Header Ads



முஸ்லிம்களுக்காக முன்நிற்பதாக, சஜித் அறிவிப்பு


இந்நாட்களில் அமைச்சர்கள் தூக்கமில்லாமல் வேலை செய்வதாகத் தெரிவிக்கப்படுவதாகவும்,நாட்டிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்ட செல்வங்களை மீட்பதற்காக, இந்நாட்டின் நிதி வளங்களை திருடிய தரப்பினரையும்,வளங்களையும் கண்டுபிடித்து அந்த வளங்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் வேலைத்திட்டத்தில் தூக்கமில்லாமல் செயற்படுவதே மிகவும் பொருத்தமானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஒரு கால கட்டத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கையின் உரிமைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் பல்வேறு தரப்பினருக்கு இலங்கைப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,சுபேரி என்ற நபர் அவ்வாறானவர்களில் ஒருவர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர் யார் என்பதை இலங்கை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளதாகவும்,இந்த தீர்ப்புக்கு இணங்க நாட்டிலிருந்து திருடப்பட்ட வளங்களையும் பணத்தையும் திரும்பக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாததில் கலந்து கொண்டு இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து பேசும் தற்போதைய அரசாங்கம்,கொரோனா கோவிட் கால கட்டத்தில் இந்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தகனமா அடக்கமா என்ற  பிரச்சினையைக் கையாண்டது என்றும், இப்பிரச்சினையில் தலையிட்டால் சிங்கள பௌத்த வாக்குகள் பறிபோகும் என்று  கூறி இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும்,ஐக்கிய மக்கள் சக்திக்கு இவ்வாறான கொள்கை கிடையாது என்றும்,நாமெல்லோரும் இலங்கையர் என்ற கொள்கையில் முற்போக்கு தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்த பிரச்சனையில் நடந்து கொள்ள வேண்டிய முறையை உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக கூறியிருந்த போதிலும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் கூட  அவ்வாறே செயற்பட்டனர் என்றும்,ஐக்கிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் மனித உரிமைகளுக்காக முன்நிற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


இன்றைய பாராளுமன்ற சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி சால்வை அணிந்து வந்ததோடு,இந்த மோதலில் இறக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சிவில் சமூகத்தின் உரிமைகளுக்காக தான் இவ்வாறு சால்வை அணிந்து வந்ததாகவும் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இத்தகைய சால்வை அணிந்தது பாலஸ்தீன மக்களுக்கு மட்டுமல்லாது,உலக அமைதிக்கும் கூட என்றும்,இனவாதத்தையும் மதவாதத்தையும் எந்த தரப்பினர் அமுல்படுத்தினாலும் அதை வன்மையாக கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.