Header Ads



அபு உபைதா யார்? இவர் முகத்தைப் பார்க்க இஸ்ரேல் துடிப்பது ஏன்?


BBC


அபு உபைதா, ஹமாஸ் வீடியோக்களில் அதிகமாக இவரைப் பார்க்க முடியும். இவர் ஹமாஸின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்.


இஸ்ரேல்-காஸா போரின் மிக முக்கியமான நபர்களில் ஒருவராகவும் இவர் இருக்கிறார். அபு உபைதா என்னும் பெயரில் அறியப்படும் இந்த செய்தித் தொடர்பாளர் ஹமாஸ் குழுவின் செய்திகளை சமூக ஊடக வாயிலாக உலகிற்கு அறிவிக்கும் பணியைச் செய்கிறார்.


முஹம்மது நபியின் தோழர்களில் ஒருவரான, ராணுவத் தளபதி அபு உபைதா இப்னு அல்-ஜர்ரா என்பவரது பெயரில் இருந்து இவரது குடும்பப் பெயர் உருவாகிற்று. அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி முகமது அல்-தாய்ஃப் "ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட்" என்னும் யுத்தத்தை அறிவித்ததில் இருந்து அபு உபைதா தவிர்க்க முடியாத ஒரு நபராக மாறிவிட்டார்.


அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத்தான் அல்-அக்ஸா ஃப்ளட் என ஹமாஸ் விவரிக்கிறது. அந்தத் தாக்குதலில் தெற்கு இஸ்ரேலை சேர்ந்த 1200 பேர் கொல்லப்பட்டனர்.


அபு உபைதா தனது டெலிகிராம் சேனலில் அல்-கஸ்ஸாம் படையின் நடவடிக்கைகளை விவரிக்கிறார்.


அபு உபைதாவின் உண்மையான அடையாளம் யாருக்கும் தெரியாது. தனது வீடியோக்களில் எப்போதும் சிவப்பு நிற கெஃபியே அணிந்திருப்பார். கெஃபியே என்பது ஒரு பாரம்பரிய பாலத்தீன தலைப்பாகை துணி.


வீடியோக்களில் குர்ஆன் வசனம் பின்னணியில் இருக்க தனது கருத்துகளகக் கூறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார் அபு உபைதா. தனது குழுவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹமாஸ் தொடர்பான செய்திகளை டெலிகிராம் சேனலில் பகிர்ந்து கொள்கிறார்.


அவரது டெலிகிராம் சேனல் 2020இல் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அவர் வேறு எந்த சமூக ஊடக தளத்திலும் இல்லை.


அவரது வீடியோ பேச்சுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன மற்றும் பல தொலைக்காட்சி செய்தி சேனல்களும் அவற்றை ஒளிபரப்புகின்றன.


லண்டனை சேர்ந்த பிரபல அரபு செய்தித்தாள் அஷர்க் அல்-அவ்சாத்தின் செய்தியின் படி, " 2002இல் அபு உபைதா அல்-கஸ்ஸாமின் கள அதிகாரி என்று விவரிக்கப்பட்டபோது, அவரைப் பற்றிய முதல் தகவல் கிடைத்தது."


"அவர் எப்போதும் ஊடகங்களில் பேசும்போது முகத்தை மறைத்துக் கொள்கிறார். அல்-கஸ்ஸாமின் முன்னாள் தலைவர் இமாத் அகிலும் இதே போலத்தான் பொதுவெளியில் தோன்றினார். அவர் 1993இல் இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்டார்," என அஷர்க் அல்-அவ்சாத் செய்தி கூறுகிறது.


2006ஆம் ஆண்டு, அபு உபைதா அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். ஜூன் 25, 2006 அன்று முதல் முறையாக பொதுவெளியில் அவர் காணப்பட்டார். அன்று, ஹமாஸ் உட்பட பல ஆயுதக் குழுக்கள் காஸா எல்லையில் உள்ள இஸ்ரேலிய ராணுவ சாவடியைத் தாக்கின.


