பலஸ்தீன விவகாரம் - உடனடியாக செய்ய வேண்டியது..!
அஷ்ஷைக் பளீல் (நளீமி)
பாலஸ்தீன விவகாரம் இவ்வளவு தூரம் 75 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
வல்லரசுகள் எனும் பெயர் தாங்கிகள் மனிதாபிமான எல்லைகளை முற்றிலும் கவனிக்காமல் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை ஸ்தாபிக்க முழுமூச்சாக ஈடுபட்டதுடன் இந்த நிமிடம் வரை அதற்கு சார்பாக குரலெழுப்பி சகல விதமான ஒத்தாசைகளையும் செய்து வருகிறார்கள். பல காரணங்களால் அது நடக்கிறது.
1. ஆயுதச் சந்தை (Arm industry)
மேற்குலகில் பாரிய ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றின் ஆயுதச் சந்தையை தக்க வைக்க வேண்டும் என்பதில் வல்லரசுகள் மிகக் கவனமாக இருக்கின்றன. ஏனெனில் இந்த வல்லரசுகளுக்கு மனித இனத்தின் மீதான அக்கறையை விடவும் இந்த ஆயுதங்களை விற்பது முக்கியமாகும். அரபு பிராந்தியத்தில் இஸ்ரேல் இருந்தால் தான் தொடர்ந்தும் பதட்ட நிலையும் யுத்த மேகங்களும் இருக்கும். அப்போதுதான் மேற்குலக ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களுக்கான சந்தைகள் தொடர்ந்தும் இருந்து வரும். யுத்தங்கள் நின்று போனால் ஆயுத தொழிற்சாலைகளை மூட வேண்டி வரும். அவற்றில் வேலை செய்யும் பல லட்சம் பேருக்கு தொழில் இழக்கப்படும். அந்த தொழிற்சாலைகளது சொந்தக்காரர்கள் மேற்கத்திய அரசுகளை ஸ்தாபிப்பதற்கு உதவி செய்யமாட்டார்கள்.
சுருங்கச் சொன்னால் வல்லரசுகளது சடவாத, பொருள் முதல்வாத பசிக்காக முஸ்லிம், கிறிஸ்தவ, யூத சமூகங்கள் மத்திய கிழக்கில் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டுள்ளன.
2. இஸ்லாமிய பீதி (Islamophobia)
இஸ்லாம் பற்றிய பீதி தொடர்ந்து இருந்து வந்தால் தான் இஸ்லாம் ஒரு ஜீவ சக்தியாக மாறுவதை தடுக்க முடியும். இஸ்ரேல் தொடர்ந்தும் அங்கு இருந்து வருவது இனங்களுக்கிடையிலான பதட்டத்தை தொடர்ந்து பேணுவதற்கு உதவும். 'எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்' என்ற வகையில் யூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் மோதிக்கொள்ளும் காலமெல்லாம் இஸ்லாம் பற்றிய பீதி நிலைத்து நிற்கும். அந்த பீதியை தொடர்ந்தும் தக்க வைப்பது உலக வல்லரசுகளுக்கு தேவையான காரியமாகும்.
3. சில அரபு நாடுகளது இஸ்ரேல் சார்பு நிலைப்பாடு
பெரும்பாலான முஸ்லிம்களும் அரபு இஸ்லாமிய நாடுகளும் பலஸ்தீன விவகாரத்திற்கு தமது மானசீக ரீதியான ஆதரவை வழங்கினாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில அரபு நாடுகளும் அவற்றின் தலைவர்களும் பாலஸ்தீன மக்களது உரிமைகளை மதிப்பதாக இல்லை. சிலபோது இஸ்ரேலுக்கு நேரடியான தமது ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். பலர் பயங்கரமாக அமைதி காக்கிறார்கள்.
இதுவும் அதிசயமல்ல. இந்த வல்லரசு நாடுகள் தான் இந்த அரபு நாட்டு தலைவர்களை அந்த பதவிகளில் அமர்த்தியிருப்பதுடன் தொடர்ந்தும் அவர்களை அப்பதவிகளில் தக்க வைத்திருக்கின்றன. இஸ்ரவேலுக்கு எதிராக பேசினால் அவர்கள் தொடர்ந்து நிலைக்க மாட்டார்கள். எனவே பதவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் வல்லரசுகளது விருப்பத்தை பூர்த்தி செய்து கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்; மேற்கு சார்பு நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.
