Header Ads



கல்வி அமைச்சு ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ள கடிதம்


இன்னும் சில  நாட்களில் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு மன்னார்,முசலி பிரதேசத்திலிருந்து  தோற்றுவோருக்கான பரீட்சை  நிலையம் முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்(சிலாவத்துறை) நிறுவப்பட்டுள்ளது. அதுபற்றி  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கல்வி அமைச்சு ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்துள்ளது.


பிரஸ்தாப உயர்தர  பரீட்சைக்கான நிலையம் மன்னார் “பரியாரி கண்டல்” எனும் இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது சம்பந்தமாகவும்,அந்த இடத்திற்கு  முசலியிலிருந்து 25 கிலோ மீற்றர் தூரம் பயணித்து பரீட்சார்த்திகள் செல்ல வேண்டியுள்ளதால், போக்குவரத்து வசதியின்மை, பொருளாதார நெருக்கடி, இதர அசௌகரியங்கள் என்பன குறித்து முசலிப் பிரதேசத்தில் வசிக்கும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின்  பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை சந்தித்து முறையிட்டிருந்தனர். 


இது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் கல்வியமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்து ,உரிய நடவடிக்கை மேற்கொண்டதன் பயனாக ,அது பற்றி அலசி ஆராயப்பட்டதன் பின்னர்,முசலிப் பிரதேசத்தில் வசித்து வரும்  எதிர்வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள்  முசலி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில்(சிலாவத்துறை) அமைக்கப்படும் பரீட்சை நிலையத்திலேயே அதனை எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அது குறித்து கல்வி அமைச்சு, ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு கடிதம் மூலம் அறிவித்திருப்பதாக , கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.