Header Ads



"யாரப்பா இந்த தாய்...?"


ஸஹாபியச் சமூகத்தின் வாழ்வை படிக்கும்போது கண்ணீர் மட்டுமன்றி பல சந்தர்ப்பங்களில் ஆச்சர்யமும் ஏற்படுவதுண்டு. காரணம் இன்று எம்மால் வாழ முடியாத வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து காட்டியமையாகும். "இப்படியும் வாழ முடியுமா?" எனும் கேள்விக்கு சில சந்தர்ப்பங்களில் எம் கண் முன் சிலரது வாழ்க்கையே பதிலாகி "ஆம் முடியும்" எனும் தீர்வை தந்து விடுகின்றது.


அவ்வாறான ஒரு சிலரை என் வாழ்விலும் நான் சந்தித்துள்ளேன். அவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அருள் புரிவானாக. அவ்வாறான சிலரைப் பற்றி படிப்பினைக்காக அவ்வப்போது நான் எழுதியதுண்டு. இன்றும் அவ்வாரான ஒருவர் பற்றியே படிப்பினை நோக்கில் எழுத முனைகிறேன்.


கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் தல்கஸ்பிட்டிய எனும் அழகிய கிராமமது. அக்காலத்தில் தஃவா நிமித்தம் அடிக்கடி போய்வர வேண்டிய  தேவை இருந்தது.  பொதுவாகவே அந்த ஊர் மக்கள் பிறருடன் அன்பாக பழகும் அழகிய குணம் கொண்டவர்கள்தான். மாணிக்கமேயாயினும் அதிலும் உயரிய அந்தஸ்த்து பெற்றவையும் உண்டல்லவா. அதுபோல்தான் அங்கே ஒரு தாய் நல்ல பெண் மாணிக்கங்களிலும் சிறந்த மாணிக்கமாக விளங்கினார்.  


எல்லோராலும் மாமி, சாச்சி என்று அன்பாக அழைக்கப் படுபவர். அவர் பெயர் பாத்திமா என்பதை விசாரித்து அறிந்து கொண்டேன். 


அவ்வூரில் வீடுகளிலும், மஸ்ஜித் முனீராவிலும் பெண்களுக்கான மார்க்க வகுப்புகள் நடந்து வந்தது. எவ்விடத்தில் அவ்வகுப்பு நடந்தாலும் வகுப்பை முடித்து வெளியில் வரும்போது அந்தத்தாய் ஒரு ஓரமாக அடக்கமாக நின்றிருப்பார். அன்போடு முகத்தை பார்த்து சிரித்த முகத்துடன் ஸலாம்கூறி "வீட்டுக்குப்போய் டீ குடிச்சிட்டு போவமே வாப்பா" என்று கண்ணியமான முறையில் அழைக்கும் அவரது அக்குரலில் கலந்திருக்கும் அன்பின் ஓசையில் அருமையானதோர் டீ வயிற்றுனுள் சென்று விட்டதுபோல் இருக்கும். வந்தாரை உபசரிக்க அத்தாய் அழைக்கும் அழைப்பின் கண்கொள்ளாக் காட்சி இன்றும் என் மனக்கண்முன் நிலலாடுகிறது.


அத்தாயுடன் இப்படி ஏற்பட்ட அறிமுகம்தான் அது. எப்போது பார்த்தாலும் மகன், வாப்பா என்ற அடை மொழிகளுடன்தான் அழைப்பார். இத்தாய்க்கு கனவராக இருந்தவரும், பிள்ளையாக பிறந்தவர்களும் உண்மையில் பாக்கியசாலிகள். பிறருடன் இந்தளவு கனிவாக, அன்பாக, பொறுப்போடு நடக்கும் இத்தாய் இவர் கனவருடனும், பெற்ற பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்திருப்பார் என்று யோசித்து பார்ப்பேன்.


