Header Ads



முஸ்லிம் மாணவர்களுக்கு, இந்தமுறை A/L பரீட்சையிலாவது தீர்வு கிடைக்குமா..?


- அஷ்ஷெய்க் ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி)


எதிர்வரும் நாட்களில் இலங்கையில் பாடசாலை மட்டத்தில் நடைபெரும் பரீட்சைகளில் மிக முக்கியமான இறுதிப் பரீட்சையாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நடைபெற இருக்கின்றன. முதலில் அனைத்து பரீட்சாத்திகளுக்கும் நல்வாழ்த்துக்களையும், சிறந்த பெருபேருகளையும் பெற வேண்டுமெனவும் பிரார்த்தித்து எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பரீட்சை என்ற பெயர் பொதுவாகவே ஓர் அச்சத்தை பரீட்சாத்திகளிடத்து ஏற்படுத்துவது இயல்பானது தான். இயல்பான இந்த அச்சத்தையும் தாண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு முஸ்லிம் மாணவ மாணவிகள் ஆளாக்கப்படுவதை கடந்த காலங்களில் அறிய முடிந்தது.


பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகளுக்கு மானசீக உளைச்சல்களைக் கொடுத்து அவர்கள் பரீட்சைக்கு சரியான முறையில் முகம்கொடுக்க முடியாத நிலைமைகளை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் ஏராளம்.


பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாடசாலை சீருடையிலே தோற்ற வேண்டுமென்பது சட்டமாகும். பர்தா, கவுன், நீண்ட கால்சட்டை அணிவதற்கு அரசு முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதியளித்துள்ளது. இந்த ஒழுங்கையே சகல பரீட்சைகளின் போதும் முஸ்லிம் மாணவிகள் பின்பற்றுகின்றனர்.


இதற்கு கல்வியமைச்சோ, பரீட்சைகள் திணைக்களமோ எந்த தடையையும், எந்த சந்தர்ப்பத்திலும் விதித்ததில்லை. எனினும் காழ்ப்புணர்வு கொண்ட சிலர் பரீட்சை மண்டபங்களிலும், பரீட்சைக்கு தோற்றிக் கொண்டிருக்கும் போதும் முஸ்லிம் மாணவர்கள் மீது சட்டத்திற்கு புறம்பான முறையில் செயல்பட்டு மாணவர்ளை சங்கடத்திற்குட்படுத்தி அவர்கள் உற்சாகத்தோடு பரீட்சை எழுத முடியாத நிலையினை தோற்றுவிக்கின்றனர்.


இவ்வாரான செயல்பாடுகள் பரீட்சை காலங்களில் பேசப்பட்டு, முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வழங்கியுள்ள உரிமைகள் மீளப்பெற்றுக் கொடுக்கப்பட்டாலும், அடுத்தடுத்து வருகின்ற காலங்களில் மீண்டும் மீண்டும் இதே விடயம் விஸ்வரூபம் எடுப்பதன் நோக்கம் தான் என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை.


முஸ்லிம் மாணவன் ஒருவருக்கு தனது பல்கலைக்கழக பரீட்சையின் போது தாடியுடன் பரீட்சைக்கு தோற்ற முடியாதெனக்கூறி தடைவிதிக்கவே, சட்டத்தை நாடிய அந்த மாணவனுக்கு தாடியுடன் பரீட்சைக்கு தோற்ற முடியும் எனவும், அவருக்கு விதிக்கப்பட்ட தடை அடிப்படை உரிமை மீரல் எனவும் இலங்கையின் சட்டத்துரை தீர்பளித்திருந்ததை அனைவரும் நன்கறிவோம்.


இவ்வாரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்பொன்றை வழங்கிய பேனாவின் மை காயும் முன்னரே கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஸஹ்றி தாடிவைத்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக தனது இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றமுடியாத நிலை ஏற்பட்டதையும், பின்னர் சட்டத்தை நாடியதையும் நாம் அறிவோம்.