ஹுடா காலியாவின் குடும்பத்தின் மீது குண்டு வீசப்பட்ட பிறகுதான் இந்தத் தாக்குதல் நடந்தது என அவர் கூறுகிறார். அந்தத் தாக்குதல் குறித்து வெளியான வீடியோவில், குண்டு வெடிப்பிற்குப் பிறகு 10 வயதான ஹுடா காலியா என்னும் சிறுமி காஸாவின் கடற்கரையில் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.


தனது தந்தையின் சடலத்தின் அருகே விழுந்து, "அப்பா, அப்பா" எனத் தொடர்ந்து அழைத்தவாறே அவர் கதறி அழுததை அந்த வீடியோவில் பார்க்க நேர்ந்தது.


இந்தப் புகைப்படத்தில், ஜோர்டானிய போராளிகளின் கையில் இருப்பது பாத்தீனிய சிறுமி ஹுடா காலியா குறித்த ஒரு பேனர். 2006இல் காஸாவின் கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, ஹுடா காலியாவின் குடும்பத்தினர் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.


ஜூன் 25, 2006 அன்று, பாலத்தீனிய குழுக்களின் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவ வீரர் கிலாட் ஷாலிட் கடத்தப்பட்டார். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஷாலித் தவிர, இரண்டு ராணுவ வீரர்களும் இதில் காயமடைந்தனர்.


ஷாலித் 2011இல் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலைக்காக, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ஷாலித்தின் விடுதலைக்கு ஈடாக இஸ்ரேல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 2014ஆம் ஆண்டு போரின்போது, ​​ஷால் ஆரோன் என்ற இஸ்ரேலிய ராணுவ வீரரை தான் சிறைபிடித்ததாக அபு உபைதா ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில் கூறினார். ஆனால் ஆரோன் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கருதுகிறது.


அபு உபைதாவின் உண்மையான அடையாளத்தைக் கண்டுபிடிக்க பலர் முயன்று வருகின்றனர்.


அக்டோபர் 25 அன்று, இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே ஒரு வீடியோவை ட்வீட் செய்து, அந்த வீடியோவில் இருப்பவர்தான் அபு உபைதா எனக் கூறினார்.


அபு உபைதாவின் உண்மையான பெயர் ஹுதைஃபா சமீர் அப்துல்லா அல்-கஹ்லூத் என்று அட்ரே கூறினார்.


இஸ்ரேலின் இந்த செய்திக்கு ஹமாஸ் மற்றும் அல்-கஸ்ஸாம் பதிலளிக்கவில்லை.


இஸ்ரேலிய செய்தித்தாளான யெடியோத் அஹ்ரோனோத் வெளியிட்ட செய்தியின்படி, அபு உபைதா 2013இல் காஸா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் மத அடிப்படைகள் பிரிவில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.


"யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றுக்கு இடையிலான புனித பூமி" என்னும் தலைப்பில் அவரது ஆய்வறிக்கை இருப்பதாகவும், அவர் தற்போது முனைவர் பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும் அந்த செய்தித்தாள் கூறுகிறது.


மேலும் அபு உபைதா காஸாவின் நலியா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் யெடியோத் அஹ்ரோனோத் அறிக்கை கூறுகிறது. நலியா கிராமம் 1948ஆம் ஆண்டில் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போதைய தகவல்களின்படி, உபைதா இப்போது காஸாவின் வடகிழக்கில் அமைந்துள்ள ஜபாலியா முகாமில் வசிக்கிறார்.


அவரது இருப்பிடத்தின் மீது 2008- 2013 காலகட்டத்தில் இஸ்ரேலிய ராணுவம் பலமுறை குண்டுகளை வீசியதாக இஸ்ரேலிய செய்தித்தாள்கள் தகவல்களை வெளியிட்டன. சமீபத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போதும்கூட அவரது இருப்பிடம் குறிவைக்கப்பட்டது.


அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான இந்த செய்திகளின் உண்மைத் தன்மையை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.

No comments

Powered by Blogger.