வழமையாக நடக்கும் மார்க்க வகுப்பு ஒருநாள் நடைபெறாமல் தவறி விட்டாலும் அதற்காக அதிகம் கவலை படுவார். இனி அவ்வாறு தவறிவிடாதிருக்கும் பொருட்டு எம்மை அனுகி பொருப்போடு நிறைய நஸீஹத் செய்வார். மஸ்ஜிதை மிகவும் நேசித்த ஒரு பெண்ணாக அத்தாயை நான் கண்டேன். அவரது இல்லத்தைவிட அல்லாஹ்வின் இல்லத்தை அத்தாய் நேசித்திருப்பார் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.


ஒரு நாள் அங்கிருந்த தஃவா சம்பந்தப்பட்ட தோழர்களோடு கதைத்துக் கொண்டிருந்தபோது! அத்தாயை காட்டி "யாரப்பா இந்த தாய்?"  என்று  விசாரித்தேன். எங்கட தஃவாகுழு Fuwadh Brother உடைய உம்மா என்று சொன்னார்கள். (உங்களுக்கெல்லாம் விளங்கும்படி சொல்ல வேண்டுமாயின் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகிய அஷ்ஷேய்க் Nawfar Siddeek கபூரி அவர்களின் உம்மாதான் அவர்.) 


தொடர்ந்து இப்படிக் கூறினார்கள். "அவ உங்களோடு மட்டுமல்ல ஊர்ல எல்லோருடனும் இப்படித்தான் இருப்பா. அவட வாழ்நாளில் அவ யாரோடயும் கோபப் பட்டு பேசிருக்கவே மாட்டா. எல்லாரையும் மகன்,வாப்பா என்று சேர்த்துதான் பேசுவா. வீட்டுக்கு போனவர்களை வாசல்வரை வந்து வரவேற்பா. அதேபோல வாசல்வரை வந்து வழியனுப்புவா. அடுத்தவங்களைப் பற்றி நல்லது மட்டும்தான் பேசுவா. எல்லோருக்கும் எப்பவுமே நல்ல புத்திமதிகளை சொல்லிக் கொடுப்பா. அவட கையால சாப்பிடாத ஆட்களே இந்த ஊர்ல இருக்க மாட்டாங்க மவ்லவி. எப்ப பார்த்தாலும் குர்ஆனும் கையுமாகத்தான் இருப்பா. மாசத்துல ஒரு தடவையாவது குர்ஆனை ஓதி முடிச்சிடுவா. தர்ஜுமாவையும் சேர்த்து வாசிச்சிடுவா.... இப்படியே அத்தாயை பற்றி பட்டியல் போட்டு அடுக்கிக் கொண்டே அறிமுகப் படுத்தினார்கள். '


அத்தாயை பற்றி நான் "யாரப்பா இந்தத்தாய்?" என்று ஒருயொரு கேள்விதான் கேட்டேன். அச்சந்தர்ப்பத்தில் என்னுடன் இருந்தவர்களோ ஒருவர் கூறி முடிக்க மற்றவர் ஆரம்பிக்கின்றவர்களாக ஒருவர்பின் ஒருவராக இத்தாயின் நற்குணங்களை அடுக்கிக் கொண்டே இருந்தார்கள். 


அதில் ஒருவர் (அவ்விடத்தில் வயதில் மூத்தவர்) மஸ்ஜித் முனீராவை காட்டி; இந்தப் பள்ளி கட்டினதுல அரைவாசிக்குமேல கற்களை இவதான் தூக்கியிருப்பா மவ்லவி. பா(B)ஸ்மார் வேல முடிஞ்சி போன பிறகு சில பெண்களை கூட்டிக் கொண்டு வந்து அவவும் சேர்ந்து ரோட்டுல இருக்கிற கற்களை கொண்டுபோய் அடுத்த நாளுடைய வேலைக்கு தயாராக வைத்து விடுவா. பள்ளியோட இவ சரியான இரக்கம் என்று சொன்னார்". 


