Header Ads



9 விடயங்களை சுட்டிக்காட்டி ஹக்கீம் அனுப்பியுள்ள கடிதம்


அக்குறணை வெள்ளத்தில் மூழ்கும் விவகாரம்: ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் மு.கா.தலைவர் ஹக்கீம் ஆளுநருக்கு கடிதம்


அக்குறணை நகர் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவது தொடர்பிலும் ,அதனை ஊடறுத்துச் செல்லும் பிங்கா ஓயா ஆற்றுப் படுகையின் மருங்கிலுள்ள ஒதுக்கீட்டு (Reservation)நிலம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன், கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (17) நடத்திய கலந்துரையாடலின் போது அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன் வைத்த முறைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் மையப்படுத்தி மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவுக்கு மறுநாள் 18ஆம் திகதியிட்ட நீண்ட கடிதமொன்றை அவர் எழுதியுள்ளார். 


அக்கடிதத்தில் ஜனாதிபதியுடனான பிரஸ்தாப கலந்துரையாடலின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக. சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களைக் கொண்டு இயன்றவரையில் விரைபாக நடைமுறைப்படுத்துமாறு ரவூப் ஹக்கீம் ஆளுநரிடம்  சுட்டிக் காட்டியிருக்கின்றார். 


இந்த உயர்மட்ட கலந்துரையாடலின் போது தாம் தெரிவித்த முறைப்பாடுகளோடு தொடர்புபட்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் 31.01.2022ஆம் திகதி மற்றும் 15.02.2023 ஆம் திகதியிட்ட இரு கடிதங்கள் மற்றும் கட்டிட வரைபடங்களின் நகலகளையும் இதனோடு இணைத்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதோடு, அக்கடிதத்தில் பிரஸ்தாப விடயத்தோடு சம்பந்தப்பட்ட கீழ்வரும் அம்சங்கங்களின் மீது உரிய கவனஞ் செலுத்துமாறும்  ஆளுநரைக் கேட்டுள்ளார். 


அவரது கடிதத்தில் அடங்கியுள்ளவையாவன: 


1. எனது அறிவுறுத்தலின்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அளவீடு செய்யப்பட்ட திட்ட வரைபடம் மற்றும் அபிவிருத்தி விதிமுறைகளுக்குப் புறம்பாக அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களின் முழுமையான பட்டியலின் அவசியத் தேவை.


2. இந்த விடயத்தை நான் சில மாதங்களுக்கு முன்னர் அக்குறணை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற அக்குறணை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நான் எழுப்பி, அங்கு வந்திருந்த அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதியிடம் அதுவரை மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட (சட்டவிரோத கட்டுமானங்களை) அகற்றுவதற்கான உத்தரவுப் பத்திரம் என்பவற்றை அபிவிருத்திக் குழுவிடம் அறிக்கையிடுமாறு கேட்டிருந்தேன். 


3. ஜனாதிபதியுடன் டிசெம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்த நகர அபிவிருத்தி அதிகார  சபையின் காணி உறுதிப் பத்திரங்களுக்கு பொறுப்பான பிரசாத் என்ற அதிகாரி அதற்கான நீதிமன்றக் கட்டளை கிடைத்திருப்பதாகவும் அவர்கள் அதனை செயற்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். 


4. நீர்பாசனத் திணைக்களமும், மகாவலி அதிகாரசபையும் ஒதுக்கீட்டு எல்லைகளை அடையாளம் கண்டு அக்குறணைபிரதேச சபைக்கும், பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கும்,நகர அபிவிருத்தி அதிகா சபைக்கும் அறிவித்து கட்டுமாண விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறுஅறிவுறுத்த வேண்டும். 


5. பிங்கா ஓயாவை சூழவுள்ள பிரதேசங்களின் நீர் வழிந்தோடக்கூடிய பிரதான செயற்திட்டத்தை(Master Plan) நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தை கொண்டு தயாரித்தல் 


6. பிங்கா ஓயாவின் நடாத்துகை (Maintenance) மேற்பார்வை, முகாமைத்துவம் என்பன நீர்பாசன திணைக்களம், காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம், மகாவலி அதிகார சபை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் 


7. பொல்கொல்ல அணைக்கட்டின் மேல் நோக்கிய ஆற்றுப் படுகையை பிங்கா ஓயா சங்கமிக்கும் கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தை நோக்கி அகழ்ந்து சீர்செய்வது அவசியமாகும். நீர் பாரிய உள்வாங்கு பிரதேசத்தை(Catchment area)ப் பொறுத்தவரை அது மிகவும் சிரமமாக காரியமாகவே இருக்கும்.ஆற்றுப் படுகையில் நீர் இயல்பாக வழிந்தோடும் விதத்தில் இதற்கு நிபுணத்துவ ஆலோசனை உரிய முறையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளது. 


8. கூட்டத்தில் நான் எடுத்து விளக்கியவாறு,  ஏ-9 பிரதான வீதி மற்றும் துணுவில வீதி சந்தி பாலம் மீள் வரையப்பட்டு, மீள் நிர்மாணப் செய்யப்பட வேண்டியுள்ளது. அதன் நீள, அகலம், உயரம் என்பன சரிவர அமையப் பெறாத நிலையில் பிங்கா ஓயாவின் கிளை அருவிகளிலிருந்து பெருமழையின் போது பெருக்கெடுத்து வரும் நீர்  பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. கூடுதலான மழை வீழ்ச்சியின் காரணமாக பெருக்கெடுத்து ஓடும் நீரின் வேகம் பாலத்தின் கீழாக போடப்பட்டுள்ள தொலைபேசி கேபிள்கள் காரணமாக   தடைப்படுவதால் மண்டி மற்றும் சகதி போன்றன நிரம்பி நீரின் ஓட்டத்தை தடுப்பதன் விளைவாக பாரிய வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அபாயம் தொடர்ந்தும் நிலவி வருகின்றது 


9.  2016 தொடக்கம் 2019 வரையிலான காலப்பகுதியில் போன்று வேறுபட்ட அரச நிறுவனங்களை உள்ளடக்கிய விசேட செயலணி ஒன்றை அழுத்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன்  இணைந்ததாக அமைப்பதன் மூலம் தங்கள் (ஆளுநர்)வழிகாட்டலுடன் ஒருங்கிணைப்பதன் வாயிலாக தேவையான மறுசீரமைப்பு மற்றும் புனர்நிர்மாண வேலைகளை முன் கண்டு செல்வதால் மீண்டும், மீண்டும் சம்பவித்து வரும் சுற்றாடல் ,காலநிலை  அனர்த்தங்களின் விளைவாக  மனிதர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் பில்லியன் ரூபாய்கள் கணக்கிலான இழப்புகளைத்   தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.


இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்  இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி செயலாளர், கண்டி மாவட்ட செயலாளர் ,அக்குறணை பிரதேச செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம், பிரதி அமைச்சர் திலான் அமுனுகம, பிரதேச சபை செயலாளர், அக்குறணை பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் அக்குரனை ஜம் இய்யத்துல் உலமா, அக்குரணை வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் உயரதிகளுக்கும் அனுப்பப்படுவதாக அதில் காணப்படுகின்றது.

No comments

Powered by Blogger.