Header Ads



ஜனாஸாக்கள் தொடர்பில் விஜயதாசா, ஹக்கீமிடம் வழங்கிய வாக்குறுதி


நாட்டில் மரணங்கள் சம்பவிக்கும்போது சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் மரண விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக சில பிரதேசங்களில்  தேவையற்ற விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படுவதை நிறுத்தி, அவர்களுக்கு நியாயம் வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார் .


நீதி அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் கடந்த சனிக்கிழமை(2) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே முன்னாள் நீதி அமைச்சர்களில் ஒருவரான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதனை தற்போதைய நீதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார் .


அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,


 மரண விசாரணை அதிகாரிகள் கடந்த பல்லாண்டு காலமாக மிக பொறுப்பு வாய்ந்ததொரு காரியத்தை நிறைவேற்றி வருகிறார்கள் .அவர்களை கண்காணிப்பது என்ற போர்வையில் நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் அவர்களுக்கு எதிராக முறையற்ற விதத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக அறியக் கிடைக்கின்றது.


இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கம் (Coroners Association of Sri Lanka) அதன் உறுப்பினர்கள்  நடத்தப்படும் மீதம் குறித்தும், அவர்களது நிலைமையைச் சுட்டிக்காட்டியும் நீண்ட மகஜர் ஒன்றைத் தயாரித்திருந்தது.அதை முன்வைத்தே அவர்களுக்கு நியாயம் வழங்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதி அமைச்சரிடம் பாராளுமன்றத்தில் இந்த வேண்டுகோளை விடுத்தார். 


இறந்தவரின் நோய் நிர்ணய அட்டை ,மருத்துவ  குறிப்புகள் மற்றும் நம்பத்தகுந்த போதிய சாட்சியங்கள் என்பன இருந்தால், கட்டாயமாக உடற்கூற்று பரிசோதனை நடத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தமற்ற சடலங்களை விடுவிக்கும் அதிகாரம் மரண  விசாரணை அதிகாரிகளுக்கு இருக்கின்றது .ஆயினும், அவர்கள் சரியான முறையில்  நடந்து கொள்ளும் போதிலும்,  தேவையற்றவிதத்தில்  குறை கண்டு அவர்கள் மீது  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் முயற்சிப்பதாகவும்,அதனை பற்றி கண்டறிந்து முக்கியமான ஒரு பொறுப்பை நிறைவேற்றுகின்ற மரண விசாரணை அதிகாரிகளுக்கு  அநீதி இழைக்காதவாறு  இதில் நியாயமான ஒரு முடிவை மேற்கொள்ளுமாறும்  பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் நீதியமைச்சரிடம்  வேண்டுகோள் விடுத்தார் .


பொதுவாக மரண விசாரணை அதிகாரியின் தீர்மானத்தைப் பொறுத்து சந்தேகம் இல்லாத மரணங்கள் விரைவாக விடுவிக்கப்படுவதாகவும், குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள்  நல்லடக்கம் செய்யப்பட வேண்டிருப்பதால்,அவற்றை விடுவிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும்,பிரஸ்தாப மகஜரில் உள்ள விடயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுமென்றும் நீதி அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.