அஹ்னாபை விடுதலை செய்ய உத்தரவிட்டு, நீதிபதி கூறிய விடயங்கள்
( எம்.எப். அய்னா)
அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசிரியருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்த்து, அவர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வழக்குத் தொடுநர் தரப்பு, அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக கொண்டுவந்த, குற்றச்சாட்டினை நிரூபிக்க முடியாமல் போனதால், அவரை விடுவித்து விடுதலை செய்வதாக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்த்துருகொட நேற்று முன் தினம் (12) அறிவித்தார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், அஹ்னாப் ஜஸீம் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை தூண்டி, பிற மதத்தவர்கள் மீது பகைமை உணர்வை தூண்டியதாக முன் வைத்த குற்றச்சாட்டுக்கள், சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்க முடியாமல் போயுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் கற்பித்த பாடசாலையின் அதிபர், மாணவர்கள் என 5 பிரதான சாட்சியங்கள் ஊடாகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை நிரூபிக்க முடியாமல் போனதால், குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 200 ஆவது அத்தியாயம் பிரகாரம், பிரதிவாதி தரப்பு நியாயங்களை கோராமலேயே அவரை விடுவித்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக வழக்கை தொடுத்த சட்ட மா அதிபர், இவ்வழக்கின் சாட்சியங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படாத நிலையில் இந்த வழக்கை முன் கொண்டு செல்வதா இல்லையா என தீர்மானம் ஒன்றுக்கு வர கால அவகாசம் பெற்றுக்கொண்டு கடந்த நவம்பர் 27 இல் நடந்த வழக்கு விசாரணையின் இடையே, வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சி விசாரணைகளை நிறைவு செய்வதாக அறிவித்திருந்தார். அரச சட்டவாதி உதார கருணாதிலக இதனை அறிவித்திருந்த்தார்.
இதனையடுத்து சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், அஹ்னாப் ஜஸீம் சார்பில் வாதங்களை முன் வைத்து, வழக்குத்தொடுநர் தரப்பு குற்றச் சாட்டுக்களை நிரூபிக்க தவறியுள்ள நிலையில், குற்றவியல் சட்டத்தின் 200 ஆவது அத்தியாயம் பிரகாரம் பிரதிவாதி தரப்பு நியாயங்களை கோராமலேயே அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரினார்.
இதனையடுத்தே இந்த வழக்கு நேற்று முன் தினம் 12 தீர்ப்புக்காக விசாரணைக்கு வந்தது. இதன்போது அஹ்னாப் ஜஸீம் சார்பில் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர தலைமையில் சட்டத்தரணிகளான சாஜித் மற்றும் ஹுஸ்னி ராஜிஹ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
இதன்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, முறைப்பாட்டாளர் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியுள்ளதாக அஹ்னாப் ஜஸீமை அவர் தரப்பு நியாயங்களை கோராமலேயே விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து அஹ்னாப் சார்பில் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர, குற்றவியல் சட்டத்தின் 17 ஆம் அத்தியாயம் பிரகாரம் நட்ட ஈடு கோரி விண்ணப்பம் செய்தார். அதனை நிராகரித்த நீதிமன்றம் நட்ட ஈட்டினை பெற்றுக்கொள்ள உரிய நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்தது.
இதனைவிட, அஹ்னாப் கைது செய்யப்படும் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட அவரது மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி, நவரசம் புத்தகத்தின் 150 பிரதிகள் உள்ளிட்ட பொருட்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றில் கோரப்பட்டது. எனினும் அந்த ஒரு பொருளும் புத்தளம் மேல் நீதிமன்ற வழக்காவணத்தில் கோவை இடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, வழக்கு கோவையை பரிசீலுக்கும் போது கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றிலேயே அவை பட்டியலிடப்பட்டுள்ளமை தெரிவதாக குறிப்பிட்டார்.
அதனால், அஹ்னாப் ஜஸீம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்த மேல் நீதிமன்ற தீர்ப்பை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக அறிவித்து, அப்பொருட்களை விடுவித்துக்கொள்ளுமாறு நீதிபதி ஆலோசனை வழங்கினார்.
பின்னர் நீதிமன்றுக்கு வெளியே ஊடகவியலாளர்களை அஹ்னாப் ஜஸீம் தனது சட்டத்தரணிகளுடன் சந்தித்த நிலையில், தனது விடுதலைக்காக உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக புத்தளம் மேல் நீதிமன்ற வழக்கை கையாண்ட தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், இல்லியாஸ், ஆரம்பம் முதல் சட்ட உதவிகளை செய்த சட்டத்தரணி சஞ்ஜய வில்சன் ஜயசேகர ஆகியோருடன் சட்டத்தரணிகளான ஹுஸ்னி ராஜிஹ், சுவஸ்திகா அருலிங்கம், ரத்நாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
அஹ்னாப் ஜஸீம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் பீ. 44230/20 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணை தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதனை மையப்படுத்தி சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இறுதியாக கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி வெள்ளியன்று விசாரணைக்கு வந்த போது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக்க மன்றில் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீமுக்காக சட்டத்தரணிகளான சஞ்சய் வில்சன் ஜயசேகர, ஹுஸ்னி ராஜிஹ் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜராகியிருந்த்தார்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி, அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புத்தளம் – மதுரங்குளி பகுதியில் உள்ள எக்ஸலென்ஸி எனும் பெயரை உடைய பாடசாலை மாணவர்களுக்கு தீவிரவாத கொள்கைகளை ஊட்டி இன , மத, முரண்பாடுகள் மற்றும் பகை உணர்வினை தூண்டியதாக அதில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli
Post a Comment