Header Ads



இஸ்ரேலை மிரட்ட இஸ்லாமிய நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தாதது ஏன்..?


- BBC -


இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு அரபு நாடுகள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எண்ணெய் விற்பனையை நிறுத்தினால், அது உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று ஊகங்கள் உள்ளன.


இது உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் பணவீக்கத்தின் புதிய அலையை பரப்பும். மேலும் இது ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஆழமாக பாதிக்கும்.


கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-யுக்ரேன் போர் என, இரண்டு பெரிய உலகளாவிய அதிர்ச்சிகளில் இருந்து பொருளாதாரம் மீளத் தொடங்கியுள்ள நிலையில், இதுவும் கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.


இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எண்ணெய் விற்பனை செய்வதிலிருந்து ஒபெக் நாடுகள் விலகுவது உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை சீர்குலைக்கும்.


இரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லியன் கடந்த மாதம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) கூட்டத்தின்போது, இஸ்ரேலை முழுமையாக புறக்கணித்து எண்ணெய் விநியோகத்தை நிறுத்துமாறு இஸ்லாமிய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.


ஆனால் ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள் உட்பட மற்ற நாடுகள் இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. உண்மையில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எண்ணெய் விற்பதை அவர்களால் நிறுத்த முடியுமா?


1970-இல் அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு, உலகம் முழுவதும் எண்ணெய் விலை நான்கு மடங்கு அதிகரித்தபோது எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவதற்கு ​​எடுத்த முடிவை அரபு நாடுகள் மீண்டும் செய்ய முடியுமா?


1970-இல் எடுக்கப்பட்ட முடிவால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. எண்ணெய் பங்கீட்டு முறை காரணமாக பல நாடுகள் மந்தநிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.


இஸ்ரேலுக்கு எங்கிருந்து எண்ணெய் கிடைக்கிறது?


இஸ்ரேல் தனது எண்ணெய் தேவை முழுவதையும் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது. ஆனால், அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தைத் தடை செய்தால், அது உடனடி மற்றும் பகுதியளவு தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.


ஏனெனில், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இரானிடம் இருந்து இஸ்ரேல் எண்ணெய் வாங்குவதில்லை.


மாறாக, கஜகஸ்தானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. அஜர்பைஜான் இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் விநியோக நாடாகும். நைஜீரியாவும் இஸ்ரேலுக்கு குறிப்பிடத்தக்க அளவில் எண்ணெய் வழங்குகிறது.


இரானின் வலியுறுத்தலுக்குப் பிறகு, ப்ரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 91.50 டாலர்களில் இருந்து 93 டாலராக அதிகரித்தது. இதன் காரணமாக, இரானின் வலியுறுத்தலின் பேரில், இஸ்ரேலுக்கு எதிரான எண்ணெய் தடைக்கு இஸ்லாமிய நாடுகள் உடன்படக்கூடும் என்ற அச்சம் அதிகரிக்கத் தொடங்கியது.


பெட்ரோலிய ஏற்றுமதிகளைக் கண்காணிக்கும் Kpler என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் விக்டர் கட்டோனா கூறுகையில், "இரானின் வேண்டுகோளின் பேரில் சௌதி அரேபியா மேற்கத்திய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகத்தை நிறுத்தினால், அது மிகப்பெரிய நடவடிக்கையாக இருக்கும். ஆனால், இப்போது ஒபெக் நாடுகள் இதற்கு ஒப்புக்கொள்வது சாத்தியமில்லை" என்றார்.


நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?


"1973 அரபு-இஸ்ரேல் போரின்போது அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியதிலிருந்து இப்போது நிலைமை வேறுபட்டது" என்கிறார், நார்த் ஈஸ்டன் பல்கலைக்கழகத்தின் லண்டன் வளாகத்தின் இணைப் பேராசிரியர் பாப்லோ கால்டெரோன் மார்டினெஸ். தற்போது எண்ணெய் விலை உயரவில்லை. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் மேலும் மூளும் பட்சத்தில் விலை அதிகரிக்கலாம்.


“போர் தீவிரமடைந்து அமெரிக்கா, ஐரோப்பா, இரான் ஆகிய நாடுகள் இணைந்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும்” என்கிறார் அவர். இதுபோன்ற சூழ்நிலையில் எண்ணெய் விலை அதிகரிக்கலாம். ஆனால் அது கடினம்.


தற்போது உலகில் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. 2020-ஆம் ஆண்டில், அமெரிக்கா எண்ணெயை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.


இருப்பினும், மற்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து மலிவான விலையில் எண்ணெயை வாங்குவதன் மூலம் எண்ணெய் இருப்பை அமெரிக்கா வலுப்படுத்துகிறது. எனவே, எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா மற்ற நாடுகளை சார்ந்திருப்பது இஸ்ரேலுக்கும் நிம்மதி அளிக்கும் விஷயமாகும்.


1973-இல் அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு விதிக்கப்பட்ட அரபு நாடுகளின் எண்ணெய் தடைக்குப் பிறகுதான் அமெரிக்கா எண்ணெய் விநியோகத்திற்கான மாற்று ஆதாரங்களைத் தேடத் தொடங்கியது.


தன் நாட்டில் எண்ணெய் உற்பத்தி செய்வது, மற்ற அரபு நாடுகளில் இருந்தும் விநியோகத்தை அமெரிக்கா உறுதி செய்து வருகிறது.


