Header Ads



குர்ஆன் மத்ரசா மாணவன் மரணம் - விசாரணை முன்னேற்றங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


சாய்ந்தமருது குர்ஆன் மதரசாவில் (05.12.2023 இரவு) மரணமடைந்த மாணவனின் மரணம் தொடர்பில் குர்ஆன் மதரசாவின் தலைமை நிர்வாகி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் உள்ள நிலையில், இன்று மாலை மேற்படி குர்ஆன் மதரசாவினை பார்வையிடுவதற்கு அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டி.விஜயசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று மேற்படி குர்ஆன் மதரசாவினை மேலதிக விசாரணைக்காக பார்வையிட்டனர்.


இதே வேளை, 29.11.2023 கல்முனை சிறுவர் சீர்திருத்தப் பாடசாலையில் ஒரு மாணவன் தாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தான். இப்பாடசாலையின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் இப்பாடசாலையையும் பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டி.விஜயசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று மாலை சென்று பார்வையிட்டனர்.


இதே வேளை, இன்று மாலை 5.30 மணியளவில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து மேற்படி இரு சிறுவர்களின் மரணங்கள் தொடர்பிலும், விசாரணைகள் பற்றியும் நீண்ட நேரமாக கலந்துரையாடலில் ஈடுபட்டார். அத்தோடு மேலதிக விசாரணைகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.


இக்கலந்துரையாடலில் அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி, சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தடவியல் பொலிஸார் ஆகியோர்கள் பங்கு கொண்டனர்.

No comments

Powered by Blogger.