்துக்கும் ஏதோவொரு வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி வேண்டும் ; ஒற்றுமை வேண்டும். அதனூடாக நிரந்தரமாக முழு உலகமுமே பூகோள மயமாக்கப்பட்ட சந்தையாக மாறுகின்ற போது அதன் நன்மைகள், இன்று தளபதி ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு இந்தியாவின் ஆக கூடிய வெளிநாட்டு முதலீட்டை வசீகரித்துக் கவர்ந்திழுக்கின்ற மாநிலமாக மாறி இருக்கின்றது என்பதை நினைத்து நாங்கள் பெருமை படுகின்றோம். இதை இன்னுமின்னும் வளப்படுத்திக் கொள்வதற்கு இந்த வாய்ப்புக்களை எங்களது வெளியுறவு கொள்கைகள் எங்களுக்கு தர வேண்டும். அதற்காக நாங்கள் அஞ்சி ஒடுங்கி ஓரத்தில் போய் ஒதுங்கி நிற்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.
இலங்கை முஸ்லிம்கள் பட்டிராத பிரச்சினையா? கடந்த 2, 3 வருட காலமாக முழு இலங்கை முஸ்லிம்களும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டோம். ஒரு சிறு கும்பல் செய்த காரியத்திற்காக முழு முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கொண்டு போய் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இங்கு தமிழகத்தில் கோவையில் நடந்ததை போலத்தான். அந்த அநியாயத்திற்குப் பிறகு நிறைய நெருக்கடிகளை சந்தித்தோம். போதாக்குறைக்கு இந்த கோவிட் -19 கொடுந்தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை கூட எங்களின் சமய ஆசாரப்படி நல்லடக்கம் செய்ய முடியாமல் எரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, முழு முஸ்லிம் சமூகமும் அங்கலாய்த்தது. கெஞ்சிக் கேட்டது, அதை எங்களுடைய முன்னாள் ஜனாதிபதி நிராகரித்தன் விளைவு, எங்களின் இறைஞ்சுதலின் பலன் ஈற்றில் ஜனாதிபதி தனது பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு அவசரத்தில் துறைமுகத்திற்குச் சென்று கப்பலிலே ஏறி தப்பி ஓடுகின்ற நிலைமைக்கு மக்கள் எழுச்சி அவரைத் துரத்தியடித்தது.
எனவே துன்புறுத்துகின்ற தலைவர்கள் இருந்தால் அதைப்பற்றி அலட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இறைஞ்சுங்கள். எனவே, மத சார்பற்ற அணி ஆட்சிக்கு வரப்போகின்றது. அவ்வாறு வருகின்ற காலம் தூரத்தில் இல்லை. மாநிலங்கள் மீண்டும் கைகளுக்கு வந்திருக்கின்ற ஒரு சூழல் நிலவுகின்றது. ஆந்திரா, கர்நாடகா , கேரளம், தமிழகத்துக்கும் மாத்திரம்தான் ஆட்சியா என்ற நிலைமை மிக விரைவில் மாறிக் கொண்டு வருகின்றது. எனவே , இந்த அணி வெற்றி பெறும். இந்த வெற்றி பெறுகின்ற அணியில் உங்களுக்கும் உங்களது பங்கை தளபதி தருவார். அதை தருகின்ற போது அவற்றில் இருக்கின்ற முழுப் பயனையும் பொறுப்பையும் இந்த சமூதாய நலனுக்காக மட்டுமல்ல, அயல் நாட்டில் இருக்கின்ற எங்களது நலனுக்காகவும் தளபதி ஸ்டாலின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவருடன் ஏனைய தலைவர்களையும் சேர்த்து செய்வார் என்ற நம்பிக்கையோடு எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
Post a Comment