இது சட்டத்தில் இருக்கிற பிரச்சினையா அல்லது குறித்த ஒரு சிலர் அதிகாரத்தில் இருக்கின்ற பிரச்சினையா என்பதை புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. சன்முகா வித்தியாலயத்தில் முஸ்லிம் ஆசிரியைக்கு ஹிஜாப் அணிந்து பாடசாலை வரமுடியாது என்ற தடையை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டு அதற்கெதிராகவும் நீதிமன்றம் சென்று உரிமையை வென்றெடுத்தாலும் எதிர்காலங்களில் இந்த பிரச்சினை வெவ்வேரு வடிவங்களில் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையே தென்படுகிறது.


எதிர்வரும் உயர்தரப் பரீட்சை விடயத்தில் முஸ்லிம் தலமைகளின் பொறுப்பும் கடமையும்.


கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இம்மாதம் கடைசி வாரம் முதல் ஆரம்பமாக உள்ளன. எனவே கடந்த காலங்களில் பரீட்சை மண்டபங்களிலும், பரீட்சை நடந்து கொண்டிருக்கும் போதும் நடந்த கசப்பான சம்பவங்கள் நடைபெறாதிருக்க தேவையான ஏற்பாடுகளும்;> அறிவுருத்தல்களும்  பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களுக்கும் பரீட்சாத்திகளுக்கும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


பரீட்சைக்கு மாணவர்கள் சென்றதன் பின்னர் மாணவர்கள் உளரீதியாக பாதிக்ப்பட்டு பின்னர் அதுகுறித்து அறிக்கை விடுவதிலும், சட்டத்தை நாடுவதிலும் அர்த்தமேதுமில்லை. கல்வியமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் பரீட்சாத்திகள் தொடர்பில் குறிப்பாக முஸ்லிம் மாணவிகளது சீருடை விடயத்தில் வழங்கியுள்ள அனுமதியினை அனைத்து பரீட்சை நிலையங்களிலும் மும்மொழிகளிலும் பார்வைக்கு இடவேண்டும். இது குறித்து மாணவ சமூக அறிவூட்டப்படவும் வேண்டும்.


பரீட்சை மண்டப நுளைவாயிலில் வைத்து முஸ்லிம் மாணவிகளது பர்தா களையப்பட்ட சந்தர்பங்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கு முன்னரும் இவ்வாரான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை அறிந்த சிலர் கைவசம் முந்தானைகளை எடுத்துவந்திருந்ததாகவும், பர்தாவிற்கு பகரமாக மாற்றுவழி இல்லாத மாணவிகள் பர்தா இன்றி குற்ற உணர்வோடும், கடுமையான கூச்ச உணர்வோடும் பரீட்சைக்கு தோற்றியதாகவும் தெரிவித்த சம்பங்களும் பதிவாகியுள்ளன. 


முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியும் போது தங்களது காதுகள் வெளியில் தெரிகின்ற மாதிரி அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்திய ஒரு சில சம்பங்களும் கடந்த காலங்களில் பதிவாகின. இது குறித்தும் தெளிவான வழிகாட்டல்கள் பரீட்சாத்திகளுக்கும், பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கும் வழங்கப்படுவதும் கட்டாயமாகும்.


மேலும் உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சில இலெக்ரொனிக் கருவிகள் பாவிப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. எனவே பரீட்சையின் போது ஏற்படும் அளெசகரிகங்களை தவிர்க்கும் பொருட்டு அவைகுறித்த தெளிவான வழிகாட்டல்களை மாணவர்கள் தங்களது பாடசாலையினூடகவோ அல்லது பிராந்திய கல்வியமைச்சினூடாக பெற்றுக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.


