முஸ்லிம் நாடுகள் முன்வருவதில்லை - ரவூப் ஹக்கீம்
பலம் வாய்ந்த எமது அயல் நாடு, பலஸ்தீனத்தில் சமாதானத்துக்காக கொண்டு வரப்பட்ட பிரேரணையை தவிர்த்து விட்டது கவலைக்குரியதென முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார்.
"போரை நிறுத்தி சுதந்திர பலஸ்தீன அரசை அமைப்போம் " என்ற தொனிப்பொருளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (14) மாலை நடைபெற்றபோது, அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மு.கா.தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இன்று காஸாவில் நாம் கண்டுகொண்டிருப்பது நவீன காலனித்துவத்தின் அடையாளமாக ஆகியுள்ளது. இந்த நவீன உலகில் பலஸ்தீனத்தைப் போன்று பல நாடுகள், ஏகாதிபத்தியங்களின் பிடிகளுக்குள் சிக்கியுள்ளன.
மீண்டும், மீண்டும் ஏகாதிபத்தியத்தின் அடையாளமாகவும்,அடிச்சுவடாகவும் மாறியுள்ள பயங்கரமான இனப்படுகொலைகளின் கோரத்தை கடந்த பல நாட்களாக காஸா தீரத்திலும்,பலஸ்தீனத்தின் இதர பிரதேசங்களிலும் தொலைகாட்சியில் நாம் பார்க்கும் இறந்த ஆண்களினதும், பெண்களிதும்,சிறுவர்களினதும் குழந்தைகளும் சிதைந்து ,சிதறிய உடல்கள் நம் அனைவரினதும் மனசாட்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இவை போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 2005ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலத்தில் அதனை Responsibility to protect (RTP)என்று சொல்வார்கள்.ருவாண்டா, பொஸ்னியாவில் போன்ற நாடுகளில் நடந்த அதிர்ச்சியூட்டிய பேரவலங்களுக்குப் பிறகு உருவான இந்தக் கருத்துகோள்(Concept) ஒட்டுமொத்த சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது.
ஓர் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட மக்கள் தொகையினர் மீது பெரும் குற்றம் இழைத்தால் அதற்கு எதிராக எந்த நாடும் போர் பிரகடணம் செய்யலாம் ;படையெடுக்கலாம் என்ற கருத்துருவாக்கம் அதற்கு வித்தியாசமான முறையில் சுயநலத்திற்காகப் பிழையாகப் பாவிக்கப்படுகிறது.சக்தி வாய்ந்த அமெரிக்கா பிரிட்டன், பிரான்ஸ் போன்றவை, குறிப்பாக ஏகாதிபத்தியங்கள், இதனைப் பாவித்து ,இஸ்ரேலுக்கு துணிச்சலைக் கொடுத்து அதைப் பாதுகாக்க முற்படுகிறார்கள்.
அவர்கள் பல நாடுகளின் தலைவர்களை கொன்றுவிட்டார்கள். லிபியாவின் கடாபியும், ஈராக்கில் சதாம் ஹுசைனும் கொல்லப்பட்டுவிட்டார்கள்.சிரியாவில் அசாத்தை கொல்ல முயற்சித்தார்கள் .அதனால் அவர்கள் தங்கள் சொந்த பொருளாதாரத்தை வளர்க்கவும், மத்திய கிழக்கில் இஸ்ரேலைக் காப்பாற்றவும் இவற்றையெல்லாம் செய்கிறார்கள். அதனால் இந்தக் கருத்துருவாக்கம் முற்றிலும் பயனற்றுப்போனது.பலஸ்தீன் விடயத்தில் சுற்றிலும் உள்ள முஸ்லிம் நாடுகள் அதை செய்ய முன்வருவதில்லை . பலம் வய்ந்த எமது அண்டை நாடும் ஐ,நா.சபையில் சமாதானத்துக்காக கொண்டு வரப்பட்ட பிரேரணையைத் தவிர்த்து விட்டது கவலைக்குரியது.
ஆனால், இவ்வாறிருக்க நம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இதுபோன்ற கொடூர கொலையாளிகளுக்கும்,அவர்கள் புரிந்து வரும் போர்க்குற்றங்களுக்கும் எதிராக அனைத்து கட்சி தலைவர்களையும் ஒன்று திரட்டிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி செலுத்துகின்றேன் சுதந்திரமான பலஸ்தீன அரசாங்கத்தை உருவாக்கி ,இந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவோமாக என்றார்.
Post a Comment