Header Ads



இப்லீஸ் கூட்டிய மாநாடும், மனிதர்களின் மன மகிழ்ச்சியும்


ஒரு முறை இப்லீஸ்  தனது படை பட்டாளத்தை ஒன்று கூட்டி ஒரு  பெருவிருந்து படைத்தான். விருந்தின் முடிவில் ஒரு மாநாடு நடந்தது. அதிலே   மனிதனிடம் உள்ள மிக மதிப்பான சொத்து  எது என்று கண்டு பிடித்து அதனை அவன் கண் காணாமல் ஒளித்து வைப்பதனூடாக அவனை பாவப்பட்ட பிறவியாக ஆக்கிவிடவேண்டும் என்பதே உத்தேசமாக இருந்தது. 


உலகளாவிய முத்த ஷைத்தான்களால்  கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன:


ஒரு மூத்த சைத்தான் எழுந்து : மனிதனின் சொத்து செல்வங்களை ஒளித்து வைப்போம்' என்றான். 


அதற்கு இப்லீஸ்: இது போதாது, பெரிதாக ஏதாவது யோசனை சொல்லுங்கள் ' என்றான். 


இன்னொரு சைத்தான் எழுந்து: அவனது புத்தியை ஒளித்து வைப்போம் 'என்றான். 


அதற்கு இப்லீஸ்: இதுவும் தேவையில்லை, ஏற்கனவே அவர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு புத்தியே கிடையாது' என்றான்.


திடீரென அங்கே ஒரு கிழட்டு ஷைத்தான் எழுந்து நின்றான்: இபலீஸாரே! தந்திரங்களின் தந்தையே! தீமைகளின் அதிபதியே! மனமகிழ்ச்சியில்தான் மனிதனின் மொத்த ஆத்துமானந்தமும் தங்கியுள்ளது. எனவே அவனது மனமகிழ்ச்சியை ஒளித்து விடுவோம் ' என்றான். 


இப்லீஸின் முகம் மலர்ந்தது, கைதட்டினான். மனிதனின் மனமகிழ்ச்சியை மறைத்து வைப்போம்' என்று ஏகோபித்தனர்.  


பின்னர் அங்கே இன்னொரு பிரச்சினை எழுந்தது.  அவனது மனமகிழ்ச்சியை எங்கே மறைத்து வைப்பது?' என்பதுதான் அது. 


ஒரு ஷைத்தான் எழுந்து: 'ஆழ்கடலுக்கடியில் ஒளித்து வைப்போம்' என்றான். 


இன்னொரு  ஷைத்தான்: பூமியின் அந்தத்தில் மறைத்து வைப்போம் 'என்றான். 


இப்லீஸ் சொன்னான்: இது எல்லாம் சில காலம்தான் சரி.  பின்னர் மனிதன் விமானத்தை கண்டுபிடிப்பான், கண்டம் தாவும் ஏவுகனைகளை கண்டுபிடிப்பான், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பான். நாம் மறைத்து வைத்த மனமகிழ்ச்சையும் கண்டுபிடிப்பான், எங்கள் திட்டம் எல்லாம் தவிடுபொடியாகிவிடும் 'என்றான். 


உடனே அந்த கிழடான ஷைத்தான் மீண்டும் எழுந்தான்: 'இப்லீஸாரே! நாசத்தின் தந்தையே! நன்மைகளின் எதிரியே!


நான் ஒரு இடம் சொல்கிறேன். அங்கே நாம் மறைத்து வைத்தால் பாவப்பட்ட மனிதன் கண்டுபிடிக்கவே மாட்டான். அவனது ஆழ்மனதின் அடியில் அதனை மறைத்து வைத்துவிடுவோம்' என்றான். 


பின்னர் மனிதன் அதனை சொத்து சுகங்களில் தேடிப்பார்பான், கிடைக்காது.


காசு பணத்தில் அதனை தேடிப்பார்பான், கிடைக்காது. 


பட்டம் பதவியில் அதனை தேடிப்பார்பான், கிடைக்காது. 


பெண்ணிலும் பிள்ளை குட்டிகளிலும் அதனை தேடிப்பார்பான், கிடைக்காது.' என்றான்.


இப்லீஸ் இக்கருத்தை ஆதரித்து தலைவணங்கினான். அதற்கு சன்மானமாக அந்த கிழட்டு சைத்தானுக்கு நெருப்பினாலான கிரீடம் அணிவித்து கொளரவித்தான். 


அன்றிலிருந்து மனிதன் தனது மனமகிழ்ச்சியை தேடாத இடமில்லை, போகாத ஊரில்லை. கேட்காத இடமில்லை. தன் அடிமனதில் அது இருப்பதை கண்டுகொள்ள மறந்துவிடுட்டான். அதனால் துன்பத்திலும் துயரித்திலும் துவண்டு போய்விடுகிறான்.


சுருக்கம்: 👇


உன் மனமகிழ்ச்சி உன்னிடம்தான் உள்ளது. உன் மனமகிழ்ச்சியை நீதான் உருவாக்க வேண்டும். போதுமென்ற மனம் மகிழ்ச்சியாகும், மனத்திருத்தி மகிழ்ச்சியாகும், கொடுப்பது மகிழ்ச்சியாகும், புன்னகைப்பது மகிழ்ச்சியாகும். மன்னிப்பது மகிழ்ச்சியாகும். 


மனமகிழ்ச்சி என்பது உன் தீர்மானமாகும்.!


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.