ஹக்கீம் மேற்கொண்டுள்ள தீர்மானம், அமெரிக்கத் தூதுவரையும் சாடினார்
அத்துடன் அங்கு அவர் மேலும் கூறியதாவது,
நீதி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்னர், எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சில நிமிடங்கள் பலஸ்தீன மக்களுடனான எங்களது இந்த உயர் சபையின் ஒருமைப்பாட்டை பிரகடனப்படுத்துவதற்கு ஓர் அடையாளமாக அந்த நாட்டின் சால்வையை அணிந்து நான் இங்கு உரையாற்றுகின்றேன் .இந்த பலஸ்தீனப் பிரச்சினைக்கு ஓர் உரிய தீர்வை அறியும் வரை இங்கு இந்த சால்வையை அணிந்திருக்கத் தீர்மானித்திருக்கின்றேன்.
அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தொடுத்த தாக்குதலுக்கு பயங்கரமான பழிவாங்கலாக இஸ்ரேல் மிலேச்சத்தனமாக அந்த அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் தாக்குதல்களை நாங்கள் வன்மையாக கண்டித்து வருகின்றோம்.
157 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகாஜர் ஒன்றை யுத்தத்தை நிறுத்துமாறு கோரி ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு அனுப்புவதற்காக நாங்கள் அதன் அலுவலகத்துக்கு கையளிக்கச் சென்றபோது ,அங்கும் கூட இஸ்ரேலர்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் கொல்லப்பட்ட 150 பேருக்கு அதிகமான அதன் பணியாளர்களை நினைவு கூர்ந்து அரைக்கம்பத்தில் ஐ.நா.வுடைய கொடி பறக்க விடப்பட்டிருந்தது .
தற்காலிகமாக சில நாட்கள் இருந்த யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நேற்றிலிருந்து மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் பல பிரதேசங்கள் மீது இஸ்ரேல் தாறுமாறாக குண்டு தாக்குதல்களை நடத்தி நூற்றுக் கணக்கானவர்களை கொன்று குவித்து வருகின்றது.
உலகில் மோதல்கள் இடம் பெற்ற நாடுகளில் ஐ.நா. பணியாளர்கள் அதிகமாக கொல்லப்பட்ட சம்பவங்கள் பலஸ்தீனத்தில் தான் நடந்திருப்பதாக அதனுடைய செயலாளர் நாயகம். அறிவித்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக மாறி இருக்கின்ற பலஸ்தீன பிரதேசங்களில் உணவு, நீர் மற்றும் மருத்துவ உதவிகள் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்களை இஸ்ரேல் படையினர் கொன்று குவித்து வருகின்றனர்.
ருவண்டா,பொஸ்னியா போன்ற நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளைத் தொடர்ந்து இனி அதனை அனுமதிக்க போவதில்லை என்று மேற்குலகத் தலைவர்கள் கூறியவை இன்று பொய்யாகிப் போயிருக்கின்றன. அது அர்த்தமற்றதாக எங்களுக்கு இப்பொழுது தான் புரிகின்றது. அந்த அளவிலான ஒரு "மறதி நோய்" மேற்கு நாடுகளை இன்று பீடித்திருக்கின்றது.
அமெரிக்க தூதர் ஜூலி சாங் ட்விட்டர் (X)பதிவு ஒன்றில் வடக்கில் இராணுவம் மக்களை கைது செய்வதை பற்றி கூறியிருக்கிறார். அதேபோன்று பலஸ்தீனத்தில் அப்பாவி குழந்தைகளும் பெண்களும் நிரபராதிகளும் கொல்லப்படுவதையும் அவர் சமமாக பார்த்திருக்க வேண்டும்.
உலகில் மோதல்களிடம் பெற்ற பகுதிகளில் ஐ.நா. பணியாளர்கள் அதிகமாக கொல்லப்பட்ட சம்பவங்கள் பலஸ்தீனத்தில் தான் நடந்திருப்பதாக அதனுடைய செயலாளர் நாயகம். அறிவித்திருக்கிறார் .
சர்வதேச சமூகத்தினால் பலஸ்தீனத்தில் பயங்கரமான படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இது இனப்படுகொலை இல்லையென்றால்,எது இனப்படுகொலை?
குழந்தைகளும் சிறுவர்களும் பெண்களும் வயது முதிர்ந்தவர்களும் என யுத்தத்தோடு பலஸ்தீன மோதலோடு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். பலஸ்தீன பிரதேசங்களில் நிறைய அப்பாவிகளை இஸ்ரேல் படையினர் சிறை பிடித்து வருவதோடு, யுத்த நிறுத்த வேளையிலே கைதிகள் பரிமாறி பரிமாறிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து பலஸ்தீனப் பிரதேசத்துக்கு வருகை தந்த விடுவிக்கப்பட்ட கைதிகளை வரவேற்க கூடாது ,அவர்களது வருகையை கொண்டாடக்கூடாது என்று வீடு வீடாகச் சென்று இஸ்ரவேல் படையினர் அச்சுறுத்தி வருவது வருவதையும் காண்கிறோம். இவ்வாறான சம்பவங்கள் அங்கு இடம் பெறுகின்றன."வாழ்க,பலஸ்தீனம்" என்றார்.
Post a Comment