அதேபோன்று இன்றைய காலம் ஸ்மார்ட் யுகமாக மாறியிருப்பதால், ஸ்மார்ட் கை;கடிகாரம், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் பேனா, ஸ்மார்ட் உபகரணங்கள் என ஏராளமான ஸ்மார்ட் பொருட்கள் பாவனையில் இருப்பதால் இவை நிச்சியமாக பரீட்சைகளின் போது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கலாம். எனவே மாணவர்கள் இவற்றை தவிர்ந்து கொள்வதற்கும் அறிவுருத்தப்பட வேண்டும்.


பர்தா அணிந்து பரீட்சைக்கு தோற்றிக் கொண்டிருக்கும் போது பரீட்சை மண்டபத்திற்குள் நுழைந்த சில அதிகாரிகள் அச்சுருத்தும் தொணியில் பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாது எனக் கூறியதோடு நிற்காமல் அம்மாணவிகளை தனது கையடக்க தொலைபேசில் படம்பிடித்துக் கொண்டதோடு அவர்களது பரீட்சை சுட்டெண்ணையும் குறித்த சென்றதாக பம்பலபிடிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படட்ட சம்பவங்களும் இருக்கின்றன.


இங்கு முறைப்பாடு செய்வது, அல்லது சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகளுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்பது என்பதையும் தாண்டி, பரீட்சாத்திகள் மானசீக ரீதியான தாக்கத்திற்குள்ளாகி சரியான முறையில் பரீட்சைக்கு தோற்றமுடியால் இருப்பதே மிக மிக அவதானம் கொடுத்து தீர்க்ப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.


எனவே பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும் வரை இருக்காமலும், பிரச்சினைகள் உருவெடுக்கும் வரையில் அமைதியாக இருக்காமலும் முஸ்லிம் தலமைகள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வியமைச்சர், மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.


மாகான சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் இதுவிடயத்தில் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகான மற்றும் பிரதேச கல்வியமைச்சுக்களையும், பரீட்சைகள் தொடர்பான அரச இயந்திரங்களையும் தொடர்பு கொண்டு பரீட்சாத்திகளுக்கும், பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கும் வழிகாட்டல்களை வழங்க காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் உங்களது கடமையாகும்.


பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது கடமையும் பொறுப்பும்.


 கடந்த காலங்களில் பரீட்சாத்திகளுக்கு ஏற்பட்ட அளெசகரிகங்களுக்கு மாணவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருகின்ற நிலையில் குறிப்புக்களை எடுத்து வந்து பார்த்து எழுதுவதாகவும், மேலும் சிலர் பர்தாவின் உட்புற பகுதியில் குறிப்புக்களை எழுதி வருவதாகவும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கபட்டன.


மேலும் சில மாணவிகள் பர்தாவினால் தங்களது வாய் பகுதியை மறைத்துக் கொண்டு பரீட்சை மண்டபத்தினுள் கதைப்பதாகவும், தகவல்களை பரிமாரிக் கொள்வதாகவும் தெரிவித்தனர். இதனால் சக மாணவர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் சங்கடமான நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்ததும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.


இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அடிப்படைத் தன்மை கொண்டதாகவோ, அடிப்படையற்றதாகவோ இருக்கலாம். ஆயினும் ஒருசிலரது இவ்வாரான செயல்பாடுகள் காரணமாக எல்லா பரீட்சாத்திகளும் தண்டிக்கப்படலாம். பரீட்சை திணைக்ளத்தினால் அறிவுருத்தப்பட்டுள்ள வழிகாட்டல்களை மாணவர்கள் மதித்து நடப்பதும், பரீட்சை மண்டப அதிகாரிகளுக்கு தங்களது பணிகளை செய்வதற்கு ஒத்துழைப்பாக இருப்பதும் அவர்கள் மீதுள்ள கடமையாகும்.


பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தாங்கள் பரீட்சை நிலையத்தில் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நாம் இழக்கின்ற ஒவ்வொரு உரிமையும், சலுகையும் எமது எதிர்கால சந்ததிகள் விடயத்தில் பாரிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.


