மாவத்தகம சம்பவம் - பதற்றம் தணிந்தது ; எழுவருக்கு விளக்கமறியல்
- ஏ.ஆர்.ஏ. பரீல் -
மாவத்தகம மாஸ்வெவயில் அண்மையில் இரு இனக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி பலியானதையடுத்து அங்கு நிலவிய பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்றதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேர் மாவத்தகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அவர்களில் 73 வயது முதியவர் ஒருவரும் மாற்றுத்திறனாளி ஒருவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஏழு பேர் வாரியபொல விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இரு இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர். இவர்களில் மூவர் 14, 17, 19 வயதுடையவர்களாவர். சந்தேக நபர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்றதையடுத்து அங்கு அது இனக் கலவரமாக மாற்றமடையாது தடுப்பதற்கு மாவத்தகம பொலிஸார உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 3 தினங்கள் சுமார் 500 பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து 7 தினங்கள் பள்ளிவாசல் மற்றும் ஊரின் பிரதான 5 இடங்களில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குறிப்பிட்ட மோதல் வாள்வெட்டுச் சம்பவம் மாஸ்வெவ பள்ளிவாசலுக்கருகில் மைதானத்தில் கடந்த 11 ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விடிவெள்ளி சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் மாஸ்வெவ பள்ளிவாசலின் உபதலைவர் எம்.எஸ்.எம். அக்ரமைத் தொடர்பு கொண்டு வினவியது. அவர் விளக்கமளிக்கையில்,
இப்பகுதியில் நாங்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாக நல்லிணக்கத்துடனே வாழ்ந்து வருகிறோம். நீண்டகாலமாக இருந்து வந்த சிறிய பிரச்சினையொன்று அண்மையில் கிரிக்கெட் போட்டியொன்றில் பூதாகரமாகியுள்ளது. இச்சம்பவத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இப்பகுதியில் வாழ்பவர்கள் கல்வி அறிவில் குறைந்தவர்கள். இவர்களைப் பயன்படுத்தி சிலர் அரசியல் செய்வதற்கும் இன மோதல்களை உருவாக்கவும் முயற்சித்தார்கள். அந்த முயற்சிகளை நாம் முறியடித்து விட்டோம்.
இன்றும் நாம் பெரும்பான்மை இனத்துடன் ஒற்றுமையாகவே இருக்கிறோம். பலியானவரின் 7ஆவது தின சமய ஏற்பாடுகளுக்கு நாங்கள் உதவி செய்தோம். தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தோம். இப்போது எந்தப் பிரச்சினையுமில்லை. போதைப்பொருள் விற்பனை, பாவனையே இங்கு மக்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாவத்தகம பொலிஸார் இரு இனத்தவரையும் அழைத்து கலந்துரையாடலொன்றினை முன்னெடுத்து இரு தரப்பினரும் ஒற்றுமையாக, சமாதானமாக வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். இக்கலந்துரையாடலில் மாஸ்வெவ பள்ளிவாசல் நிர்வாகமும் கலந்துகொண்டது.
மாஸ்வெவ மற்றும் எனேபொல ஆகிய கிராமங்கள் இரண்டும் ஒன்றிணைந்ததாக உள்ளன. மாஸ்வெவயில் 270 குடும்பங்கள் வாழ்கின்றன. இவற்றில் 156 முஸ்லிம் குடும்பங்கள், எனேபொலயில் 256 குடும்பங்கள். இங்கு வாழும் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்கள்.
எனக்கு இப்போது 44 வயதாகிறது. இந்தக் காலத்தில் இவ்வாறான ான பிரச்சினை ஏற்பட்டது. இதுவே முதற் தடவையாகும். நாம் வரலாற்று ரீதியாக ஒற்றுமையாகவே வாழ்கிறோம். பெரும்பான்மையினர் எங்கள் ஜனாஸா வீடுகளுக்கு வந்து செல்வார்கள். அதுபோல் நாம் அவர்களது மரண வீடுகளுக்கு செல்வது வழக்கம்.
வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வசத்த கித்சிறியின் மேற்பார்வையின் கீழ் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
Post a Comment