நாட்டை விட்டு வௌியேறுவதால் நெருக்கடி உருவாகியுள்ளது - மஹிந்த
வரிச் சுமையை குறைத்தல் என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த தேசிய தேர்தல் நடைபெறும் வரை நிலையான அரசாங்கமொன்றை உறுதிப்படுத்துவதே இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய நடவடிக்கையாகும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தினதும் அரச சேவையினதும் முக்கியமான பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 தொழில் வல்லுநர்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல மாதங்களாக வருமான வரியை குறைக்குமாறு எதிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக வரிச்சுமை காரணமாக நிபுணத்துவ தொழில் வல்லுநர்கள் மற்றும் உயர் பயிற்சிகளை பெற்றவர்கள் நாட்டை விட்டு வௌியேறுவதால் நெருக்கடி உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் VAT அதிகரிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வருடத்தில் வரிக் கொள்கை நாட்டின் முக்கிய அரசியல் தலைப்பாக மாறியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரிச்சுமையை குறைக்க வேண்டும் என முன்வைக்கப்படுகின்ற வேண்டுகோள், மிகவும் வலுவான பொருளாதாரக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட வேண்டுகோளாகும் என மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.
வரிச்சுமையைக் குறைக்கும் தமது கொள்கையே 2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு தொடர்ச்சியாக கிடைத்த 9 வீத பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக ராஜபக்ஸ பெயர் சற்றேனும் தொடர்புபட்டிருந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் எந்த வகையிலும் விடயங்களை ஆராயாமல் எதிர்ப்பை உருவாக்கி திட்டமிட்ட வகையில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குறைவாக வரியை அறவிடும் பொருளாதார கொள்கையும் ராஜபக்ஸ எதிர்ப்பு பிரசாரத்தின் இரையாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Post a Comment