இந்த அரபு ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம், மனிதாபிமானம், நீதி, நியாயம் என்பவற்றை விடவும் தமது ஆட்சி, அதிகாரம், பணம், சுகபோகம், சுகண்டி என்பன முக்கியமாக உள்ளன. எனவே அவற்றை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. இவ்வுலகில் பலர் அவர்களுக்கு ஏசினாலும் மறுமையில் தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை ஆட்சியில் நிலைத்திருப்பது தான் முக்கியம். அவர்கள் தமது ஆட்சிக் கதிரைகளைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் சார்பு நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். எனவே இது ஆச்சரியமல்ல.
4. இஸ்லாமிய நோக்கு இன்மை
முஸ்லிம்களில் பலர் பாலஸ்தீன விவகாரத்தை ஈமானிய பார்வையில் நோக்குவதில்லை. பாலஸ்தீனில் அமைந்துள்ள பைதுல் முகத்தஸ் முஸ்லிம்களது முதலாவது கிப்லா. நபியவர்கள் மிஃராஜ் சென்றது அங்கிருந்துதான். அல்குர்ஆனின் கருத்தின் படி அது பல நபிமார்கள் வாழ்ந்த பாக்கியமளிக்கப்பட்ட புனித பூமியாகும். இது போன்ற கருத்துகளை அவர்கள் தெரியாதிருப்பதனால் இது விடயமாக மிகுந்த பொடுபோக்குடன் நடந்து கொள்கிறார்கள். தமது ஊரில் உள்ள ஒரு சாதாரண பள்ளிவாயலை இஸ்லாத்தின் விரோதிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் அவர்கள் எப்படியான மனோ நிலையில் இருப்பார்கள்? உலகில் உள்ள புனிதமான மூன்று மஸ்ஜிதுகளில் ஒன்று முஸ்லிம்களது கைவசம் இல்லை என்றால் எப்படியான கவலை வர வேண்டும்.? 'ராவணன் ஆண்டால் என்ன ராவண் ஆண்டால் என்ன' என்ற நிலைப்பாடு அவர்களிடத்தில் இருக்கிறது.
எனவே இதனை சிலர் வெறுமனே ஓர் அரசியல் விவகாரமாகவும் பாலஸ்தீனர்களின் உள்வீட்டுப் பிரச்சினையாகவும் வெறும் நிலத்துக்கான போராட்டமாகவும் பார்ப்பதில் ஆச்சரியமில்லை.
முஸ்லிம்கள் உலகின் எந்த மூலை முடுக்கில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஈமானிய கயிறினால் கடுமையாக பிணைக்கப்பட்ட உணர்வை கொண்டிருக்க வேண்டும். அவர்களில் யாருக்கு ஒரு துன்பம், கஷ்டம் வந்தாலும் அதனை முழு முஸ்லிம் சமூகமும் உணர்ந்து அக்கஷ்டத்தை நீக்குவதில் பங்கெடுக்க வேண்டும். இதே பார்வை பலஸ்தீன முஸ்லிம்கள் விடயமாகவும் உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வர வேண்டும். எனவே இந்த ஈமானிய உணர்வு இல்லாமல் இருந்தால் பலஸ்தீன விவகாரம் இழுத்தடிக்கப்படுவதில் ஆச்சரியமல்ல.
5. பிரித்தால் தான் ஆழலாம்.(Divide and Rule)
அரபு இஸ்லாமிய நாடுகளில் பெற்றோலிய வளம் உட்பட பல வகையான வளங்களும் காணப்படுகின்றன. அவற்றை அவை மிகக்கவனமாக, திட்டமிட்டுப் பயன்படுத்தினால் அல்லாஹ்வின் உதவியால் உலகின் வல்லரசுகளாக நிச்சயமாக மாறலாம். அதற்கு இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் ஒற்றுமையும் பரஸ்பரம் ஒத்துழைப்பும் அவசியம். அத்துடன் இந்த நிலையை அடைய யுத்தங்கள், சில்லறைப் பிரச்சினைகள் போன்ற 'கவனக் கலைப்பான்கள்' இல்லாத அமைதியான சூழல் காணப்படுவது அவசியமாகும்.
