Header Ads



2 கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன்


பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச, கோட்டாய ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.


இந்த தீர்ப்பினை கொண்டு ஒரு தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை இரத்து செய்யும் யோசனையை கொண்டு வந்தால் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டேன். அந்த கீழ்த்தரமான செயலுக்கு துணை செல்லமாட்டேன், ஏனெனில் மகிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளார்.


நான் அவர் பக்கம் இனி செல்ல போவதில்லை. அவருக்கும் எனக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் அவர் மீதான கௌரவம் இன்றும் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இன்றைய நிலைக்கு நாங்கள் யாரும் பொறுப்பல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களே அவரை இந்த நிலைக்கு தள்ளியுள்ளார்கள்.


பொருளாதார படுகொலையாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச,  கோட்டாபய ராஜபக்ச  உட்பட ஏனைய தரப்பினரது குடியுரிமையை பறிக்கும் யோசனை கொண்டு வந்தால் அதற்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கிரிக்கெட் பற்றி காலையிலும் பேசுகிறார், மாலையிலும் பேசுகிறார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு சார்பாக பேசுகிறார். அது அவரது தனிப்பட்ட விருப்பம்.


கிரிக்கெட் விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம் அவ்வாறு செயற்பட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்று நான் கடந்த ஆகஸ்ட் மாதம் சபையில் குறிப்பிட்டேன். அதுவே தற்போது இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டு பகுதிக்குள் டி20 போட்டி இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னர் கிரிக்கெட் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.


அதனை தொடர்ந்து இடம்பெறவுள்ள தேர்தல் என்ற விளையாட்டில் மக்கள் விளையாடுவார்கள். அதற்கான வாய்ப்பினை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதற்கு ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் தயாராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.