குறிப்பாக இம்முறை உயர்தர பரீட்சை நிலையங்களாக முஸ்லிம் பாடசாலைகள் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறன. எனவே முஸ்லிம் பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு செல்லும் போது இயற்கையாகவே ஒர் அச்ச உணர்வும், மனக்குழப்பமும் இருக்கலாம். எனவே மாணவர்கள் முன்கூட்டியே இவற்றை எதிர்கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.


பரீட்சை மண்டபத்திலோ, மண்டபத்திற்கு வெளியிலோ தமக்கு அல்லது சக மாணவருக்கு ஏற்படும் அளெசகரிகங்களை துணிந்து தட்டிக் கேட்கவும், அவற்றுக்கான நீதியை பெற்றெடுக்கவும் தயங்கக் கூடாது. அவ்வாரான விடயங்களை உடனுக்குடன் சமூகமயப்படுத்தி சட்ட ரீதியான முன்னெடுப்புக்களையும் செய்தாக வேண்டும். அவ்வாரான அதிகாரிகளை இனம்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிருத்தவும் தயங்கக் கூடாது.


முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை மண்டபங்களில் எதிர்நோக்கும் அடுத்த மிகப்பெரிய பிரச்சினை சிங்கள மொழி புரியாமையே. இது எமது சமூகம் பொதுவாக எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளும் ஒரு பிரதான பிரச்சினையும் கூட. பொதுவாக தமிழ் மொழி தெரிந்த மேற்பார்வையாளர்களும் மண்டபத்தினுள் இருப்பார்கள். அவ்வாரு தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளோ, மேற்பார்வையாளர்களோ இல்லையாயின் அதுகுறித்தும் எமது சமூக தலமைகள் கவனமெடுக்கவும் வேண்டும்.


எனவே உங்களது பிரச்சினைகளை தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை அனுகி அல்லது உங்களுக்குள் இருக்கும் சிங்களம் தெரிந்த மாணவரின் உதவியைப் பெற்று அவற்றை தீர்த்துக் கொள்ள வேண்டும்.


எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்பட்டு மாணவர்கள் அதனை எழுத்து வடிவில் சமர்பிக்க வேண்டியேற்பட்டால் தமக்கு நன்கு புலமையான பாஷையிலே அதனை சமர்பிக்க வேண்டும். மேலும் தமக்கு புலமை இல்லாத பாஷையில் எழுதப்பட்ட எந்த ஆவணத்திற்கும் கையொப்பம் இடுவதையோ, உடண்படுவதையோ தவிர்ந்து கொள்ளவும் வேண்டும்.


பரீட்சை மண்படத்தில் ஏற்படும் சிறு சிறுவிடயங்களுக்கு மாணவர்களை போட்டோ பிடிப்பதற்கோ, அல்லது அவர்களது சுட்டெண்களை குறித்து செல்வதற்கோ யாரக்கும் எந்த அதிகாரமும் வழங்கப்பட்டில்லை என்பதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும். அவ்வாரான முறைகேடான விடயங்கள் நடப்பதற்கு யாரும் அனுமதியளிக்கக் கூடாது.


இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட எந்தவொரு சிரு அசம்பாவிதமும் நடைபெறாதிருக்க சகலரும் இனம் மதம் கடந்து செயல்பட வேண்டும். இம்மாணவச் செல்வங்கள் தங்களது பரீட்சைக்கு சிறந்த முறையில் தோற்றி அவர்களது அறிவும் அடைவும் அவர்கள் சார்ந்த சமூகத்தையும் தாண்டி இந்த நாட்டிற்கும் முழு உலகிற்கும் பயனுள்ளதாக அமைய பிரார்த்திக்கிறேன்.

1 comment:

  1. அருமையான பதிவு. இது பற்றி தனிப்பட்ட முறையில் முஸ்லிம் பா.உ. , அமைச்சர், இராஜாங்க அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டுவர மிகவும் அவசரமாக முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.