நாங்கள் எப்போதும் நீதித்துறையை மதிக்கிறோம் - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து நாமல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரின் அரசாங்கத்தில் பதவி வகித்த முன்னாள் நிதியமைச்சர்கள் மகிந்த, பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டு நெருக்கடி உண்டாகியமைக்கு காரணமானவர்களென இலங்கையின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்தே நாமல் குறித்த விடயங்கள் தொடர்பில் ருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) அமைப்பினர் சந்திர ஜெயரத்ன, ஜெஹான் கனகரெட்னா மற்றும் ஜூலியன் பொலிங் ஆகியோருடன் இணைந்து பொது நலன் கருதி தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த நாமல், நீதித்துறை எழுத்துமூலமான சாட்சியங்களை மாத்திரமே பரிசீலித்துள்ளதாகவும், வாய்மொழி ஆதாரங்கள் எதுவும் கோரப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
"பொருளாதார நெருக்கடி பற்றி நீண்ட நேரம் விவாதிக்க சிறந்த இடம் பாராளுமன்றம் தான். நிதி அதிகாரங்கள், சட்டமியற்றுதல் மற்றும் சட்டத்தை அமுல்படுத்துதல் ஆகியவற்றில் பொறுப்பான அதிகாரம் கொண்ட பாராளுமன்றம், இந்த விடயத்தை ஆழமாக பகுப்பாய்வு செய்யக்கூடிய ஒரு தெரிவுக்குழுவை நியமிக்க முடியும்” என அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒவ்வொரு துறையையும் உள்ளடக்குவதற்கு ஆதாரங்களைக் கோரி விசாரிக்க முடியும் என்று கூறிய எம்.பி, பொருளாதார நெருக்கடியை விசாரிப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள குழு விரிவாக ஆதாரங்களை கோருவதற்கும் குறுக்கு விசாரணை செய்வதற்குமான திறன் கொண்டது என்றும் கூறினார்.
Post a Comment