Header Ads



தபால் பணிகள் முடக்கம், மக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்


- ஏ.எச்.ஏ. ஹுஸைன்


அஞ்சல்  தொலைத் தொடர்பு தொழிற் சங்கங்கள் நாடளாவிய ரீதியில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளன. திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களும் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நுவரெலியாவிலும் கண்டியிலும்  உள்ள 100 வருடங்களைத் தாண்டிய புராதன தபால் நிலையங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை விலக்கிக் கொள்ள வேண்டும்  மற்றும்; அஞ்சலகப் பணியாளர்களுக்கு 20000.00 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சலக ஊழியர்களும் இணைந்து கொண்டதினால் தபால் சேவைகளும் தபாலகத்தினூடாக வழங்கப்படும் இன்னபிற சேவைகளும் முடங்கியுள்ளன.


தபாலகங்களை நோக்கி சேவையை நாடி வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது.


கடந்த 130 வருடங்களுக்கு மேலாக நுவரெலியாவிற்கும் முழு இலங்கைக்கும் தபால் சேவையின்  அடையாளச் சின்னமாகத் திகழும் நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக இவ்வாறான போராட்டம் கடந்த நொவெம்பெர் 08ஆம் 09ஆம் திகதிகளில் இடம்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.


நுவரெலியாவிலுள்ள பிரதான பெரிய அஞ்சல் நிலையம்  ஆங்கிலேயர்களின் பாரம்பரி தொழினுட்ப திறமைகளைக் கொண்டு சிவப்பு செங்கல்லினால் நிருமாணிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இங்கிலாந்தின் (SAINSBURY WACTHAMSTO) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுமார் 40 அடி உயரம் கொண்ட அழகிய கடிகாரம், பித்தளை மற்றும் உருக்கினால் அமைக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபட்ட கட்டிட மூலப்பொருட்களைக் கொண்டே இவ்வழகிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிட நிருமாணத்திற்கு தேக்கு மரங்களே உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.


இலங்கையின் புராதன வரலாற்றைப் பிரதிபலிக்கும் விலைமதிப்பற்ற புராதனச் சொத்தாக நுவரெலியா தபால் நிலையக் கட்டிடம் கருதப்படுகின்றது.


இந்தக் கட்டிடத் தொகுதியை  இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்தே அஞ்சல் தொழில் சங்கத்தினர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இப்பொழுது போராட்டத்தில் சம்பள உயர்வுக் கோரிக்கையும் இடம்பிடித்துள்ளது.

No comments

Powered by Blogger.