Header Ads



யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி, ராஜபக்சவினர் நாட்டில் செய்த விடயங்கள் அம்பலமாகியுள்ளது


 யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி அதன் பெயரில் ராஜபக்சவினர்  நாட்டில் செய்து வந்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகியுள்ளது என  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இந்த நாட்டின் சிரேஷ்ட நபர் ஒருவருக்காக நடத்தப்பட்ட நிகழ்வில், படித்த நபர் என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள ஒருவர், ராஜபக்சவினருக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதும் இல்லை, ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதும் இல்லை. தேவை என்றால் எங்களுக்கு பொது மக்களை வீதிக்கு கொண்டுவர முடியும் என தெரிவித்திருந்தார்.


நாடு தற்போது சரியான திசைக்கு பயணிக்க ஆரம்பித்திருக்கும்போது ராஜபக்சவினரை பாதுகாக்க இருக்கும் இந்த படித்தவர்கள் என்ற குழுவினர், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாட்டு மக்களை பலிக்கடாவாக்க முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.


அத்துடன் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பதை ஏற்றுக்கொள்வதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த தீர்ப்பு தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரலாறு எங்களுக்கு தெரியும்.


தெரிவுக்குழு அமைத்து நாட்டில் நீதித்துறையின் உயர் பதவிக்கு கை வைத்த வரலாறு இந்த நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது. அன்று பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டுவந்து அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை சமர்ப்பித்து அவரை அந்த பதவியில் இருந்து நீக்கிய வரலாற்றை எங்களுக்கு மறக்க முடியாது.


அதனால் இந்த வாரலாற்றுக்குள் இருந்து தொடர்ந்தும் நாங்கள் செயற்படுவதென்றால் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணங்க முடியாது என்றால், அது தொடர்பில் கீழ் மட்டத்தில் இருந்து கதைத்துக்கொண்டிருக்காமல் அதனை நீதிமன்றத்துக்கு சென்று தீர்த்துக்கொள்ள வேண்டும்.


அத்துடன் யுத்தம் செய்து நாட்டை பாதுகாத்ததாக தெரிவித்தாலும் யுத்தத்துக்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்ள முடியுமாகியது, ஜேஆர். ஜனாதிபதி 77இல் ஆட்சிக்கு வந்து நாட்டில் புதிய தொழிற்சாலைகளை ஆரம்பித்து ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க எடுத்த வேலைத்திட்டங்கள் மூலமாகும்.


அதனால் ராஜபக்சவினர் யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்திக்கொண்டு செய்த விடயங்களால், தற்போது நாடு ஏற்றுக்கொண்டுள்ள நிலைப்பாடுதான் நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் ராஜபக்சவினர் பொறுப்புக்கூற வேண்டும் என்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.