விஜய்காந்தும், மதரஸா மாணவர்களும்...!
நேற்றும் இன்றும் ஊடகம் முழுவதும் பரபரப்பாக நடிகர் விஜயகாந்த் மறைவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது.
1984 ம் ஆண்டு வாக்கில் விஜய் காந்த் நடித்த "இது எங்க பூமி" திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் சேலம் மழாஹிருல் உலூம் மதரஸாவிற்கு பின்னால் உள்ள டால்மியா மேக்னசைட் நிறுவனத்துக்கு சொந்தமான கரடு முரடான மைதானத்தில் ஒரு வாரமாக சூட்டிங் நடத்தப்பட்டது .
விஜய்காந்தும் ஜெய்சங்கரும் மதரஸாவைக்கடந்து- அருகில் உள்ள சாலை வழியாகத்தான் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
மதரஸாவையும் மாணவர்களையும் அவர்கள் பார்வையில் வாங்காமல் செல்ல வாய்ப்பில்லை.
ஒரு நாள் மாலை அஸர் தொழுகை முடிந்து மாணவர்கள் எல்லாம் மதரஸாவிற்கு வெளியே வந்து கொண்டிருந்தனர்.
மதரஸாவின் அருகே உள்ள சாலையில் மாணவர்கள் வருகிற போது அந்த சாலையில் வந்த அம்பாசிடர் கார் நின்றது.
அதில் இருந்து விஜய்காந்த் இறங்கினார். மாணவர்கள் அனைவர்களிடமும் கைகுலுக்கி விட்டு ஒவ்வொருவரின் நலனையும் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்து விட்டு..
சில நிமிடங்கள் பேசினார். காருக்குள்ளே அமர்ந்தவாறு ஜெய்சங்கர் புன்னகையுடன் இதைப்பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் கைகூப்பி வணக்கம் கூறி விடைபெற்றார்.
விஜயகாந்த் கைகுலுக்கிய அந்த மாணவர்களில் நானும் ஒருவன்.!
Post a Comment