Header Ads



சுல்தான் ஜினூஸின் சேவைக்கு நீர்கொழும்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மனதார பாராட்டு



- இஸ்மதுல் றஹுமான் -


    கிராம உத்தியோகத்தர் சேவை என்பது பொலிஸ் சேவைக்கு ஒத்தானது. அச் சேவையை தொடர்ச்சியாக செய்து ஓய்வு பெறுவதென்பது சவாலுக்குரியது. அந்த சவாலை கிராம உத்தியோகத்தர் ஜினூஸ் திறம்பட செய்ததை பாராட்டுகிறேன் என நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி சந்தன ரணசிங்க, 37 வருட கிராம உத்தியோகத்தர சேவையில் 22 வருடங்கள் தொடராக நீர்கொழும்பு பெரியமுல்லை 159 கிராம உத்தியோகத்தர் பிரிவில் சேவை செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் சுல்தான் ஜினூஸை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது  கூறினார்.


     பெரியமுல்லை 159 பிரிவு பிரஜா பொலிஸ் குழுவினால்  சவுண்டஸ் பெலஸ் வரவேற்பு மண்டபத்தில் குழுவின் தலைவர் கிர்ஷான்த தல்பதாது தலைமையில் நடந்த இந்த பாராட்டு விழாவில் புதிதாக  நீர்கொழும்பு பிரதேச செயலாளராக பொறுப்பேற்றுள்ள திருமதி ரசிக்க மல்லவாரச்சி, புதிய கிராம உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ள அருனி லக்மாலி ஆகியோர்களுக்கு வரவேற்கப்பட்டனர்.


     பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரி ரணசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில் கிராம உத்தியோகத்தர் என்பவர் பொலிஸுக்கும் நீதிமன்றத்திற்கும் தேவைப்படும் ஒருவர். இது சிலருக்கு தெரியாது. தேர்தல்கள் இடம்பெறும் போதும் நாம் மேற்கொள்ளும் பல விசாரணை நடவடிக்கைகளுக்கு இவர்களின் சேவை முக்கியமானது.


   தொழிலுக்காகவும் வெளிநாடு செல்வதற்கும் கிராம சேவகரின் நற்சாட்சிப் பத்திரம் தேவை. அவர்களின் கையெழுத்து இல்லாமல் நாம் சான்றிதழ்கள் வழங்கமாட்டோம். அவர்களின் கையெழுத்திருந்தால் அதன் நம்பிக்கையில் நாம் சான்றிதழை கொடுத்துவிடுவோம். காரணம் அவர்கள் அதன் உண்மைத்தன்மையை பொறுப்பேற்றுக்கொண்டுதான் வழங்குவார்கள். யுத்தகாலத்திலும் இந்த செயல்பாடு நடைமுறையில் இருந்தது. சிலர் பிழையான தகவல்களை கொடுது சான்றிதழ்களை பெற்றனர். சில உத்தியோகத்தர்கள் தெரியாத்தனமாக கொடுத்து விட்டு மாட்டிக்கொண்ட சம்பவங்களும் உண்டு. நாம் இன்றும் அவ்வாறு பிழையான தகவலுக்கு சான்றிதல்களை வழங்கிய வழக்கு விசாரணைகளுக்கு செல்கிறோம். உண்மையிலேயே கிராம உத்தியோகத்தர்கள் தெரியாதனத்தில் அவ்வாறு செய்திருக்கலாம்.


  தொழில் கிடைக்காமல் போகும் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்ற நன்நோக்கத்தில் மனித நேய அடிப்படையில் செயல்படுவதுமுண்டு. ஆனால் அதனை பெற்றுக்கொள்பவர்களின் பிழையான செயலால் இவர்கள் சிக்கிக்கொள்கின்றனர்.


   இவ்வாறான நிலமைகளினால் ஒரு கிராம உத்தியோகத்தர் தொடர்ச்சியாக தனது சேவையை உரிய முறையில் செய்வது கடினமானது.

  அந்த வகையில் ஜினூஸ் சிறந்த சேவையை செய்துள்ள ஒருவர். பொலிஸாருடன் மிக நெருக்கமாக செயல்பட்டவர் என்பதை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நான் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்

No comments

Powered by Blogger.