காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளனம், பொலிஸார் சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விடயங்கள்
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினருக்கும் சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்களுக்குமிடையிலான விஷேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம் காலை 08: 00 மணிக்கு சம்மேளன நிர்வாக சபைக் கூட்டத்தின் ஓர் அங்கமாக சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது...
சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ். AMM. றஊப் JP அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி SN. காரியவசம், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி AMSA. றஹீம், மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி SI. சந்தன மற்றும் சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நமதூரின் போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் பற்றியும் இளைஞர்களது அதிருப்தியான செயற்பாடுகள் பற்றியும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனடிப்படையில், மோட்டார் வாகனங்களில் சைலன்ஸர் குழாய்களினை அகற்றி பெரும் சப்தத்துடன் பயணிப்பவர்களினை பொது மக்களின் உதவியுடன் கைது செய்வதெனவும், அவ்வாறு சைலன்சர்களினை அகற்றும் மோட்டார் வாகன திருத்துமிடங்கள் இனம் காணப்பட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், கடற்கரை மற்றும் கடற்கரை பிரதான வீதி ஆகியவற்றில் போக்குவரத்து நடைமுறைகளை கன்டிப்பாக அமுல்படுத்துவதெனவும், தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதெனவும், பின் இரவு (நள்ளிரவு) நேரங்களில் அநாவசியமாக வீதிகளில் உலாவுகின்ற இளைஞர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென்றும், திருமண வைபவங்களின் போது பொதுப் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக சப்தத்துடன் ஹோன் எழுப்புபவர்களினையும் கைது செய்வதெனவும், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பாக தீவிர கண்கானிப்பினை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது விடயமாக பொது மக்கள் தங்களது மேலான ஒத்துழைப்புக்களினை நல்குமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.
Post a Comment