Header Ads



அர்ஜுன தலைமையிலான இடைக்கால குழுவுக்கு சிக்கல்

விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று -07- இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இலங்கை கிரிக்கெட் சபையின்  தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவிற்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமலில் இருக்கும்.


1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க திங்கட்கிழமை (06) புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.


விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டு சட்டத்தின் ஊடாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டது.


அதனடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால குழு, திங்கட்கிழமை (06) முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.


மேலும் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, அர்ஜுன ரணதுங்கவுக்கு மேலதிகமாக, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, ரகித ராஜபக்ஷ மற்றும் ஹிஷாம் ஜமால்டீன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். 

No comments

Powered by Blogger.