இஸ்லாமிய நாடுகளது எழுச்சியும் பலமும் ஐக்கியமும் வல்லரசுகளுக்கு பெரும் சவாலாகும். ஆகவே தான் வல்லரசுகள் அரபு இஸ்லாமிய நாடுகளை இரு வேறு துருவங்களாக பிரித்துக்கொண்டு அவற்றை தமது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பிரிப்பால், பிளவுகளால் அந்த முஸ்லிம் நாடுகள் உள்நாட்டுப் போர்கள், எல்லைச் சண்டைகள், அங்கிருக்கும் முற்போக்கு சக்திகளை ஒடுக்குவது என்பவற்றில் மூழ்கி அவற்றிலேயே தமது காலநேரங்களை விரயம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை வல்லரசுகள் கனகச்சிதமாக பயன்படுத்தி முஸ்லிம் நாடுகளது வளங்களை சுரண்டுகின்றன.
பாலஸ்தீன விவகாரத்தை உண்ணிப்பாக நோக்கினால் அதனை வைத்தும் அரபு உலகத்தை வல்லரசுகள் கூறு போட்டிருக்கின்னறன. ஒர் அரபு நாடு பாலஸ்தீனர்களுக்கு சார்பாக இருக்கிறது. மற்றொன்று இஸ்ரேலை நியாயப்படுத்துகிறது. இன்னுமொன்று கருத்து வெளியிட்டால் வில்லங்கத்தில் மாட்ட வேண்டி வருமோ என்று மெளனம் காக்கின்றது.
தொழிநுட்பத்தில் உச்சம்
ஆழமான ஈமான், பரஸ்பர ஒற்றுமை என்பனவற்றோடு ஒரு நாட்டின் ஸ்திரப்பாட்டில் தொழில்நுட்ப, விஞ்ஞான முன்னேற்றம் மிக முக்கியமானது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் அது இந்த துறைகளில் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இஸ்ரவேலர்கள் கல்வி, ஆராய்ச்சி, விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முன்னணியில் திகழ்கிறார்கள். இஸ்லாம் கல்விக்கு முன்னுரிமை வழங்கியது மட்டுமன்றி உலகவாழ்வின் மேம்பாட்டுக்கான காரணியாகவும் அதனை வலியுத்தியுள்ளது. அரபு, இஸ்லாமிய நாடுகளில் கல்விக்கு ஆராய்ச்சிக்கு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இஸ்ரேலை விடவும் அந்நாடுகள் முன்னணியில் திகழும் வரைக்கும் அல்லாஹ்வினுடைய ஏற்பாட்டின் படி வெற்றி வருவது சாத்தியமமில்லை.
வெறும் ஈமானும் ஒற்றுமையும் மாத்திரம் பலனளிக்காது. அல்லாஹ் கூறியபடி முஸ்லிம்கள் வெற்றிக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத் தான் அல்லாஹ்விடத்திலே பொறுப்பு சாட்ட வேண்டும்;தவக்குல் வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தனது எல்லா முயற்சிகளையும் திட்டமிட்டு தயாராகி,சகல வளங்களையும் திரட்டிய வண்ணமே செய்திருக்கிறார்கள் என்பது எமக்கு நல்ல முன்மாதிரியாகும்.
"எமது பாதையில் யார் கடுமையாக முயற்சி செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக எமது பாதைகளில் வழி நடத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்பவர்களை விரும்புகிறான்."(அல்குர்ஆன்)
முயற்சி செய்யாமல் வெற்றியை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. அப்போது வெற்றி வராமல் இருப்பது அதிசயமுமல்ல.
எனவே மேற்படி காரணங்கள் இருக்கும் வரைக்கும் பாலஸ்தீன பிரச்சினை தொடர்ந்தும் பிரச்சினையாகவே இருக்கும்.
உடனடியாக செய்ய வேண்டியவை:
1. தொழுகைகளின் போதும் அவற்றின் பின்னரும் சாதாரண நேரங்களிலும் நோன்பு திறக்கும் பொழுதும் அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.
