Header Ads



இந்திய பாராளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தது யார்..?


நாடாளுமன்றத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்ததற்காக, கைது செய்யப்பட்ட நான்கு நபர்களை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


இவர்களில் இருவர் இன்று (புதன்கிழமை) கேள்வி நேரத்தில் அரங்கின் மாடியில் உள்ள பார்வையாளர் கேலரியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இந்தச் சம்பவம் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு நாளில் நடந்துள்ளது.


ஏஎன்ஐ செய்தி முகமையின் தகவல்படி, பார்வையாளர் கேலரியில் இருந்து குதித்தவர்களின் பெயர்கள் சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சன்.


"அவர்களது பின்னணி குறித்து தகவல்களைச் சேகரித்து வருகிறோம். சாகர் ஷர்மா மைசூரை சேர்ந்தவர். பெங்களூருவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார். மற்றொரு நபரும் மைசூரை சேர்ந்தவர்," என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர்கள் குறித்து மேலும் தகவல்களைப் பெற உளவுத்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையின் குழு அவர்களது வீடுகளுக்கு நேரடியாகச் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்திருந்தார்.


“அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் எந்த அமைப்புடனாவது தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


அவர்களிடமிருந்து கிடைத்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பார்வையாளர் கேலரியை அடைவதற்கு முன்பு அவர்கள் கடந்து சென்ற அனைத்து சோதனைச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன," என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.


நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே வண்ணப் புகை மூட்டம் ஏற்படுத்திய பெண்ணான நீலம் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபர் குறித்த தகவல்களை டெல்லி காவல்துறை பகிர்ந்துள்ளது.


அவர்கள் இருவரையும் டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை கூறுகிறது. அவர்கள் இருவரும், வண்ணப் புகை வெளியிடும் பொருட்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


கைது செய்யப்படுவதற்கு முன்பாக, அந்தப் பெண் “அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுங்கள், சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கோஷமிட்டுள்ளார். அவரது அந்த வீடியோ சமூக ஊடகங்களில், வைரலாகி வருகின்றன.


"நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த நீலம் மற்றும் அமோல் ஆகிய இருவர், செல்போன்களை எடுத்துச் செல்லவில்லை. அவர்களிடம் எந்தவிதமான பை அல்லது அடையாள அட்டையும் இல்லை. அவர்கள் தாங்களே நாடாளுமன்ற வளாகத்தை அடைந்ததாகக் கூறினர். எந்த அமைப்புடனும் தொடர்பு இல்லை என்றும் கூறுகின்றனர்," என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


மக்களவை அரங்கில் குதித்த நபரின் பெயர் மனோரஞ்சன். பிபிசி இணை செய்தியாளர் இம்ரான் குரேஷியின் தகவல்படி, மைசூரில் உள்ள மனோரஞ்சனின் தந்தை தேவராஜு கவுடா, தனது மகனின் செயலை 'கடுமையாகக் கண்டிக்கத்தக்கது' என விமர்சித்துள்ளார்.


தான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது மகன் பொறியியல் படித்திருப்பதாகவும் தேவராஜு கவுடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மனோரஞ்சன் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வந்ததாக அவர் கூறினார்.


"நாடாளுமன்றம் நம்முடையது. இப்படி நடந்தது கண்டிக்கத்தக்கது. நீங்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடலாம். ஆனால் இப்படி செய்யக்கூடாது," என்றார்.


"நாங்கள் பிரதாப் சிம்ஹாவின் தொகுதியில் வசிக்கிறோம். மனோரஞ்சன் ஒரு நல்ல மகன். நாங்கள் அவருக்கு நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்தோம். அவர் இன்று ஏன் இப்படி செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் விவேகானந்தரை நிறைய படித்துள்ளார்.


அவர் சமூகத்திற்கும், ஏழை எளிய மக்களுக்கும் நல்லது செய்ய விரும்பினார். இதை எங்கள் பகுதியில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். அவரைப் பற்றி யாரும் ஒரு கெட்ட விஷயத்தைக் கூற மாட்டார்கள்," என்று மனோரஞ்சனின் தந்தை மேலும் கூறினார்.


பொறியியல் படித்த பிறகு, மனோரஞ்சன் யாரிடமும் வேலை செய்யவில்லை. கோழி, ஆடு மற்றும் மீன் வளர்த்தார். அவர் அடிக்கடி டெல்லி சென்று வந்ததாகவும், ஆனால் அவர் அங்கு என்ன செய்தார் என்று ஒருபோதும் சொல்லவில்லை என்றும் தேவராஜு கவுடா கூறினார்.


கர்நாடக காவல் உதவி ஆணையர் அந்தக் குடும்பத்தினருடன் பேச அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார்.


இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே வண்ணப் புகை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீலம் என்ற பெண்ணை பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.


அவரது குடும்பம் ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் வசிக்கிறது. நீலத்தின் தாய், தம்பி ஆகியோர் நீலம் டெல்லி சென்றது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். வேலை கிடைக்காததால் தனது மகள் மிகவும் வருத்தமாக இருந்ததாக நீலத்தின் தாய் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.


"வேலையில்லாத காரணத்தால் அவள் மிகவும் வருத்தப்பட்டாள். அவளிடம் பேசினேன். ஆனால் டெல்லி சென்றது பற்றி எதுவும் சொல்லவில்லை. இவ்வளவு படித்தும் வேலை இல்லை. ஆகவே இறந்துவிடுவதே மேல்’ என்று என்னிடம் கூறியதுண்டு," என்று நீலத்தின் தாய் கூறினார்.


"நீலம் கைது செய்யப்பட்ட தகவல் எங்களுக்கு எங்கள் அண்ணன் மூலமாகக் கிடைத்தது. அவர் எங்களை அழைத்து தொலைக்காட்சியை பார்க்கச் சொன்னார். நீலம் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்," என்று நீலத்தின் தம்பி கூறினார்.


"அவள் டெல்லி சென்றிருப்பது எங்களுக்குத் தெரியாது. ஹிசாரில் படிப்பதற்காகச் சென்றிருப்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும். அவள் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்து நேற்று மீண்டும் திரும்பினாள். பிஏ, எம்ஏ, பி.எட், எம்.எட், எம்.ஃபில் படித்து, நெட் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் குறித்துப் பலமுறை குரல் கொடுத்துள்ளார். மேலும் விவசாயிகள் இயக்கத்திலும் பங்கேற்றுள்ளார்," என்று அவர் கூறினார்.


நீலத்தின் குடும்பம் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அவரது தம்பி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.