மத்ரஸா குறித்து ஆராய குழு நியமிப்பு
- பாறுக் ஷிஹான் -
மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பான சம்பவம் தொடர்பில் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் (5) அன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் மாணவன் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டு வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டு மன்றின் உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து தற்போது நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் உள்ளிட்ட இதர தரப்பினரால் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த மத்ரஸா தொடர்பில் அக்குழு துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இவ்விசாரணையை முன்னெடுக்கும் குழுவில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அதிகாரி மற்றும் 4 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 04 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அங்கம் வகிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றினையும் அக்குழுவினர் வெளியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment