வசீம் தாஜுதீனை கொலை செய்தது யாரென்பது தெரியும்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உரிய நேரம் வரும் போது இந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்துவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சிங்கள தொலைக்காட்சி வலையமைப்பு மீதான தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தமக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
தென்னிலங்கையின் ஆங்கில பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அத்துடன், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுடன் சட்டப் போரில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட முன்னர், தனது காரிலிருந்த குறிப்பு புத்தகத்தில் தன்னை பின்தொடரும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை, லசந்த விக்ரமதுங்க எழுதியிருந்ததாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்தது.
இது முதலில் விபத்து என்று கூறப்பட்டது, எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அது கொலையென தெரியவந்தது.
இந்நிலையிலேயே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார்? என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment