ஜெரூஸலமே...!
என்னுடைய கண்ணீர் காயும் வரை
நான் தேம்பியழுதேன்
மெழுகுவர்த்திகள் அனைத்தும்
உருகி வழியும்வரை
நான் தொழுதேன்
நிலம் பிளக்கும் வரை
நான் சுஜூதில் இருந்தேன்
முஹம்மதைப் பற்றியும்
ஈஸாவைப் பற்றியும்
விசாரித்தேன்
ஓ... ஜெரூஸலமே..
இறை தூதர்களின் நறுமணமே
வானத்துக்கும்
பூமிக்குமிடையிலான
குறுகிய பயணப் பாதையே..
ஓ.. ஜெரூஸலமே..
சட்டத்தின் உறைவிடமே
உனது தெருக்களெல்லாம்
துயரம் தோய்ந்து கிடப்பதென்ன
உனது மினாராக்கள் யாவும்
துக்கம் வழிந்து கிடப்பதென்ன
ஓ.. ஜெரூஸலமே..
உனது இளமை
கருப்பாடை தரித்திருப்பதென்ன
புனித சமாதிகளில்
ஞாயிறுகளில்
மணியொலிக்கச் செய்வது யார்
கிறிஸ்தவத் திருநாட்களில்
சிறுவர்களுக்கு
விளையாட்டுப் பொருட்களைக்
கொண்டுவந்து
கொடுப்பது யார்
இன்ஜீல் பாதுகாக்கப் படுவது
யாரால
குர்ஆன் பாதுகாக்கப் படுவது
யாரால்
ஓ.. ஜெரூஸலமே..
எனது புனித நகரமே..
நாளை நமது எலுமிச்சைகள்
பூக்கும்
நமது எல்லா ஒலிவ் மரங்களும்
கொண்டாட்டத்தில் திளைக்கும்
உனது விழிகள் நடனமிடும்
இடம் பெயர்ந்து சென்றிருந்த
நமது புறாக்கள் அனைத்தும்
உனது புனித கூரைகளுக்கு
மீண்டு வரும்
உனது குழந்தைகள் யாவும்
மீண்டும் விளையாட ஆரம்பிக்கும்
பிள்ளைகளும் பெற்றோரும்
மீண்டும்
உனது அழகிய மலைகளில்
சந்தித்துக் கொள்வார்கள்
எனது புனித நகரமே
சமாதானத்தினதும்
ஒலிவ்களினதும் தேசமே!
----------------------------
நிஸார் கப்பானி
--------------------------
Ashroff Shihabdeen
Post a Comment