Header Ads



ஹக்கீம் மீதும் மு.கா. மீது பிள்ளையான் குற்றச்சாட்டு


ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மதத்தின் பேரால் அரசியல் செய்து சமூகங்களை பிளவுபடுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(29.11.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


மதம் சார்பாக கட்சி நடத்துகின்ற ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அடக்குமுறை இருப்பதாக ஒரு பொறுப்பில்லாத கருத்தை வெளியிட்டதை நான் அவதானித்தேன்.


அந்த மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவர் என்ற அடிப்படையில் அதை நான் முற்றுமுழுதாக மறுதலிக்கிறேன்.  பிரதமர் அவர்களே, அவர்களுடைய அரசியல் வரலாறுகளை பற்றி உங்களுக்கு தெரியும்.


பிரதேச செயலகங்கள் மற்றும் கல்வி வலயங்கள் என சமூகம் பிளவுபட அவர்களும் கடந்த கால அரசாங்கங்களோடு இணைந்து செயற்பட்டிருக்கிறார்கள்.


முன்னாள் அமைச்சரான நஸீரை அகற்றுவதற்கு சுமந்திரனும் ரவூப் ஹக்கீமின் கட்சி செயலாளர்களும் ஒன்றாக பயணிக்கின்றார்கள். ஆனால் கல்முனையில் ஒரு கணக்காளரை நியமிப்பதற்கு இணக்கப்பாடு இல்லாமல் நாடாளுமன்றத்தில் கூக்குரலிடுகின்றார்கள்.


நான் இந்த நாடாளுமன்றத்தில் பொறுப்போடு கூறுவது என்னவெனில் இவர்கள் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள்.


மேலும், முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முற்பட்டால் நாடு முழுவதும் மதரீதியான நிர்வாகத்தை செயற்படுத்தும் நிலைமைக்கு நாடு தள்ளப்படும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.