Header Ads



எதிர்ப்புகளை மீறி, இஸ்ரேலுக்குச் சென்ற இலங்கையர்கள்


இஸ்ரேலிய விவசாயத் துறையில் வேலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது குழு நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.


அதன்படி, இந்த குழுவில் முப்பது பேர் சேர்க்கப்பட்டனர். இருபது பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) காலை இஸ்ரேலுக்குப் புறப்படவுள்ளது, முப்பது பேர் கொண்ட மேலதிக குழு இன்று (19) இரவு இஸ்ரேலுக்கு அனுப்பப்படவுள்ளது. 


சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விழாவில் முதல் தொகுதி தொழிலாளர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் அமைச்சரால் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம், அடுத்த சில வாரங்களில் 10,000 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு செல்ல முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.


இந்த வேலைகளுக்காக எந்த தரப்பினருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். எனவே, வெளிநாடுகளுக்குச் சென்ற பிறகு, இந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு யாராவது பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டாலும், பணம் செலுத்தியவர்களை திருப்பி அனுப்புவது குறித்து இரு அரசுகளும் உடன்பாடு எட்டியதால், அவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள்.


மேலும், கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகளுக்காக 2,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


யுத்த காலத்தில் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.