இத்தா, புர்கா, ஹலால், வஹாபிசம், பத்வா குறித்து ஞானசாரரின் நஞ்சு சிபாரிசுகள் கசிந்தன
இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத போதிலும், விடிவெள்ளி தகவல் அறியும் சட்டம் ஊடாக சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையின் பிரதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 43 சிபாரிசுகளில் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்ட பல சிபாரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தை மறைத்து ஆடை அணிவது தடை செய்யப்பட வேண்டும். இவ்வாறான ஆடை அணிவதன் மூலம் அவர்கள் அடிப்படைவாதத்துக்கு உட்படும் சந்தர்ப்பம் உருவாகிறது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் பெண்கள் முகம், கைகள் மற்றும் முழு உடம்பையும் மறைத்து ஆடை அணிய வேண்டுமென பத்வா வழங்கியுள்ளது.
பொது இடங்களில் முகத்தை பூரணமாக மறைத்து ஆடை அணிந்து நடமாடுவது தடை செய்யப்பட வேண்டும். முழுமையாக முகத்தை மறைத்து ஆடை அணிவது குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
ஹலால் சான்றிதழ் தொடர்பில் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
கடைகளிலும் விற்பனை நிலையங்களிலும் ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்கள் வேறாகவும் ஹலால் சான்றிதழ் அற்ற உணவுப் பொருட்கள் வேறாகவும் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும்.
வஹாபிஸம் மற்றும் அடிப்படைவாதம் இது தொடர்பான மார்க்கத் தீர்ப்புகள் வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அறிஞரொருவர் அல்லது இஸ்லாமிய அமைப்பொன்றின் மூலம் ‘பத்வா’ என்ற பெயரில் வழங்கப்படும் மத தீர்ப்புகள் அடிப்படைவாதத்தை வளர்க்கின்றமையால் அவ்வாறான மார்க்கத் தீர்ப்புகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும்.
நியாயமற்ற முறையில் மதமாற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும். குறிப்பாக மக்களின் வறுமை நிலையினைப் பயன்படுத்தி அவர்களுக்கு பல்வேறு பொருளாதார வசதி வாய்ப்புகளை வழங்கி இவ்வாறு மதம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான மத மாற்றங்களுக்கு அதிகமாக பௌத்த, இந்து மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். கிறிஸ்தவ மத பிரிவுகள், முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனவே முறையற்ற மதமாற்றங்களைத் தடை செய்வதற்கு சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இன, மத ரீதியிலான மற்றும் பிரதேச ரீதியிலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும். அத்தோடு தற்போது செயற்படும் இவ்வாறான அரசியற் கட்சிகளை தேசிய கட்சிகளாக மாற்றிக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறான கால எல்லைக்குள் மாற்றம் பெறாத அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்.
தண்டனைச் சட்டக் கோவை 365 மற்றும் 365A பிரிவின்படி சமபாலின சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பது நீக்கப்பட்டு உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நாட்டில் வாழும் சம்பிரதாய முஸ்லிம் குழுவொன்று இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றவர்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் 1979ஆம் றவர்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வழங்கப்பட்ட மார்க்கத் தீர்ப்பு முழுமையாக செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும். இது பற்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது அதிகாரியொருவரினால் உலமா சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனும் சிபாரிசுகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. – Vidivelli
Post a Comment