Header Ads



முடிந்தால் பாராளுமன்ற மைதானத்திற்கு வருமாறு, அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு சவால்


அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன், முடிந்தால் நாடாளுமன்ற மைதானத்திற்கு வந்து  தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களை வெட்டட்டும், பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் நாங்கள் வருகின்றோம். அதன் பின்னர் எங்கள் சமூகத்தைப் பார்த்துக் கொள்லாம் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  


அண்மையில், மட்டக்களப்பு - மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என தெரிவித்து பொதுவெளியில் பகிரங்க அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.


இந்தநிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேர்காணல் ஒன்றின்போது தெரிவிக்கையில்,


தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என அம்பிட்டிய தேரர் கூறியது அவரது உள்மனதில் இருந்து தெரிவித்த கருத்தாகும். இதனை கேட்டவுடன் எங்களுக்கு ஒரு சந்தேகம் வருகின்றது, இந்த நிலைப்பாடு தான் அனைவரது மனதிலும் இருக்கின்றதா என்று.


தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் ஒரு பெரும்பான்மை இன மதகுரு ஒருவர் தமிழர்களை வெட்டுவேன் என கூறுவதை ஏன் இந்த அரசாங்கம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.



அவருக்கு எதிராக ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏன் அம்பிட்டிய தேரர் கைது செய்யப்படவில்லை. சட்டம் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.


2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர், சஹ்ரான் என்ற நபர் தொடர்பான விபரங்கள் வெளியான பின்னர் எவ்வளவு மக்கள் கைது செய்யப்பட்டனர். வடக்கு - கிழக்கில் யுத்தம் நடைபெற்றபோது ஆலயங்களினுடைய ஐயர்கள், பூசகர்கள் எத்தனைப் பேர் கைது செய்யப்பட்டனர். அப்படி இருக்கும் சந்தர்ப்பத்தில், இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற நிலை இருந்தால் அம்பிட்டிய தேரரும் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.


ஒரே நாடு ஒரே சட்டம் என கூறுகின்றார்கள். உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டுக்கு இது ஒரு அபகீர்த்தி.


மேலும், அரசாங்கத்தினுடைய திட்டத்தினை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் நடைமுறைப்படுத்துகின்றாரோ என்றும் சந்தேகப்படலாம். ஏனென்றால் அவர் பகிரங்கமாக மற்றுமொரு இனத்தை வெட்டுவேன் என்கின்றார், பொலிஸார் வேடிக்கைப் பார்க்கின்றனர். அத்தோடு பொலிஸாரையும் அவர் தாக்குகின்றார்.


இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு இன்னும் பதில் வழங்கப்படவில்லை. தேரரின் இந்தக் கருத்துக்களால் ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களும் புண்பட்டுள்ளது. அவர் இவ்வாறான கருத்துக்ககளை வெளியிடும் சமயத்திலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இன்னுமொரு இனத்தை வெட்டி வீசுவேன் என்று என்னால் கூற முடியுமா? அனைவரையும் வெட்டி வீசுவேன் என்று கூறும் அந்த தேரர் கனவு கண்டு கொண்டிருக்கின்றார்.


நான் அந்த தேரருக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். நாடாளுமன்ற மைதானத்திற்கு வாருங்கள். அங்கு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். முதலில் எங்களை வெட்டி வீசுங்கள். எங்களுடைய பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் நாங்கள் நாடாளுமன்ற மைதானத்திற்கு வருகின்றோம். முடிந்தால் முதலில் எங்களை வெட்டி வீழ்த்துங்கள் அதன் பின்னர் எங்கள் சமூகத்தைப் பார்க்கலாம்.


அவர் பௌத்த துறவியாக இருக்கின்றார். இருப்பினும் அவர் பேசும் வார்த்தைகளும் அவரது நடவடிக்கைகளும் அந்த மதத்திற்கு இழுக்கைத் தேடி தருகின்றது. அவர் அணிந்திருக்கும் காவி உடைக்கு இழுக்கைத் தேடித் தருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.   

No comments

Powered by Blogger.