Header Ads



சிக்கலில் மாட்டினாரா றிசாத்..?


தனது அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையில் இருந்து விலகிய முஸ்லிம் நீதியரசரை சபிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது. ஆகவே அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று (04.12.2023) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,


“நீதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது வழக்கு விவகாரத்தை குறிப்பிட்டு 'நீதியரசரை சபிப்பதாக' குறிப்பிட்டுள்ளார்.


உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் நவாஸ் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அவர் ஒருபோதும் மதத்தை முன்னிலைப்படுத்தி நீதிபதியாக சேவையாற்றவில்லை. கௌரவமான முறையில் சேவையாற்றுகிறார்.


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முதலாவதாக நீதியரசர் ஜனக் த சில்வா விலகினார்.


வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இவர் தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கில் இருந்து விலகியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.


அதேபோல் இரண்டாவதாக நீதியரசர் சமேவர்தன தனிப்பட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி வழக்கில் இருந்து விலகினார். மூன்றாவதாக நீதியரசர் யசந்த கோடாகொட வழக்கில் இருந்து விலகினார். இவர் விலகியதற்கான காரணத்தை நான் குறிப்பிட விரும்பவில்லை. காரணத்தை குறிப்பிட்டால் அது ரிஷாட் பதியுதீனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


இறுதியாக நீதியரசர் ஏ.எச்.நவாஸ் முன்னிலையில் இவரது அடிப்படை உரிமை மீறல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரும் வழக்கில் இருந்து விலகினார். விலகுவதற்கான காரணத்தை அவர் குறிப்பிவில்லை.இவர் மீது முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டை தொடர்ந்து நான் அவ்விடயத்தை ஆராய்ந்து பார்த்தேன்.


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்தினம் இரவு இந்த வழக்கில் முன்னிலையாகிய கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் நீதிபதிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு 'உங்கள் முன்னிலையில் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் சிரேஷ்ட சட்டத்தரணிக்கு உண்டு' என குறிப்பிட்டுள்ளார்.


அதன்பின்னர் மறுநாள் காலையில் சிரேஷ்ட சட்டத்தரணி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு 'இந்த வழக்கில் முன்னிலையாக வேண்டாம்' என்று நீதியரசர் நவாஸிடம் குறிப்பிட்டுள்ளார். இதனை நீதியரசர் நவாஸ் பிரதம நீதியரசரிடம் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரே அவர் வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதியரசர் நவாஸ் தொடர்பில் குறிப்பிட்ட கருத்து பாரதூரமானது. முஸ்லிம்களுக்காக இவர் முன்னிலையாகுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


நீதியரசர் நவாஸ் தொடர்பில் இவர் எமக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. நீதியரசர் நவாஸிற்கு எதிராக நான் பல வழக்குகளில் முன்னிலையாகியுள்ளேன். அவர் இனவாதத்தை தோளில் சுமந்துக் கொண்டு செல்லவில்லை. நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு நீதிபதிகளை விமர்சித்து, சபித்தால் எவ்வாறு சட்டத்துறையும், நீதித்துறையும் இணக்கமாக செயற்பட முடியும்.


நீதியரசர் நவாஸ் ராஜபக்சர்களின் வழக்குகளுக்கு முன்னிலையாகுவதாகவும் இவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜபக்சர்களுக்கு சாதகமாகவும், எதிராகவும் வழங்கப்பட்டுள்ள வழக்கு தீர்ப்புகளில் நீதியரசர் நவாஸ் முன்னிலையாகவில்லை. ராஜபக்சர்களின் நிழலில் இருந்துக் கொண்டு ரிஷாட் பதியுதீன் 10 ஆண்டுகாலமாக அரசியல் செய்து அமைச்சு பதிவிகளை வகிக்கும் போது எவரும் சபிக்கவில்லை. 


ஆனால் தற்போது நீதியரசர் அவர்களின் வழக்குகளுக்கு முன்னிலையாகியதாக குறிப்பிட்டு சபிக்கிறார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அந்த நீதியரசரிடம் நாடாளுமன்றத்தின் ஊடாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். ஏனெனில் இது பாரதூரமானது ” என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.