Header Ads



மு.கா. எடுத்துள்ள தீர்மானம் - எவரும் ஒளிந்து கொள்ளக் கூடாதென ஹக்கீம் திட்டவட்டமாக அறிவிப்பு


வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தின் ஏகமனதான முடிவை தலைவர் ரவூப் ஹக்கீம் ,ஞாயிற்றுக் கிழமை (19)மாலை கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் நடைபெற்ற அதன்  கூட்டத்தின் போது அறிவித்திருந்தார்.  வாக்கெடுப்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் பாராளுமன்ற குழுவுக்கு வழங்க முடியாது என்றும் உயர்பீடத்தின் முடிவுக்கு எம்.பிக்கள் ஐவரும் கட்டுபட்டு வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் அங்கு மிகவும்  திட்டவட்டமாகத் தெரிவித்தார். 


தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கட்சியின்  பிரஸ்தாப உயிர்பீடக் கூட்டத்தில் ,செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் பங்குபற்றியிருக்க,ஒரே ஒருவரைத் தவிர கட்சியின் ஏனைய நான்கு எம்.பிக்கள் மற்றும் நாடெங்கிலும் இருந்து வருகை தந்திருந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


 'நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று விட்டது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் மக்களின் வரிச்சுமை மேலும் அதிகரிக்கப் போகின்றது.மக்களுக்கு நன்மையளிக்காத இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்துள்ளோம்" எனக் குறிப்பிட்டார் மு.கா.தலைவர் ஹக்கீம்.


2023ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்த்தில் குறிப்பிடப்பட்ட அநேக விடயங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்படாத நிலையில் ,நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கத் தக்கதாக அவற்றையும் உள்ளடக்கி  2024  ஆம் நிதியாண்டிற்கான    வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஒளிந்து கொள்ளாமால், ஐவரும்  ஒருமித்து, எதிராக வாக்களிப்பது என்ற தீர்மானம் கட்சியின் உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தலைவர் வலியுறுத்தி கூறினார். 

No comments

Powered by Blogger.