Header Ads



இலங்கைக்குள் சீன கப்பலை அனுமதிக்காதீர்கள் - இலங்கை, மாலைத்தீவிடம் இந்தியா கோரிக்கை


இலங்கை கடற்பிராந்தியத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வரும் சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


சீன ஆய்வுக் கப்பலான  Xiang Yang Hong 03 கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை   தென்னிந்திய கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளது. 


இலங்கை மற்றும் மாலைத்தீவுகளின்  கடற்பரப்புகளும் அதில் அடங்குகின்றன.


இலங்கையிடமும் மாலைத்தீவுகளிடமும் தமது கப்பலின் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளதாக   ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எனினும், இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக Hindustan Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 


இந்த ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடமும் மாலைத்தீவுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. 


Xiang Yang Hong 03 கப்பல்  தற்போது தென் சீனக் கடலில் Xiamen கரைக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், அனுமதி கிடைத்த பின்னர் மலாக்கா ஊடாக பயணிக்கவுள்ளதாக Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது. 


ஆய்வு நடவடிக்கை எனும் போர்வையில் சீனா இந்தியாவை உளவு பார்ப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


மாலைத்தீவில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முய்ஸூ (Mohamed Muizzu) இந்திய இராணுவத்தினரை தமது நாட்டிலிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ள பின்புலத்தில் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.