Header Ads



சிகிச்சை பெறாமல் வீடு திரும்பும் நோயாளர்கள், இயங்க மறுக்கும் இயந்திரங்கள்


ஒரு நாளேனும் மேலதிகமாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு அதிகளவிலான நோயாளர்கள் வந்து செல்கின்றனர். 


எனினும், இந்த வைத்தியசாலையின் அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் சங்கம் மேலதிக நேர கடமையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற இந்த தொழிற்சங்க நடவடிக்கையால், அநேகமான நோயாளர்கள் சிகிச்சை பெறாமலேயே வீடு திரும்ப நேரிட்டுள்ளது.


மேலதிக நேர கடமைக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவு குறைக்கப்பட்டமையே இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது.


காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கடமைகள் வழமை போன்று இடம்பெறுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டார். 


எனினும், அதன் பின்னரான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், தன்னார்வமாக குறித்த காலப்பகுதியில் சிறுவர்களுக்கான சிகிச்சைகளையும் அத்தியாவசிய, அவசர கதிரியக்க சிகிச்சைகளையும் மாத்திரம் மேற்கொள்வதாக சானக்க தர்மவிக்ரம சுட்டிக்காட்டினார். 

 

சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்கள் ஒருபுறம் நிர்கதியாகியுள்ள நிலையில், வைத்தியசாலைகளில் உள்ள அத்தியாவசிய இயந்திரங்கள் செயலிழந்துள்ளமையாலும் அவர்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. 


குருநாகல் வைத்தியசாலையின் CT Scan இயந்திரம் செயலிழந்து ஆறு மாதங்களாகின்றன.


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துகள் பிரிவில் உள்ள இரண்டு கதிரியக்க இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்த நிலையில், அந்த இயந்திரங்கள் வழமைபோன்று இயங்குவதாக சுகாதார அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.


சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித்த மஹிபால தேசிய வைத்தியசாலைக்கு நேற்றிரவு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் புதிய, பழைய கட்டடங்களில் இரண்டு CT Scan  இயந்திரங்கள் இருப்பதுடன், அவற்றில் ஒன்று தற்போது செயலிழந்துள்ளது.


இந்த பிரச்சினைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வினவுவதற்கு சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித்த மஹிபால, சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன ஆகியோரை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் இன்று மாலை வரை பலனளிக்கவில்லை.


No comments

Powered by Blogger.