Header Ads



அல்லாஹ் சொன்ன வார்த்தை, கண்கூடான அத்தாட்சியாக அமைந்தது - பாத்திமா சபரிமாலா


*திருக்குர்ஆன்* படிப்பது என்பது மிகப்பெரிய சவாலான வேலையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.


 40 வயதில் குர்ஆன் படிக்க முடியுமா? ஒரு புது மொழியை கற்றுக்கொண்டு புது எழுத்துக்களை கற்றுக்கொண்டு படிக்க முடியுமா? என்பது என்னுடைய மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.. 


ஆனால் அல்லாஹ் நம்மை படைத்தவன் சொன்ன சத்தியமான வார்த்தை ..நான் திருக்குர்ஆனை லேசாக்கி வைத்திருக்கிறேன்.. என்பது ..அதற்கான கண்கூடான அத்தாட்சியாக என்னுடைய இந்த குர்ஆன் படிக்கின்ற அனுபவம் அமைந்திருந்தது.


 90 நாட்களில் குர்ஆன் ஓதி முடித்த அனுபவம் எப்படி எல்லாம் உள்ளத்தை தூய்மை செய்திருக்கிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று ..அது உணர்ந்தால் மட்டுமே புரியக்கூடிய *சத்தியத்தின் வெளிச்சம்* ..எனக்கு இந்த மிகப்பெரிய பாக்கியத்தை தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் ..


அவன் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் அறிந்து கொண்டும் இருக்கிறான் ஒவ்வொன்றையும் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான். என்பதை இந்த பயணம் எனக்கு இன்னும் வலிமையாக உணர்த்தியது.. 


குரானை எழுத்துக்களின் கோர்வையாக படிக்காமல் அதை பொருள் உணர்ந்து படிக்க வேண்டும் என்ற தாக்கம் வழிநெடுக எனக்கு இருந்து கொண்டே இருந்தது.. அந்த பயணத்தை தொடங்கி இருக்கிறேன் ..


நான் இஸ்லாம் அறிந்த காலகட்டத்தில் இருந்தே திருக்குர்ஆனை பொருள் தெரிந்து அதனுடைய தப்ஸீர் விளக்கங்கள் தெரிந்து படிப்பதில் மிக கவனமாக இருக்கிறேன்.. ஏனென்றால் பொருள் தெரியவில்லை என்றால் இறைவன் என்ன சொல்ல வருகிறான் என்கிற புரிதல் நமக்கு இல்லாமல் போய்விடும் ..புரிதல் இல்லை என்றால் அதை நம்மால் பயிற்சி செய்ய முடியாது.. 


எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் கேட்ட உஸ்தாதுகள் மிகச் சிறப்பானவர்கள்.. என்னுடைய உளவியல் தெரிந்து முக்கியமான இடங்களில் நிறுத்தி அந்த வரலாற்றை சொல்லி என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்.. 


குறிப்பாக சில விடயங்கள் ..உமர் *ரலியல்லாஹு அன்ஹு* அவர்கள் ஹிதாயத் பெற்ற நேர்வழியைப் பெற்ற அதற்குக் காரணமாக இருந்த.. அவருடைய தங்கை ஓதிக் கொண்டிருந்த வசனங்கள் வந்த இடம்..  தமிழில் பொருள்படுத்தி எவ்வளவு நேரம் கண்ணீர் வடித்தேன் என்பது அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்.. என் *கை சேதமே* ..என்று பொருள்படக்கூடிய இடம் வந்தபோது எவ்வளவு நேரம்  கண்ணீர்  சிந்தினேன் என்பதை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான். 


*லுஹா* சூரா வந்தபோது அதற்கான விளக்கத்தை படித்து எவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தேன் என்பதை இறைவன் அறிந்தவனாக இருக்கிறான் ..இந்த கண்ணீரெல்லாம் உள்ளத்தில் இருக்கும் பலவீனத்தை கரைத்து உள்ளத்தை தூய்மைப்படுத்திய அற்புதமான தருணங்கள்.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.. 


திருக்குர்ஆனை பொருள் விளங்கி படியுங்கள்.. எங்கெல்லாம் உங்கள் உள்ளத்தை திருக்குர்ஆன் உலுக்குகிறதோ அங்கே எல்லாம் நின்று நிதானித்து கண்ணீர் வடித்து.. உங்களை நீங்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.. சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது என்பது மிகப்பெரிய பாக்கியம்.. அப்படிப்பட்ட சிறந்த ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள்.. அவர்கள் அத்தனை பேருக்கும் நான் துவா செய்கிறேன்.. திருக்குர்ஆனை அடித்தோ தண்டனைகள் கொடுத்தோ பரீட்சை நடத்தியோ படிக்க வைத்து விட முடியும் பின்பற்ற வைத்து விட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.. 


*திருக்குர்ஆனை அன்பின் வழியில் தான் கற்றுக் கொடுக்க முடியும்..* அல்லாஹ்வுக்காக கற்றுக் கொடுக்கிறேன் என்ற வழியில் நின்று மட்டும்தான் கற்றுக் கொடுக்க முடியும்.. திருக்குர்ஆனை தன் வாழ்க்கையில் அப்படியே கடைபிடிக்க கூடியவர்கள் கற்றுக் கொடுத்தால்தான் அந்தப் பாடம் பிள்ளைகளுக்கு வாழ்க்கை பாடமாக அமையக்கூடும்.. இல்லை என்றால் அதுவும் ஒரு புத்தகம் அவ்வளவுதான்.. 


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.. எனவே அப்படி இபாதத்தோடு  ஆறுதலோடு அரவணைத்து பாடம் கற்பித்து தந்த என்னுடைய நான்கு உஸ்தாதுகளுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் நான் நிறைய துவா செய்கிறேன்.. வல்ல ரஹ்மான் கருணையாளன் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.. இந்த உலகத்தில் யாரெல்லாம் திருக்குர்ஆன் படித்திருக்கிறார்களோ அதன் பொருளை விளங்கி இருக்கிறார்களோ அதன்படி நடக்கிறார்களோ அவர்களுக்கு திருக்குர்ஆனுடைய வெளிச்சம் கிடைத்திருக்கிறது என்று பொருள்.. யாரெல்லாம் அந்த வெளிச்சம் கிடைக்க பெற்று இருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாக்கியசாலிகள்.. *சுவனவாசிகள்* ... 


யாரெல்லாம் திருக்குர்ஆனை வெறும் புத்தகமாக மட்டும் அறிந்திருக்கிறார்களோ அவர்களுக்கும் இறைவன் நேர்வழியை தர வேண்டும் என்று துவா செய்கிறேன்.. யாரெல்லாம் திருக்குர்ஆனை இன்னும் அறியாமல் இருக்கிறார்களோ அவர்களெல்லாம் அறிவதற்கு இறைவன் நம் யாவரையும் கருவியாக்க வேண்டும் என்றும் நான் துவா செய்கிறேன். ஏனென்றால் 3000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை படிக்கிற பாக்கியத்தை தந்த கருணையாளனுக்கு முன் மண்டியிட்டு சொல்கிறேன்.. *திருக்குர்ஆன் போல் ஒரு புத்தகம் இல்லை* ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.. யா அல்லாஹ் எங்களை நீ பொருந்தி கொள்வாயாக


சமூக ஆசிரியர்

 ஃபாத்திமாசபரிமாலா


1 comment:

  1. மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களை போரிந்திக்கொல்வானாக

    ReplyDelete

Powered by Blogger.