Header Ads



வெள்ளைத் துணி ஏந்திய தனது நாட்டு, பணயக் கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் - அமெரிக்காவும் அதிர்ச்சி


இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது.


உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது.


கொல்லப்பட்ட மூன்று பணயக் கைதிகளை தங்களது கையில் வெள்ளைத் துணியை வைத்திருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி. இது ராணுவ விதிமீறல் என்பதால், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது.


இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.


"காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி" என்றும் ராணுவம் கூறியுள்ளது.


இஸ்ரேல் ராணுவத்தின் தவறான தாக்குதலைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த கொலைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, அந்நகரில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.


எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஆயுதக் குழுவுடன் அரசு சமரசம் செய்துகொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி மற்றும் சுவரொட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சுவரொட்டிகளில் “அவர்களை வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” மற்றும் “இப்போது பணயக் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுங்கள்,” என்று எழுதப்பட்டுள்ளது.


இறந்தவர்களின் உடல்கள் இஸ்ரேலை அடைந்துள்ளன. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கும் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.


ராணுவத் தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேதனை தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த மரணங்களை 'தாங்க முடியாத சோகம்' என்று வர்ணித்துள்ளார்.


"இந்தக் கடினமான வேளையில்கூட, நமது காயங்களைக் குணப்படுத்துவோம், பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.


மேலும் எங்கள் நாட்டுப் பணயக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்," என்று அவர் கூறியுள்ளார்.


இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இஸ்ரேலிய ராணுவத்தின் இந்தக் கொலைகள் ஒரு பெரிய தவறு என்றும், இந்த நடவடிக்கை எப்படி நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் அமெரிக்காவிடம் இல்லை என்றும் கூறினார்.


ஹமாஸின் ஆக்கிரமிப்பில் இருந்து பணயக் கைதிகளை விடுவிக்க பயன்படுத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். ஹமாஸால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்களில் ஹான் அவிக்டோரியும் ஒருவர்.


"பணயக் கைதிகளை ராணுவத்தின் மூலம் மீட்க முடியும் என்று மக்கள் கூறுவதை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் அவர்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வர எந்த ராணுவ நடைமுறையும் பின்பற்றப்படவில்லை," என்று அவர் கூறினார்.


அவர் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் எழுதியபோது, இஸ்ரேல் தனது மக்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


காஸா பகுதி மக்கள் மீதான தாக்குதல் முழுமையாக நிறுத்தப்படும் வரை பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை என ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக கொல்லப்பட்ட மூன்று பணயக் கைதிகளை தங்களது கையில் வெள்ளைத் துணியை வைத்திருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி.


வெள்ளைத்துணியை கையில் வைத்திருப்பவர்களை கொல்வது என்பது தங்களது விதிகளுக்கு எதிரானது என்றும், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


இச்சம்பவத்தால், காஸாவில் உள்ள பணயக்கைதிகளை மீட்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் பிரதமர், ராணுவ அழுத்தங்கள் அவசியம் எனக் கூறியுள்ளார்.


“பணயக்கைதிகளை மீட்பதற்கும் வெற்றி பெறுவதற்கும் ராணுவத்தின் அழுத்தம் அவசியம். ராணுவம் இல்லாமல், இங்கு எதுவும் இல்லை,” எனக் கூறியுள்ளார்.


அதேநேரத்தில், ஹமாஸ் ஆயுதக்குழுவினர், தங்களது மக்கள் மீதான தாக்குதல் முழுமையான நிறுத்தப்படும் வரை, பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என தங்களது இடைத்தரகர்களிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர், இச்சம்பவம் பற்றி விவரித்தார். அப்போது, கொல்லப்பட்ட மூன்று பணயக்கைதிகளும் மேலாடை இல்லாமலும், அதில் ஒருவர் ஒரு குச்சியில் வெள்ளைத் துணியைக் கட்டி, அதனை கையில் பிடித்திருந்ததாகக் கூறினார். BBC

No comments

Powered by Blogger.