இஸ்லாமிய அமைச்சர்களின் குழு, வலியுறுத்திய விடயம்
- காலித் ரிஸ்வான் -
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் தலைமையில், அரபு-இஸ்லாமிய கூட்டு உச்சி மாநாட்டால் நியமிக்கப்பட்ட இஸ்லாமிய அமைச்சர்களின் குழு, சர்வதேச ஊடகங்களுடனான செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது.
அக்குழு உறுப்பினர்கள் காசா பகுதியில் உடனடி போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் நடவடிக்கைகளில் இருந்து அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
காஸாவின் எதிர்காலம் மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினை பற்றிய கலந்துரையாடல் சகலதும் உடனடியான போர்நிறுத்தம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட்ட பின்னரே நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
போர் நிறுத்தம் மற்றும் அவசர மனிதாபிமான தீர்வுகள் குறித்து சர்வதேச சமூகத்தின் வெளிப்படையான கரிசனையற்ற தன்மையை அக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இக் கரசனையற்ற தன்மையானது, உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கும் காஸாவில் மனிதாபிமான நிலைமை மேலும் மோசமடைவதற்கும் வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.
காசாவிற்கு மனிதாபிமான, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் வழங்குவதற்கான நிவாரணப் பாதைகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தியதோடு மனிதாபிமான உதவிகளை சரியான நேரத்தில் அனுப்புவதற்கான எந்த தடைகளையும் இருக்கக் கூடாது எனவும் வழியுறுத்தியுள்ளனர்.
மேலும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் தற்போது முதன்மைப் படுத்தி முன்னுரிமை அளிக்கும் விடயம் பலஸ்தீனிய போர்நிறுத்தமேயாகும் என்று கமிட்டி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் அவர்கள் சர்வதேச சமூகத்தை, குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள், இந்த அவசர விஷயத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறும் அழைப்பு விடுத்தனர்.
அதேசமயம், சர்வதேச சட்டபூர்வமான கொள்கைகளுக்கு இணங்க பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு நம்பகமான மற்றும் அவசரமான திட்டத்தின் உடனடி தேவையை அக்குழுவினர் வலியுறுத்தினர். அத்தகைய திட்டம் பாலஸ்தீன மக்களின் கண்ணியம் மற்றும் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்தோடு இகுழுவானது, இன்று நடைபெற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனான பேச்சுவார்த்தையின் போது உடனடி காசா போர்நிறுத்தத்திற்கான UNSC தீர்மானத்தை தடுத்த அமெரிக்க வீட்டோ மீதான தங்கள் அதிருப்தியை தெரிவித்ததோடு, பொதுமக்களைப் பாதுகாக்க சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களைக் கடைப்பிடிக்கக் கோரி, இஸ்ரேலை அதன் ஆக்கிரமிப்பை நிறுத்த நிர்பந்திக்குமாறும் அமெரிக்காவை வலியுறுத்தியது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் மூலமான பலஸ்தீன மக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டாய இடம்பெயர்வதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர், சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்ட கட்டமைப்பிற்குள் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
Post a Comment