இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
நீதிச்செயன்முறை நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் அறிக்கையொன்றின் ஊடாக கோரியுள்ளனர்.
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தன்னிச்சையான கைதுகள், பிடியாணையற்ற பொலிஸ் சோதனைகள் மற்றும் சட்டவிரோத கொலைகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
உரிய நடவடிக்கைகள் மற்றும் சட்டவாட்சியின் முக்கியத்துவத்தை அறிக்கையூடாக வலியுறுத்தியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இந்த சிக்கலை விரைவில் தீர்த்து நீதிமன்ற கட்டமைப்பினூடாக பொதுமக்கள் நம்பிக்கையை வழமைக்குக் கொண்டுவருமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்வதற்கு உள்ள உரிமை, அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உரிய சோதனை பிடியாணை அல்லது சோதனை உத்தரவுகள் இன்றி முன்னெடுக்கப்படும், சொத்துககள் மீதான சேதம் உள்ளிட்ட பொலிஸ் சுற்றிவளைப்புகள், சட்டரீதியான செயற்பாடுகளை மீறுவதாகவும் நீதியின் கோட்பாடுகளுக்கு தீங்கிழைப்பதாகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
போதைப்பொருட்கள் தொடர்பில் சட்ட ரீதியான சேவையை வழங்கிய சில சட்டத்தரணிகளை சூழ்ச்சியாளர்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் தமது கண்டனங்களை வௌியிட்டுள்ளது.
அனைத்து இலங்கையர்களுக்குமான நீதி மற்றும் நீதியான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக சட்டத்தின் ஆட்சியையும் உரிய நடைமுறையையும் உறுதியாக நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானதெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment