Header Ads



மருந்து இறக்குமதியில் ஊழல் - ஒப்புக்கொள்ளும் இராஜாங்க அமைச்சர்


இலங்கையின் 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் இறக்குமதி செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “தற்போது, நாட்டில் உள்ள வைத்திய சாலைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்குத் தேவையான தரமான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.


தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சிகிச்சை மற்றும் பராமரிப்பு பணிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, அடுத்த ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளைக் கொண்டு எதிர்வரும் வருடத்தில் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.


அத்துடன், சுகாதார அமைச்சில் பல கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த வாரம் சில மாற்றங்களைச் செய்தோம். அடுத்த வாரத்திலும் இதுபோன்ற சில மாற்றங்களைச் செய்ய தயாராக இருப்பதுடன் மனித வளங்கள், சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றங்களைச் செய்யவும் எதிர்பார்க்கிறோம். மருந்துக் கொள்வனவு செயல்முறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.


குறிப்பாக, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக, மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான விசேட வழிகாட்டுதல்களை வெளியிடுதல் மற்றும் அதற்கென தனியான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மருந்து இறக்குமதியின் போது இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் பிற சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தவிர்க்க முடியும்.


நாட்டில் உள்ள மருந்துகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்தல், அவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் பணியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


சுகாதாரத் துறையில் தாக்கம் செலுத்தும் மனித வள மேலாண்மைக்காக பிரபலமற்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக, பதவிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த ஒவ்வொரு மாற்றங்களுடனும், தற்போது மருந்துகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்”என தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.