2. ஒவ்வொரு தொழுகையிலும் குனூத் ஓதலாம்
எப்போதும் செய்ய வேண்டியவை:-
3. பாலஸ்தீன வரலாற்றை எவ்வித திரிபுகழும் இல்லாமல் நடுநிலையாக இருந்து படிக்கலாம்.
4. அந்தப் பூமி எவ்வளவு அருள்பாளிக்கப்பட்டது என்பதை குர்ஆன் ஹதீஸ் வசனங்களின் ஊடாகவும் அங்கு இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஹதீஸ்களில் வந்திருக்கின்ற முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் படிக்கலாம்.
5. எமது தப்ஸீர் விளக்கங்களில் 'இஸ்ராயீலிய்யாத்'துகளை முற்று முழுதாக தவிர்க்கலாம்.
6. தற்கால உலகில் முஸ்லிம்களின் முதல்தர எதிரியான - பாலஸ்தீனத்தின் எதிரிகளது உற்பத்திகளை புறக்கணித்து எமது நாட்டின் உற்பத்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.
7. உலகில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சிந்தனைப் படையெடுப்பு அரங்கேறி வருகிறது. குறிப்பாக இஸ்லாத்தின் எதிரிகளது நாஸ்திகவாத, சடவாத சுயநல, இன்ப நுகர்ச்சி இலக்கு கொண்ட இராட்சத தொடர்பு சாதனங்கள் வாயிலாக மிகப் பிரமாண்டமான ஊடகவியல் யுத்தமொன்று பல வகையான தொடர்பு சாதனங்கள் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலஸ்தீன விவகாரத்திலும் பல உண்மைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையை எதிர்கொள்ள முஸ்லிம்கள் மீடியா உலகில் கால் பதிக்க வேண்டும். உலகில் உள்ள நடுநிலையாக, நியாயமாக சிந்திக்கும் முஸ்லிம் அல்லாத பல தனிமனிதர்களும் நிறுவனங்களும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல், நடுநிலையாக சிந்தித்து மீடியாக உலகில் பிரகாசிக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து இந்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் பின் தாபித் (ரழி) போன்ற கவிஞர்களை தமது தூதைப் பலப்படுத்த பயன்படுத்தியதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
8. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் மனித இனத்திற்கும் வெற்றியும் விமோசனமும் கிடைக்க வேண்டுமாயின் நாம் கடைபிடித்தே ஆகவேண்டும் என அல்லாஹ்வும் ரஸூல் (ஸல்) அவர்களும் கூறிய நியதிகளை, நிபந்தனைகளை நாம் தெரிந்து கொண்டு அவற்றிற்கு ஏற்ப எமது வாழ்க்கையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
அந்த நிபந்தனைகளிற் சில:
அ. ஆழமான தெளிந்த ஈமான்
ஆ. முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியமும் பரஸ்பர விசுவாசமும்
இ. இஸ்லாம் பற்றிய தெளிந்த அறிவும் அதனை பின்பற்றுவதும்
ஈ. அவ்வக்காலத்தில் உள்ள அறிவு ஞானங்களை துறைபோகக் கற்பதும் அவற்றில் ஈடுபாடு காட்டுவதும்.
உ. முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டுப் பலம்
சாந்தி,சமாதானம், நிம்மதி, மதசகிப்புத்தன்மை என்பன இந்த உலகத்தில் நிலவ நாம் எல்லோரும் முயற்சிப்போமாக!
தற்போதைய நிகழ்வுகள் எமக்கு பல படிப்பினைகளையும் பாடங்களையும் கற்றுத் தருகின்றன.
அல்லாஹ் நிச்சயமாக இறுதி வெற்றியை சத்தியத்திற்கே கொடுப்பான்.
பாலஸ்தீன சகோதரர்களுக்காக நாம் துஆச் செய்வோம்.
வல்லவன் அல்லாஹ் அவனது கருணையால் எம்மை அரவணைத்து பாலஸ்தீன மக்களுக்கு ஒளிமயமான, கெளரவமான வாழ்வைக் கொடுப்பானாக!
Post a Comment