Header Ads



இலங்கை பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக, குஷான் சம்பத் கடமைகளைப் பொறுப்பேற்றார்


இலங்கை பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றார்


இலங்கைப் பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன இன்று (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.


பாராளுமன்றத்தின் 6வது படைக்கச் சேவிதராக கடமையாற்றிய நரேந்திர பெர்னாந்து நேற்று (30) ஓய்வுபெற்ற நிலையில், 07வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.


ஓய்வுபெற்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களினால் புதிய படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (30) முற்பகல் பாராளுமன்ற சபை மண்டபத்தின் வெள்ளிக் கதவுக்கு அருகில் இடம்பெற்றது.


குஷான் சம்பத் ஜயரத்ன அவர்கள் 1994ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையில் பணியாற்றினார். தனது சேவைக்காலத்தில் விசேடமாக அதிவேக தாக்குதல்படைப்பிரிவில்  இணைந்திருந்த அவர் அதற்கு வினைத்திறான சேவையை வழங்கியிருந்தார். இதன் பின்னர் 2007ஆம் ஆண்டு உதவிப் படைக்கலச் சேவிதராக இலங்கைப் பாராளுமன்ற சேவையில் இணைந்துகொண்டதுடன், 2018ஆம் ஆண்டு பிரதிப் படைக்கல சேவிதராக நியமிக்கப்பட்டார். இதற்கு அமைய நேற்று (30) வரை குறித்த பதவியில் அவர் பணியாற்றியிருந்தார்.


குஷான் ஜயரத்ன ஹொரகஸ்முல்ல ஆரம்பப் பாடசாலை மற்றும் கிரிஉல்ல விக்ரமஷீலா தேசிய பாடசாலை ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியைப் பெற்றதுடன், இரண்டாம் நிலைக் கல்வியைக் கொழும்பு நாளந்தக் கல்லூரியில் பூர்த்திசெய்தார். இவர் முகாமைத்துவம் தொடர்பான தனது முதலாவது பட்டத்தை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டதுடன், இலங்கை கடற்படையின் 12வது உள்ளீர்க்கப்பட்ட குழுவின் சிறந்த கடற்படை அதிகாரியாகவும் தேர்ச்சிபேற்றார். அத்துடன், அவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவம் தொடர்பில் முதுமானிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான  முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். விசேடமாக ஜயரத்ன மனிதவள முகாமைத்துவப் பட்டத்தில் குழுவின் முதலாவது மாணவராகவும் தேர்ச்சிபெற்றார். 


அத்துடன், கணினி தொடர்பில் லைசியம் சர்வதேச பாடசாலையிலும், இராஜதந்திரம் மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் டிப்ளோமாக்களையும் பூர்த்திசெய்துள்ளார். மேலும், பங்களாதேஷில் பிரதி லெப்டினட் தொழில்நுட்ப பாடநெறியையும் பூர்த்திசெய்துள்ளார்.


மேலும், குஷான் ஜயரத்ன அவர்கள் ரக்பி மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுக்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.


முன்பள்ளி ஆசிரியையான டிரோஷி பியன்விலவை மணந்துள்ள இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

No comments

Powered by Blogger.