அன்று அச்சந்தர்ப்பத்தில் என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கியது ஞாபகத்தில் வருகிறது. இன்றும் இச்செய்தி ஞாபகத்தில் வரும்போது என் கண்கள் கலங்குகிறது. கற்களை சுமந்து மஸ்ஜித் முனீராவை நோக்கி நடக்க வேண்டிய பாதையானது பொதுப் பாதையிலிருந்து மேட்டில் உள்ளது என்பது அப்பள்ளியை அறிந்தோருக்குத் தெரியும். அந்த மேட்டில் இத்தாய் அல்லாஹ்வின் இல்லத்துக்காக கற்களை சுமந்திருக்கிறார் என்றால்; சுப்ஹானல்லாஹ் மஸ்ஜிதோடு எவ்வளவு பாசமாக இருந்திருக்கிறார் என்று சிந்தித்துப் பாருங்கள். 


நான் நினைக்கிறேன் இத்தாயைப் பற்றி நானறிந்தவைகள் மிகக் குறைவானவையாக இருக்கலாம். காரணம் எனக்கிருந்ததோ ஒரு குறுகியகால தொடர்பு. ஒரு சில விநாடிகள் சிலரிடம் விசாரித்தறிந்ததுதான் இவைகள். அதுவே இவ்வளவு என்றால்.... 


இவரது வாழ்வில் இக்கால பெண்களுக்கு மட்டுமல்லாது நம்மனைவருக்கும் ஏராளமான படிப்பினைகள் உள்ளதாக உணர்கிறேன். 


இரண்டு பிள்ளைகளை பெற்று வளர்க்கும்போதே மார்க்க, சமூக கடமைகளை நேரமில்லை என உதாசீனம் செய்யும் நாம் எங்கே? 


பல பிள்ளைகளின் சொந்தக்காரியான இத்தாய் எங்கே? தும்புத் தடியை சற்று பிடித்து அல்லாஹ்வின் இல்லத்திலுள்ள தூசியை சற்று கூட்டிவிடக்கூட மனதில் இடமில்லாத நாம் எங்கே? 


அல்லாஹ்வின் இல்லத்துக்காக கற்களை சுமந்த இந்த தாய் எங்கே? சிந்தித்துப் பார்ப்போமாக. சீர் பெறுவோமாக...


😭 அண்மையில் இத்தாய் இறையடி சேர்ந்துவிட்டார். நிச்சயம் தல்கஸ்பிடிய கிராமம் நல்லதோர் ஆத்மாவை இழந்து விட்டதை உணர்ந்திருக்கும் என நம்புகிறேன். சுகயீனம் காரணமாக எனக்கு இந்த அருமையான ஜனாஸாவில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டமை எண்ணி இன்னும் கவலையடைகிறேன். 


இத்தாயின் மறுமை வாழ்வுக்காக நாமனைவரும் துஆ செய்ய கடமைப் பட்டுள்ளோம். இன்றும் என்றும் இப்படியான நல்ல மனிதர்கள்; நல்லோர் உள்ளங்களில் வாழக் கூடியவர்கள்தான். ஆதலால்தான் எங்கோ இருக்கும் என் உள்ளத்திலும் இத்தாய் இன்றும் வாழ்கிறார். தயவு செய்து அவரின் மறுமை உயர்வுக்காக பிரார்தனை புரிவோமாக.


இரக்கமுள்ள எஜமானனே! உன் இல்லத்தின் மீதும், உன் மார்க்கத்தின் மீதும் அன்பு காட்டிய இத்தாயின்மீது நீ அன்பு காட்டுவாயாக. அத்தாயின் பாவங்களை மன்னித்து நல்லருள்பாளிப்பாயாக. யா அல்லாஹ்! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! அவர் விட்டுச் சென்ற வீட்டை விடச் சிறந்த வீட்டையும், அவர் விட்டுச் சென்ற ஊரைவிட சிறந்த ஊரையும், அவர் விட்டுச் சென்ற குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் சுவனத்தில் இத்தாய்க்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! யா றப்... யா றப்...😭😭

அபூ ஸுமையா


No comments

Powered by Blogger.