Header Ads



அலுபோமுல்ல பிங்கியை பிடித்து, விசாரித்த போது...?


(அததெரன)


கட்டாருக்கும் இலங்கைக்கும் இடையில் பாரிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அலுபோமுல்ல பிங்கி என்பர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 04 பேர் கைது செய்யப்பட்டதாக அலுபோமுல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


ரம்புக்கனை, பண்டாரகம, அலோபோமுல்ல மஹபெல்லான ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.


பிரதான சந்தேகநபர் தொழில் எதுவுமின்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், பல சொகுசு கார்களை பாவிப்பதாகவும், மூன்று மாடி கட்டிடங்கள் உட்பட பல சொத்துக்களுக்கு உரிமையாளர் எனவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகித்த அலோபோமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அசங்க ராஜகருண விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.


இதன்படி, சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு சுமார் 02 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது கையடக்கத் தொலைபேசிகளையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அப்போது, ​​அவரது அலைபேசிக்கு பல குறுஞ்செய்திகள் வந்தன.


அவரது கையடக்கத்தொலைபேசியை ஆய்வு செய்ததில், கட்டார் மற்றும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புகைப்படங்கள், பண பரிவர்த்தனை ரசீதுகள், தொலைபேசி உரையாடல்கள், கூகுள் வரைபடம் உள்ளிட்ட பல தகவல்கள் இருப்பது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்படி சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளுக்கு அமைய கடத்தலில் ஈடுபட்ட ஏனைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு வருட காலப்பகுதியில் 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி சந்தேகநபரின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

   

பிரதான சந்தேக நபரும் அவரது பிரதான உதவியாளரும் கட்டாரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட இருவர் எனவும், பிரதான சந்தேகநபர் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர்களிடம் இருந்து 22 கிராம் ஹெரோயின், ஒரு சொகுசு கார், இரண்டு முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.