ரஷ்யா - யுக்ரேன் போரால் மேற்கு நாடுகள் எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிவாயு இழப்பை சந்தித்துள்ளதால் தற்போது எண்ணெய் விலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


"உண்மையில், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, ஒட்டுமொத்த உலகமும் பொருளாதாரத்தை உயர்த்த செலவழிப்பதில் கவனம் செலுத்தியபோது, ​​​ரஷ்யா-யுக்ரேன் போர் வெடித்தது. இதன் காரணமாக வளங்களைச் செலவழிப்பதற்குப் பதிலாக அவற்றைச் சேமிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியது. இருப்பினும், தற்போது வட்டி விகிதம் குறைவாக உள்ளதால் பணவீக்கத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில் எண்ணெய் விலை அதிகரித்தாலும் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும்” என மார்டினெஸ் கூறுகிறார்.


இருப்பினும், இஸ்ரேலைப் பொறுத்த வரையில், ஹமாஸுடனான அதன் போர் தொடர்ந்தால், மற்ற அரபு நாடுகளும் அதனுடன் இணைந்தால், அதன் நிலைமை சிக்கலானதாக மாறும். ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்கள் வரும் இஸ்ரேலின் துறைமுகங்கள் தாக்குதலில் குறிவைக்கப்படும்.


1950-களில் இருந்து, அரபு நாடுகளும் இரானும், சர்ச்சைக்குரிய பாலத்தீனப் பகுதியில் ராணுவ மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் வெடித்ததால், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக எண்ணெயை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது பற்றி விவாதித்து வருகின்றன.


இரண்டு முறை எண்ணெய் விநியோகத்தையும் நிறுத்தினார். முதலில் 1967-இல் ஆறு நாள் போரின் போதும் ​​பின்னர் 1973-இல் யோம் கிப்பூர் போரின் போதும் விநியோகத்தை நிறுத்தினர். முதல் தடை பலனளிக்கவில்லை. ஆனால் இரண்டாவது தடை ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது.


மேற்கத்திய நாடுகளும் அரபு நாடுகளும் இச்சம்பவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டன. எனவே, இப்போது யாரும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது பற்றி பேசுவதில்லை என்பதோடு யாரும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.


50 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேலை யாரும் தாக்க மாட்டார்கள் என்று நம்பினர். அதேபோல், அமெரிக்காவும் அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தாது என்று நம்பியது. ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் நடந்தன.


இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பத்து நாட்களுக்குப் பிறகு, அரபு நாடுகள் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் பல மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தின. இது மட்டுமின்றி பாரசீக வளைகுடாவின் ஷேக், இரானின் ஷா-வும் எண்ணெய் விலையை 70 சதவீதம் உயர்த்த ஒப்புக்கொண்டனர்.


ஒருபுறம், எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதாலும் மறுபுறம், அரபு நாடுகளின் உற்பத்தி குறைப்பாலும் எண்ணெய் விலை ஐந்து மடங்கு அதிகரித்தது. அந்த ஆண்டுகளில், உலகின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக எண்ணெய் இருந்தது மற்றும் அதன் விலை உயர்வு காரணமாக, உலகப் பொருளாதாரம் சிக்கலில் இருந்தது.


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அதிசயிக்கத்தக்க அளவில் வளர்ந்துவரும் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரங்கள் ஸ்தம்பித்தன.


1973 மற்றும் 1975-க்கு இடையில் அமெரிக்கப் பொருளாதாரம் ஆறு சதவீதம் சுருங்கியது மற்றும் வேலையின்மை விகிதம் ஒன்பது சதவீதமாக அதிகரித்தது.


இதேபோல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் முறையாக சரிந்தது. ஆனால், தாங்களாகவே எண்ணெய் உற்பத்தி செய்யாத இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டன.


வளர்ந்த மேற்கத்திய நாடுகள் 1976-இல் மீண்டும் முன்னேற்றப் பாதையில் சென்றன. ஆனால், அவை பல ஆண்டுகளாக பணவீக்கத்தின் சுமையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.


இதற்குக் காரணம் எண்ணெய் தடை மட்டுமல்ல, மந்தநிலையும் பணவீக்கமும் போருக்கு முன்பே அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்த நெருக்கடி ஆழமடைந்தது.


ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 18, 1974 அன்று, இந்தத் தடை இரண்டு முக்கிய காரணங்களுக்காக நீக்கப்பட்டது.


முதலாவதாக, இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் தங்கள் எண்ணெய்க்கான தேவை முடிவுக்கு வருவதை அரபு நாடுகள் விரும்பவில்லை.


அமெரிக்காவும் ஐரோப்பாவும் மத்திய கிழக்கின் எண்ணெய் பற்றாக்குறைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தொடங்கின.


எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகள் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களின் சந்தையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தன. அவர்கள் அதிக விலையை விரும்பத் தொடங்கினர். மேலும், தங்கள் வாடிக்கையாளர்களை அவர்கள் தவிர்க்க விரும்பவில்லை.


இரண்டாவது காரணம், எண்ணெய் தடையின் முக்கிய நோக்கத்தை அவர்களால் ஒருபோதும் அடைய முடியவில்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து உதவியது.


அரபு நாடுகளின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா, உடனடியாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியது.


இதன் விளைவு பெட்ரோலியத்திற்கான தேவை ஏழு சதவீதத்தில் இருந்து பூஜ்ஜிய சதவீதமாக குறைந்து, இறக்குமதி குறைந்தது.


அடுத்த 3-4 ஆண்டுகளில், பணவீக்கம் 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது, வேலையின்மை அதிகரித்தது மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின.


1971-இல் பாகிஸ்தானுடனான போரின் தாக்கம் மற்றும் 1972 மற்றும் 1973-இல் இரண்டு தொடர்ச்சியான தோல்வியுற்ற பருவமழை, எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து 1975-இல் அவசரநிலை காலக்கட்டம் உருவானது.

No comments

Powered by Blogger.