Header Ads



முதியவர்களை தாக்கும் கோழைகளுக்கு தக்க பாடம் கற்பியுங்கள்


- ஹைதர் அலி -


வயதான பெரியமனுஷி என்று கூட பாராமல் மாமியாரை மிதித்து தள்ளிய டபுள் எம். ஏ பட்டம் பெற்றுள்ள ஆசிரியையான மருமகள்...!


படிப்பறிவுக்கும் சுயஒழுக்கத்திற்கும் எந்த சம்மந்தமில்லை போட்டிமிகுந்த உலகில் படித்து தன்னை ஏற்றி விட்டவர்களையெல்லாம் தள்ளி விட்டுட்டு தான்மட்டும் எப்படி சுயநலமாக வசதி வாய்ப்புகளோடு வாழ்வது என்கிற மனநிலை மேலோங்கி நிற்பதின் விளைவு இது.


கேரளாவில் 80 வயதான மாமியாரை பள்ளி ஆசிரியையாக இருக்கும் மருமகள் இரக்கமற்று மிதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


அந்த வீடியோவில் வீட்டினுள்அமர்ந்திருக்கும் மாமியாரை எழுந்து போகச் சொல்லி திட்டுகிறார் ஒருகட்டத்தில் மாமியாரை கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிடுகிறார். கீழே விழுந்துகிடந்த வயதான அந்த அம்மா தன்னை தூக்கிவிடும்படி கெஞ்சுகிறார்.


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்மிக வேகமாக பரவியவுடன். மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கொல்லம் மாவட்ட போலீஸ் எஸ்.பி-க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 


உத்தரவுக்கிணங்க போலீஸ் விசாரணை நடத்தியதில் வன்முறைக்குள்ளான மூதாட்டி கொல்லம் மாவட்டம் தேவலக்கரையைச் சேர்ந்த ஏலியாம்மா வர்க்கீஸ் (80) என தெரியவந்தது. அவரை தாக்கிய மருமகள் மஞ்சுமோள் தோமஸ் என்பவர், இரண்டு எம்.ஏ பட்டம் பெற்றிருப்பதாகவும், சவறா பகுதியில் தனியார் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. தெக்கும்பாகம் போலீஸ் அவரை கைது செய்துள்ளது.


இதுகுறித்து போலீஸ் கூறுகையில், 


“மூதாட்டி ஏலியம்மா வர்க்கீசுக்கு ஜெய்ஸ் என்ற மகன் உள்ளார். ஜெய்ஸின் மனைவிதான் மஞ்சுமோள் தோமஸ். ஆறரை ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மருமகள் தாக்கத் தொடங்கி உள்ளார். வீட்டில் சுத்தமாக இருக்கவில்லை எனக்கூறி தாக்குவது வழக்கம். தன்னை தாக்குவதை தட்டிக்கேட்கும் மகனையும் மருமகள் தாக்கியதாக ஏலியம்மா வர்க்கீஸ் தெரிவித்துள்ளார். இப்போது வெளியான வீடியோ ஓராண்டுக்கு முன்பு நடந்த தாக்குதல் என தெரியவந்துள்ளது.


 சமீபத்தில் அவரை மருமகள் முகத்தில் கைகளால் இடித்ததுடன், ஷூ காலால் மாமியாரின் கைகளை மிதித்து, கம்பியால் அடித்துள்ளார். அடிபட்டு கீழே விழும் ஏலியம்மா வர்க்கீஸை காலால் மிதித்துள்ளார் மருமகள். வார்டு உறுப்பினர் உதவியுடன் ஏலியம்மா வர்க்கீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மஞ்சுமோள் தோமஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.


தொடர்ந்து மஞ்சுமோள் தோமஸை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குழந்தைகளை பராமரிப்பதற்காக ஜாமீன் வேண்டும் என மஞ்சுமோள் தோமஸ் கூறியுள்ளார். ஆனால், அவரை 14 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அட்டகுளங்கரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மஞ்சுமோள் தோமஸின் இரண்டு குழந்தைகளும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து கேரளா சமூகநலத்துறை அமைச்சர் பிந்து கூறுகையில், “முதியோர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏலியம்மாளுக்கு தகுந்த பாதுகாப்பும், தேவையான சட்ட உதவியும் செய்துகொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளேன்” என்றார். இதற்கிடையே மஞ்சுமோளை ஆசிரியர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது பள்ளி நிர்வாகம்.

No comments

Powered by Blogger.