Header Ads



வெள்ளத்தினால் கிண்ணியா பாதிப்பு - களத்தில் இறங்கி பிரதேச செயலாளர் ஹனி சேவை, இம்ரான் மஹரூபும் களத்தில்


- ஏ.எச்.ஹஸ்பர் -


திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு  கிராம சேவகர் பிரிவில் உள்ள மயிலப்பன் சேனை, சோலை வெட்டுவான்,காரவெட்டுவான், கண்டல் காடு  வெள்ள நீரினால் தரைவழி போக்குவரத்துகள்  இன்றுடன்(31) நான்கு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியேற முடியாமல் வெள்ள நீரில் சிக்கி தவிக்கின்றனர். தரை வழி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளன. 


வெள்ளத்தினால் தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்து விடப்பட்ட  உப்பாறு  கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த  மக்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று (31) வழங்கப்பட்டன.


கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் உலர் உணவுப் பொருட்களே இவ்வாறு பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் வழங்கப்பட்டன.


நான்கு கிராமங்களை சேர்ந்த சுமார் 105 குடும்பங்களுக்கு 2400 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.


கடந்த நான்கு நாட்களாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று நாட்களுக்குத் தேவையான  உலர் உணவுப் பொருட்கள்  வழங்கப்பட்டன.


இதேவேளை திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதோடு அவர்களுக்கான உதவிகளை அரசாங்கம் செய்ய வேண்டும் மக்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது வருடா வருடம் இவ் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் இவ்வாறான நிலமைகள் ஏற்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட மக்களின் தரவுகள் பெறப்பட்டு அவர்களுக்கான உதவிகளை வழங்க கடமைப்பட்டுள்ளோம் இது தொடர்பில் கிண்ணியா பிரதேச செயலாளரும் இங்கு வருகை தந்தமையினால் சில ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.


இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி விட்டு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்


பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை அரசின் ஊடான நிதிகளை பெற்று மூன்று நாட்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன மேலதிகமாகவும் தரவுகளை பெற்று இன்னும் உலர் உணவுப் பொதிகளை வழங்க இருக்கிறோம் மக்கள் இக் கிராமத்தை விட்டு வெளியேற முடியாது அவர்களுக்கான சகல உதவிகளை செய்ய அவதானத்துடன் காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.